பெருமை மிகுந்த மகாமகப் பொய்கை!

"ஒருவர் செய்த பாவங்கள் புண்ணியத் தலங்களிலுள்ள தீர்த்தங்களில் நீராடினால் அகலும்.
பெருமை மிகுந்த மகாமகப் பொய்கை!

அந்ய க்ஷேத்ரே க்ருதம் பாபம்

புண்ய க்ஷேத்ரே விநச்யதி

புண்ய க்ஷேத்ரே க்ருதம் பாபம்

வாரணஸ்யம் கிருதபாபம்

கும்பகோணே விநச்யதி

கும்பகோணே க்ருதம் பாபம்

கும்பகோணே விநச்யதி

"ஒருவர் செய்த பாவங்கள் புண்ணியத் தலங்களிலுள்ள தீர்த்தங்களில் நீராடினால் அகலும். அப்புண்ணியத் தலங்களுள் வாழ்வோர் செய்த பாவங்கள் காசியிலுள்ள கங்கையில் நீராடினால் அகலும். காசியிலுள்ளோர் செய்த பாவங்கள் கும்பகோணத் தீர்த்தத்தில் நீராடினால் விலகும். கும்பகோணத்திலுள்ளவர் செய்த பாவங்கள் கும்பகோணத்தில் உள்ள தீர்த்தத்தில் நீராடினால் தான் அகலும்' என வடமொழி நூல் ஒன்று வலியுறுத்திக் கூறுகிறது.

கும்பகோணத்திலுள்ள தீர்த்தம் மகாமக தீர்த்தம். அமுதத்தின் ஒரு பகுதி இங்குத் தீர்த்தமானதால் "அமுத தீர்த்தம்' எனவும் இத்தீர்த்தத்தினால் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து ஆராதித்ததால் "பிரம்ம தீர்த்தம்' எனவும் பெயர் பெற்றது. மகாமகப் பெருவிழா வடபுலத்தில் நிகழும் கும்பமேளாவைப் போன்று பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வருகிறது. இதன் பெருமையை,

"பூமருவும் கங்கைமுதற் புனிதமாம் பெருந்தீர்த்தம்

மாமகந்தான் ஆடுதற்கு வந்துவழி படுங்கோயில்'

என சேக்கிழார் சிறப்பிக்கின்றார்.

திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள்,

"பன்னிரு வருடந்தொரு முறைபகரும் பண்பமர்

மடங்களில் துலங்கும்

மன்னிய நல்லாண் டளப்பவன் முறையா

வந்திடும்போது வானவரோ

டன்னிய மில்லா வயனுமே போந்திங்

கழகுறச் செய்விழாக் காண

முன்னிய பேறு பெறவருள் குடந்தை முதல்வி'

- என்று மகாமகப் மாண்பினையே மணக்க வழங்குகிறார். மேலும் úக்ஷத்திரக் கோவை பிள்ளைத் தமிழ்,

"மாநதிகளாங் கோடி தோழியர்களுடன் வரு

மகாமக தீர்த்த மென்னும்

தடந்தந்த புகழ்சேர்

குடந்தை மாநகர்'

எனப் பகர்கின்றது.

ஒரு சமயம், கங்கை, யமுனை, நர்மதை, சரஸ்வதி, கோதாவரி, பொன்னி, துங்கபத்திரா, சரயு, கிருஷ்ணா என்ற பெயர் பெற்ற நதிகள் வடிவமான கன்னியர் ஒன்பதின்மரும் ஒன்று சேர்ந்து, உலகத்தார் தங்களிடத்தில் நீராடி தங்கள்பால் கழுவிச் செல்லுகின்ற பாவங்களைத் தங்களால் தாங்க முடியாத காரணத்தால் அவைகளினின்று நீங்கி உய்யும் வழியொன்று கண்டுபிடிக்க விரும்பினார்கள். கைலாய மலையை அடைந்து தம் குறையை தீர்த்துக் கொள்ள விரும்பினார்கள்.

