24 ஆலயங்களில் கருட மகோத்சவம்!

நீர்வளமும், நிலவளமும் நிறைந்து பக்தி நெறியில் அருள்வளம் பெற்றுத் திகழும் தஞ்சாவூரில் வைகாசி (ஆனி) திங்களில் நடைபெற்று வரும்
24 ஆலயங்களில் கருட மகோத்சவம்!

நீர்வளமும், நிலவளமும் நிறைந்து பக்தி நெறியில் அருள்வளம் பெற்றுத் திகழும் தஞ்சாவூரில் வைகாசி (ஆனி) திங்களில் நடைபெற்று வரும் "கருட மகோத்சவ வைபவம்', பெருமாளின் பேரருளால் சிறப்புறக் கொண்டாடப்பட்டு வருகிறது.

தல வரலாறு, விழாவின் நோக்கம்: பிரம்மாண்ட புராணம், பத்ம புராணம். (விஷ்ணு புராணம்) சமிவன மகாத்மியம், சோழ மண்டலச் சதகம், பிரகதீசுவர மகாத்மியம் முதலிய நூல்கள், இத்தல வைபவத்தைப் பற்றிப் பேசுகின்றன.

அடர்ந்த சோலைகள் சூழ்ந்த விசாலமான தஞ்சாவூர் தலம், முனிச்சிரேஷ்டரான ஸ்ரீபராசுர மகரிஷியை மிகவும் கவர்ந்தது. தம் சீடர்களுடன் இத்தலத்தில் தங்கிட தவம் செய்து வந்தார். தேவலோகத்தில் தான் பெற்ற அமுதத்தைத் தன் குடிலுக்கு அருகில் இருந்த புஷ்கரணியில் கரைத்து விட்டார். இந்த அமுத புஷ்கரணியால் அந்த இடமே மிகவும் செழித்தது. சகல உயிர்களும் நோயின்றிப் பருத்துக்
கொழுத்தன.

இந்நிலையில், வடக்கில் தண்டகாரண்யம் மழையின்றி வறண்டது. அங்கிருந்த தஞ்சகாசுரன் முதலான அரக்கர்கள் தென்திசை நோக்கி வந்து, வானளாவிய சோலைகள் சூழ்ந்த இத்தலத்தில் குடியேறி, தவம் செய்யும் முனிவர்களுக்கு இடையறாது தொல்லைகள் தந்தனர்.

ஸ்ரீ பராசர மகரிஷி, பிர்மா, சக்திதேவி இவர்களை அணுகியும் அசுர பயம் நீங்காததால், ஸ்ரீமந்நாராயணனைக் குறித்து தவம் செய்தார். பக்தவத்சலனான பகவான் முதலில் ஸ்ரீ நீலமேகமாக அமிர்த புஷ்கரணி நீரைப்பருகிப் பின், நீலமேக, மணிகுன்ற, சிங்கப்பெருமாளாக அவதாரம் செய்து, அரக்கர்களைக் கொன்று முனிவர்களைக் காப்பாற்றி, ஸ்ரீ பராசர மகரிஷியின் வேண்டுக்கோளுக்கிணங்க ஸ்ரீமந்நாராயணன் இத்தலத்திலேயே ஸ்ரீ நீலமேக, ஸ்ரீமணிகுன்ற, ஸ்ரீ சிங்கபெருமாளாய் இன்றும் எழுந்தருளிச் சேவை சாதிக்கிறார். (தஞ்சையிலுள்ள மூன்று வைணவ திவ்ய தேசங்கள் எனப்படும் தஞ்சை மாமணிக்கோயில், மணிக்குன்றம், தஞ்சையாளிநகர் இவைகளே).

அசுரர்களைக் கொன்று கருட வாகனத்தில் கோதாதேவியுடன் காட்சி கொடுத்த வைகாசித் திருவோண நாளை அக்காலத்திலேயே விழாவாகக் கொண்டாடினார்கள். நடுவில் நின்றுபோன இவ்விழாவினை, 1934 இல் ஸ்ரீ ராமானுஜ தர்சன சபை என்ற அமைப்பு ஆன்மிக அன்பர்கள் ஏற்பாட்டின்படி, இதன் மகத்துவத்தை எல்லோரும் அறிய வேண்டும் என்ற குறிக்கோளுடன், மீண்டும் தொடங்கி நடத்த ஆரம்பித்தனர்.

அவ்வகையில் இவ்வாண்டு தொடர்ந்து 83 ஆம் ஆண்டு விழாவாக ஜூன் 14 தொடங்கி 17 வரை நடைபெறுகின்றது. ஜூன் 15 ஆம் தேதி மூன்று திவ்யதேச பெருமாள் ஆலயம் உட்பட 24 ஆலயங்களிலிருந்து கருட வாகனத்தில் அந்தந்த ஆலயங்களில் அருள்புரியும் பெருமாள் உற்சவ திருமேனிகள் அலங்காரத்துடன் எழுந்தருளி வெண்ணாற்றங்கரையிலிருந்து புறப்பட்டு தஞ்சை கீழராஜவீதி, தெற்கு ராஜவீதி, மேலராஜவீதி, வடக்கு ராஜவீதிகளில் சேவை தந்தருளுவர். தொடர்ந்து ஜூன் 16 ஆம் தேதி நவநீத சேவையும், ஜூன் 17 விடையாற்றி உற்சவமும் நடைபெறுகின்றன.

தமிழ்நாட்டில் எல்லா பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் ஆர்வத்துடன் தங்கள் குடும்பத்தினருடன் வந்து பெருமாள்களை சேவித்துச் செல்வர். இந்த 24 கருடசேவை வேற எந்த இடத்திலும் காணமுடியாது.

விழா ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம், பூரண ஒத்துழைப்புடன் ஸ்ரீ ராமானுஜ தர்சன சபையினர் செய்கிறார்கள்.

தொடர்புக்கு: 04362-230473.

- முனைவர் ஏ. வீரராகவன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com