தெய்வீக அனுபவங்களை அள்ளித் தரும் அத்திரி மலை!

அத்திரி முனிவர், ரிஷிகளுக்கு முன்னோடியாக விளங்கியவர். இவர், சிருஷ்டி கர்த்தாவான பிரம்ம தேவரின் மானஸ புத்திரர்!
தெய்வீக அனுபவங்களை அள்ளித் தரும் அத்திரி மலை!

அத்திரி முனிவர், ரிஷிகளுக்கு முன்னோடியாக விளங்கியவர். இவர், சிருஷ்டி கர்த்தாவான பிரம்ம தேவரின் மானஸ புத்திரர்! அத்திரி முனிவரின் மனைவி அனுசுயா. பதிவிரதையான அனுசுயா தேவி -அத்திரி மகரிஷி தம்பதியைப் பற்றி ராமாயணத்தில் உயர்வாகப் பேசப்பட்டுள்ளது. 

சித்திரகூட பர்வதத்திலிருந்து காட்டிற்குள் சென்ற ராமபிரானும் சீதையும் அத்திரி முனிவரின் ஆசிரமத்தில் ஒருநாள் தங்கினர். அப்போது ராமசீதா தம்பதிகளிடம் அத்திரி முனிவர் தம் மனைவி அனுசுயாவை காட்டி, ""ராமா அனுசுயா கோபம் என்பதையே அறியாதவள். அசூயை என்னும் சொல்லுக்கு "மனதில் சிறிதும் விருப்பம் இல்லாதவள்' எனப்பொருள். இவள் மண்ணுயிர்கள் எல்லாம் போற்றி வணங்கும் பெருமை கொண்ட குணவதி. பதிவிரதா தர்மத்தில் தலை சிறந்தவள். தர்மமும் புண்ணியமும் நிறைந்த அனுசூயாவிடம் ஆசிப் பெறுவீர்களாக'' என்று சொன்னார்.

ஒரு சந்தர்ப்பத்தில் நாட்டில் மழையே பெய்யவில்லை. தொடர்ந்து பத்து ஆண்டுகளாக வறட்சி நிலவியது. வாயில்லா ஜீவன்களுக்கு பசும்புல்கூட கிடைக்கவில்லை. இந்தக் காட்சியைக் கண்ட அனுசுயாவிற்கு உள்ளம் உருகியது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தான் செய்த தவசக்தியால் கங்கையை வரவழைத்தாள். எல்லா குளங்களையும் நிறைத்தாள். தண்ணீர் பெற்று பயிர்கள் செழித்து வளர்ந்தன. எங்கும் பசுமை உண்டானதைக் கண்டு மகிழ்ந்தாள். ஒருமுறை அனுசுயாவின் தோழியை சந்தப்பவசத்தால் ஒரு முனிவர் "விடிந்தால் நீ விதவையாவாய்' என்று சபித்துவிட்டார். அப்பெண் அனுசுயாவிடம் ஓடிவந்து தகவல் சொல்லி அழுதாள். "யார் சாபம் இடுகிறார்களோ, அவர்களே சாபநிவர்த்தியும் அளிக்க வேண்டும்' ஆனால் அனுசுயா சொன்னாள் "விடிந்தால் தானே விதவையாவாய்? இனி விடியலே இல்லாமல் செய்துவிடுகிறேன்' என்று ஆறுதல் கூறினாள். ஒருநாள் இருநாள் அல்ல. பத்து நாள்கள் விடியாமல் இரவாகவே கழிந்தது. தேவர்கள் கூடினர். அனுசுயாவிடம் வேண்டிக் கொண்டனர். மீண்டும் பகல்வேளை வரவேண்டுமானால் என் தோழி சுமங்கலியாக வாழ வேண்டும் என்று நிபந்தனை இட்டாள் அனுசுயாதேவி. அதேபோல் தோழியை காப்பாற்றவும் செய்தாள்.

ஒருமுறை அசுரர்களில் ஒருவரான ஸ்வர்பானு தன்னைக் காட்டிக்கொடுத்த சூரியதேவன் மீது கோபம் கொண்டான். இவனே கிரகங்களில் நிழல் கிரகங்களான ராகு கேதுவாக மாறினான். தன் பகையை தீர்த்துக் கொள்ள எண்ணியவன் சூரியனைக் கிரகணமாகப் பிடித்தான். ராகுவின் பாதிப்புக்கு உள்ளாகி ஒளியை இழந்து தவித்த சூரியனுக்கு மீண்டும் ஒளி கொடுத்து காப்பாற்றியவர் அத்திரி மகரிஷி.

ஜோதிடம், ஆயுர்வேதம், வைத்திய சாஸ்திரங்களில் கைதேர்ந்தவரான அத்திரி முனிவர் அனுசுயா தேவியுடன் அத்திரி மலையில் பல ஆண்டுகளாக தவம் செய்திருக்கிறார். மேலும் அவர்களிருவரும்  இன்றும் இங்கு வாழ்வதாக ஐதீகம்! மேலும் அத்திரி மகரிஷியின் சீடர் கோரக்கர்,  கொங்கணர், குதம்பைசித்தர், மச்சமுனி, அழுகண்ணர், பாம்பாட்டி சித்தர், கருவூரார், பதஞ்சலி ஆகியோர் தவம் மேற்கொண்ட சிறப்புடையது. இங்கு அத்திரி மகரிஷி மற்றும் கோரக்கர் ஆகியோரின் கோயில்கள் அமைந்துள்ளன. உமாதேவி லிங்க வடிவில் சிவனோடு அமர்ந்து அருள்பாலிப்பது இத்தலத்தின் சிறப்பாகும். பார்வதி தேவி கல்யாணி என்ற திருநாமத்தோடு இந்த அத்திரி மலைக்கு இறைவனின் உடம்பில் பாதி இடம் கேட்டு தவமிருக்க, அத்திரி மகரிஷியோடும் அனுசுயா தேவியோடும் இருந்திட்ட ஒப்பற்ற தலமாகும். 

சிறப்புகள் பெற்ற அத்திரி மலையில் சித்தர்கள் பலருக்கு பல தெய்வீக அனுபவங்கள் கிடைத்திருக்கின்றன. உள்முகமாக ஆன்மிகத் தேடல் உள்ளவர்களுக்கு இந்த மலை பல ஆன்மிக விளக்கங்களை சூட்சுமமாக பல நூற்றாண்டுகளாக விளக்கிக்கொண்டே இருக்கிறது. இம்மலைக் கோயிலுக்கு வருபவர்கள் வனத்துறையின் அனுமதி பெற்று வருவது நல்லது.திருமணம் ஆகாதோருக்கு, இத்தலத்து முருகப்பெருமானுக்கு சந்தன அபிஷேகம் செய்து அந்த சந்தனத்தினை முருகப் பெருமானின் மார்பில் வைத்து விடிய விடிய பூஜித்து மறுநாள் காலையில் அதை பிரசாதமாக தருவார்கள். இதனால் விரைவில் திருமணம் நிச்சமாகிவிடும் என்பர். 

நெல்லை மாவட்டம், ஆழ்வார் குறிச்சியிலிருந்து 8 கி.மீ. தொலைவிலுள்ள சிவசைலம் என்னும் தலத்தில் கடனாநதிக்கு அருகில் இவ்வாலயம் அமைந்துள்ளது.
- களக்காடு வ. மாரிசுப்பிரமணியன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com