பின்னர், கையிலாய மலையை அடைந்து பரமசிவனை வணங்கித் துதித்து தங்கள் குறைகளைச் சொல்லி தங்கள் பால் அடைந்த பாவங்களைப் போக்கிக் கொள்ள அருள்பாலிக்க வேண்டுமென கேட்டனர். சிவபெருமான் அவர்களை நோக்கிக் கவலை வேண்டாம் எனக்கூறி, பின்வருமாறு செய்யப்பணித்தார்.

""கன்னியர்காள்! தென்திசையில் கும்பகோணம் எனப் பெரிய தலம் ஒன்று உள்ளது. அதன் தென் கீழ்த்திசையில் ஒரு தீர்த்தம் உல்ளது. அந்தத்தீர்த்தம் தேவகுருவாகிய பிரகஸ்பதி சிம்மராசியில் பொருந்தும் மாசி மாதத்தில் பௌர்ணமியும் மக நட்சத்திரமும் கூடிய நாளிலே நீங்கள் சென்று மூழ்குவீர் ஆயின் உங்கள் பாவம் எல்லாம் தொலைந்து போகும். அந்நாளே மகாமக நாளாகும்'' என்று கூறியருளினார்.

கன்னியர்கள் தங்களுக்கு அத்தலம் செல்ல வழி தெரியாது என்று கூற, சிவபெருமானே தான் அழைத்துச் செல்வதாகக் கூறி, அவர்களை அழைத்துக்கொண்டு கும்பகோணம் அடைந்தார்.

"பண்டை காலந்தொட்டு அமுத கும்பத்தில் விளங்கிவரும் தலம் இதுவே என்றும் அந்த லிங்கமே "அமுத கும்பேசர்' என்னும் திருநாமத்துடன் விளங்கி வருகிறது. அந்த லிங்கத்திற்கு நேர்கிழக்கில் பொற்றாமரையில் அமைந்துள்ள தீர்த்தத்தில் மூழ்க வேண்டும். கீழ்க்கரையில் லிங்கம் அமைந்துள்ள இடமே அமுதகுடம் வைக்கப்பட்டிருந்த இடம்! அமுதகுடம் உடையுமாறு அம்பு விட்ட இடம் "பாணபுரி', அமுதகுடத்திலிருந்து கீழே விழுந்த வில்வத்திலிருந்து தோன்றிய லிங்கம் "பாதாள லிங்கேசர்' ஆகும்' என்று கூறி, இத்திருமேனிகளைத் தரிசிக்கும்படி அருளினார்.

பின்னர் தென்கிழக்கு திசையிலுள்ள அமுதவாவி அடைந்து அங்கு நாரிகேளம் விழுந்த இடத்தில் தோன்றிய லிங்கம், மேற்குத் திசை நோக்கியிருப்பதற்கு காரணத்தையும் கூறினார். "தாம் முன்னதாக "நாரிகேள' (தென்னை) மரத்தடியில் தோன்றி பின் இத்தடாகம் நோக்கி அபிமுகமாக (நேர்முகமாக) காட்சியளிப்பதால் "அபிமுகேசர்' என்னும் திருநாமம் உண்டாயிற்று. பின்னர், உபவீதம் (பூணூல்) விழுந்த இடத்தில் "உபவித நாதர்' என தெரிவித்து, அமுத வாவியின் வடகரையில் மேற்குமுகமாக சிவலிங்க வடிவில் காட்சி நல்கினார். அந்த ஒன்பது கன்னியரும் அந்த வாவியைப் பார்த்தவாறு அத்திருக்கோயிலில் தெற்குநோக்கி எழுந்தருளினர். அப்போது தேவர்கள் பூமாரி பொழிந்தனர். அதுவே காசி விசுவநாதர் திருக்கோயிலாக விளங்குகிறது. இன்றைக்கும் அந்த ஒன்பது கன்னியரை சிலை வடிவில் இங்கு தரிசிக்கலாம்.

