அவதாரத்தலத்தில் அருளும் ஆதவன் மைந்தன்!

கிரகம் என்ற வடமொழி வார்த்தைக்கு ஆகர்ஷிப்பது அல்லது பற்றி இழுப்பது என்று பொருள். அவ்வகையில் மனித வாழ்க்கையில் ஏற்படக்கூடிய
அவதாரத்தலத்தில் அருளும் ஆதவன் மைந்தன்!

கிரகம் என்ற வடமொழி வார்த்தைக்கு ஆகர்ஷிப்பது அல்லது பற்றி இழுப்பது என்று பொருள். அவ்வகையில் மனித வாழ்க்கையில் ஏற்படக்கூடிய சுகதுக்கங்களை கிரகித்துக் கொண்டு அவனுடைய செயலை கருமங்களை தனக்குப் பணியுமாறு செய்து மனித வர்க்கத்தை ஆட்டிப் படைக்கின்றன நவக்கிரகங்கள்.
சுருங்கக்கூறின் பூமியில் வாழும் மனிதர்களின் நன்மை தீமைகளை இந்த நவக்கிரகங்களே நிர்ணயிக்கின்றன. இந்த கிரகங்களை (கோள்களை) நாம் தினமும் வழிபட்டு வந்தால் நமக்கு ஊழ்வினைப் பயனால் ஏற்படும் பெரும் துன்பங்களின் தாக்கம் அதிகம் இல்லாமல், நன்மைகள் ஏற்படும் என்பது நமது முன்னோர்கள் காட்டியவழியாகும்.
நவக்கிரக மண்டலத்தில் சூரியனுக்கு மேற்கே அசுபக்கிரகமாய் விளங்கு
பவர் சனிபகவான். தன்னைப் பணிந்தவருக்கு அருள்புரியும் வள்ளல். சூரியனுக்குச் சாயாதேவி மூலம் பிறந்தவர். சிவபெருமானை நோக்கி கடுந்தவம் புரிந்து கிரகபதவியையும், தனது பெயருக்குப் பின்னால் ஈஸ்வரப் பட்டத்தையும் பெற்றவர். இவரை, ஆயுள்காரக கிரகம் என்று சொல்லுகிறது ஜோதிட நூல். எனவே இவரை வழிபட்டு இவருடைய அருளுக்கு உரியவரானால் நீண்ட ஆயுளை நாம் பெறலாம். மேலும் நாம் தினமும் அளிக்கும் பிண்டத்தை (சாத உருண்டை) காகத்தின் உருவில் வந்து பித்ருக்களுக்கு சேர்த்து முன்னோர்களின் ஆசி நமக்கு கிடைப்பதற்கு அருளுவதும் இவரே.
திருநள்ளாறு, திருக்கொள்ளிக்காடு என பல பிரத்யேக தலங்களில் இவர் தனி சந்நிதி கொண்டு அருளுவதுபோல் கொடியலூர் என்ற தலத்திலும் தனி சந்நிதி கொண்டுள்ளார் சனீஸ்வரபகவான். இத்தலத்தின் சிறப்பே இது சனிபகவானின் அவதாரத்தலம் என்பதே. மனிதன் உட்பட அனைத்து ஜீவராசிகளுக்கும் அவர்களுடைய பிறந்த மண், இடம் என்றால் ஒரு ஈர்ப்பு உண்டு. அவ்வகையில் தனது அவதாரத் தலத்தில் மிகுந்த மகிழ்ச்சியுடன் தனது சகோதரனாகிய எமதர்மராஜாவுடன் சேர்ந்து அருள்புரிய காத்திருக்கின்றார் சனீஸ்வரன்.
நாகை மாவட்டம், பேரளம் அருகில் உள்ளது திருமீயச்சூர். பாடல்பெற்ற தலம். இங்கிருந்து சுமார் 1 கி.மீ தூரத்தில் உள்ளது கொடியலூர். பிரிந்திருந்த தெய்வீகத் தம்பதிகள் இத்தலத்தில் ஒன்று பட்டதால் கூடியலூர் எனப் பெயர் பெற்று பின்பு மருவி நாளடைவில் கொடியலூர் ஆயிற்று என்பர். யார் அந்த தம்பதியர்?
சூரியபகவானும் அவரது தர்மபத்தினி உஷாதேவியுமே ஆவர். விதிவசத்தால் தன் கணவன் மீது கோபமுற்று அவனைவிட்டுப் பிரிந்த உஷாதேவி பூலோகம் அடைந்து பலதலங்களில் சிவபெருமானை பூஜித்து வந்தாள். கொடியலூரில் கோயில் கொண்டிருக்கும் அகஸ்தீஸ்வரர் அருளால் சூரியன் இத்தலத்தை அடைய இறைவன்
கருணையால் வாழ்க்கையில் இணைந்த இவ்விருவருக்கும் பிறந்தவர்களே எமதர்மராஜன் மற்றும் சனிபகவான் ஆவார்கள். இந்த புராண வரலாறே இத்தலத்தில் நிலவி வரும் கர்ணபரம்பரையாகக் கூறப்பட்டு வரும் தல வரலாறு ஆகும்.
அகஸ்தீஸ்வரரின் வாக்குப்படி, சனிபகவான் அவதரித்த இத்தலத்திற்கு வந்து வணங்குபவர்கள் ஏழரை, அர்த்தாஷ்டம சனி, கண்ட சனி எதுவாக இருப்பினும் கவலை இன்றி நிம்மதியாக இருக்கலாம்.
மேலும் கணவன் மனைவி இடையே ஏற்படும் பிணக்கு, பிரிவு, சஞ்சலம் எதுவாக இருந்தாலும் அவையனைத்தும் விலகி இல்லறம் நல்லறமாக அமைய இத்தலத்து ஈசனையும், ஆனந்தவல்லி அம்பிகையையும் வணங்கி பலன் பெறலாம் என்பதும், சனிபகவான் போன்று மற்றொரு தனி சந்நிதியில் ஒரு கையில் பாசக்கயிறு, மற்றொரு கையில் தண்டம் ஏந்தியிருக்கும் எமதர்மராஜரும் தம்மை வந்து வணங்கியவருக்கு அபரிமித பலன்களை நல்குகின்றார் என்பதும் இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கை.
வெளியுலகம் அதிகம் அறிந்திராத கண்ணுக்குத் தெரியாக சில சூட்சுமங்கள் நிறைந்த புராண வரலாறுகளுடன் கூடிய தலங்கள் வெகு சில. அவற்றில் ஒன்று கொடியலூர். பக்தர்கள் அவசியம் சென்று தரிசிக்க வேண்டியத்தலம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com