மகாமகக் குளத்தின் படிகட்டுகளின் மீது பதினாறு மண்டபங்களும் ஒவ்வொரு மண்டபத்திலும் ஒரு சிறு கோயிலும் கட்டப்பட்டு சிவலிங்கமும் பிரதிஷ்டை செய்யப்பெற்றுள்ளது. அவை:

ப்பிரம்மதீர்த்தேஸ்வரர், ப்முகுந்தேஸ்வரர், ப்தளேஸ்வரர், ப்விருஷபேஸ்வரர், ப்பரனேஸ்வரர், ப்கோனேஸ்வரர், ப்பக்திஹேஸ்வரர், ப்பைரவேஸ்வரர், ப்அகத்தீஸ்வரர், ப்வியாசேஸ்வரர், ப்உமைபாகேஸ்வரர், ப்நைருதீஸ்வரர், ப்பிர்மேஸ்வரர், ப்கங்காதரேஸ்வரர், ப்முக்ததீர்த்தேஸ்வரர், ப்úக்ஷத்திரபாலேஸ்வரர் -ஆகும்.

இத்தீர்த்தத்தின் வடமேற்குப் படிக்கட்டுகளின் மேல் அழகிய பதினாறு கால் மண்டபம் ஒன்று உள்ளது. இம்மண்டபம் தஞ்சை நாயக்க மன்னர் அச்சுதப்பரின் அமைச்சராக விளங்கிய கோவிந்த தீட்சதரால் கட்டப்பட்டதாகும். அவர் இம்மண்டபத்தில் துலாபாரம் ஏறி தானம் கொடுத்துள்ளார். இதனை நினைவு கூறும்வகையில் மண்டபத்தின் மேல் விதானத்தில் நினைவுச் சின்னம் காணப்படுகிறது.

விஜயநகர மன்னர் கிருஷ்ண தேவராயர், குடந்தையில் மகாமக விழாவினை நடத்திப் பேரருளும் பெருவாழ்வும் பெற்றார் என்பது வரலாறு.

வாரியார் சுவாமிகள்,

"மாசில் குடந்தையில் மகாமகப் பொய்கையில்

மாசிமகத் தாடி மகிழ்வோர்கள்- காசினியில்

எல்லா நலன்களும் எய்தியே இன்புறுவர்

பல்லாண்டு வாழ்வரருட் பண்பு'

என்று பாடியுள்ளார்.

நூற்றியொரு தலைமுறைக்கு நன்மை தரும் தீர்த்தம்!

ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் மகாமகம் என்றாலே கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில்தான் நினைவுக்கு வரும். ஆனால் மகாமகம் கும்பகோணத்தில் மட்டுமே நடக்கும் விழா அல்ல. அது இன்னும் பல தலங்களில் சிறப்பாக நடைபெறுகின்றது. மகாமக திருவிழா நடக்கும் தலங்களில் ஒன்று பெரம்பலூர் அருகே உள்ள குன்னம். இத்தலத்திலும் மாசிமக விழா மிகச்சிறப்பாக நடைபெறுகிறது.

சதுர் யுகங்களில் கடைசியாக விளங்கும் கலியுகத்தில் சிருஷ்டி கர்த்தாவான பிரம்மதேவன், ""ஊழிப்பிரளயம் வரும்போது சர்வ ஜீவராசிகளும் நான்கு வேதங்களும் சிருஷ்டி பீஜமும் அழிந்து விடும். அதனால் அவற்றை மீண்டும் சிருஷ்டிக்க இயலாது'' என்று சிவனிடம் கூறினார்.

அதற்கு சிவபெருமான், ""உலகில் உள்ள திருத்தலங்களில் இருந்து மண்ணை திரட்டி வந்து தேவாமிர்தத்தை விட்டுப் பிசைந்து ஒரு கலசம் (குடம்) செய்து அதை அமிர்தத்தால் நிரப்பி, சிருஷ்டி பீஜம், வேதங்கள், ஆகமங்கள், புராணங்கள், இதிகாசங்கள் ஆகியவற்றை அதில் இட்டு, தேங்காய், வில்வம் முதலியவற்றால் மூடி, பூணூல் சூட்டி, மேருமலையின் தென்பாகத்தில் ஸ்தாபனம் செய்வாயாக! பிரளய காலத்தில் நான் வேண்டியதைச் செய்கிறேன்'' என்று கூறினார். ஊழிப்பிரளயம் உற்பத்தியானது. எங்கு நோக்கினும் அங்கெல்லாம் காற்றும் வெள்ளமுமாய் மிரட்டின. பிரம்மன் மேருமலை உச்சியில் வைத்த கலசம் தெற்கு முகமாக வெள்ளத்தில் மிதந்து வந்து ஓரிடத்தில் நின்றது.

அதுசமயம், சிவபெருமான் வேடன் உருக்கொண்டு "மத்தியார்ஜுனம்' என்று அழைக்கப்படும் திருவிடைமருதூரில் எழுந்தருளி, அங்கிருந்து குடந்தை நோக்கி ஓர் அம்பி எய்தினார்.

குறி தவறவே மறு அடி எடுத்து வைத்து கும்பகோணத்தில் பாணபுரீஸ்வரர் ஆலயத்தை நோக்கி மற்றொரு அம்பை எய்தினார். குடத்தின் வாய் சிதைந்து அமுதம் வெளிப்பட்டது. மேலும் குடத்தின் கூறு ஒன்று "குன்னம்' என்னும் திருத்தலத்தில் விழுந்தது. குடத்திலுள்ள அமிர்தச்சிதறல் பட்டே மகாமகக்குளம் தோன்றியதாகச் சொல்லப்படுகிறது.

இந்த மகாமகக் குளத்தை ஒருமுறை வலம்வந்தால் நூற்றியொரு முறை அங்கப்பிரதட்சணம் செய்த புண்ணியப் பலன்கள் கிடைக்கும். ஒருமுறை குளத்தில் மூழ்கி எழுந்தால் நூறு வருடங்கள் கங்கையில் நீராடிய புண்ணிய பலன் கிடைக்கும்.

பஞ்ச குரோச தலங்கள்

அமுதம் நிறைந்த குடம் சிவபெருமான் திருவருளால் சிதைந்து அதிலுள்ள அமுதம் நாலாபக்கங்களிலும் பரவி ஐந்து குரோசம் வரையில் சென்று செழுமையாக்கியதால் பஞ்ச குரோச தலங்கள் சிறப்புற்றன. அவை திருவிடை மருதூர், திருநாகேஸ்வரம், திருத்தாரேஸ்வரம் (தாராசுரம்), திருவேரகம் (சுவாமி மலை), திருப்பாடலவனம் என்னும் கருப்பூர் என்பன.

ஒரு குரோசம் என்பது இரண்டரை நாழிகையில் கடந்து செல்லக் கூடிய தூரம் என்பர். கும்பகோணத்திற்கு யாத்திரை செல்வோர் இந்த பஞ்ச குரோச தலங்களுக்குச் சென்று விதிப்படி நீராடித் தரிசித்து ஒவ்வோர் பகல் வழிபட்ட பிறகே கும்பகோணம் செல்ல வேண்டும். வேதங்களுக்கு அங்கமாகப் பல நூல்கள் அமைந்தது போல கும்பகோணத்திற்கு அங்கமாக இந்த ஐந்து தலங்களும் அமைந்தன.

கற்றவர் புகழும் கும்பகோணத்தைக் கலந்து போற்றும்

பெற்றியரைங் குரோசயாத்திரை பேணல் வேண்டும்

உற்றவத் தல மோரைந்துள் ஒவ்வொன்று ளொரு நான்மேவிற்

பெற்ற புண்ணியம் பயக்கும் என்மனார் புலமை சான்றோர்

- திருக்குடந்தைப் புராணம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com