பிரார்த்தனைகளை நிறைவேற்றும் உஜ்ஜயினி மாகாளி! 

உஜ்ஜயினி மகாகாளியம்மன் கோயில் தஞ்சாவூர் நகரில் கீழவாசல் பகுதியில் வெள்ளைபிள்ளையார் கோயிலிருந்து சிறிது தூரத்தில் அமைந்துள்ளது
பிரார்த்தனைகளை நிறைவேற்றும் உஜ்ஜயினி மாகாளி! 

உஜ்ஜயினி மகாகாளியம்மன் கோயில் தஞ்சாவூர் நகரில் கீழவாசல் பகுதியில் வெள்ளைபிள்ளையார் கோயிலிருந்து சிறிது தூரத்தில் அமைந்துள்ளது. பெருமுயற்சி எடுத்து உள்ளூர் பொதுமக்கள் குழுக்கள் அமைத்து வசூலித்து சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னர் இக்கோயிலைக் கட்டினர். 1989 -இல் இக்கோயிலின் முதல் குடமுழுக்கும்; 2008 -இல் இரண்டாவது குடமுழுக்கும் நடைபெற்றன.
 இக்கோயிலில் உள்ள அம்மனைப் பற்றி வாய்மொழியாக பல கதைகள் கூறுகின்றனர். வணிக நோக்கில் வெளியூரிலிருந்து தஞ்சாவூருக்கு ஒரு குடும்பத்தார் வண்டி கட்டிக்கொண்டு வந்துள்ளனர். அவ்வாறு வரும்போது அவர்களுடன் பத்து வயது மதிக்கத்தக்க சிறுமியும் அவளுடைய அண்ணனும் இருந்தார்கள். தற்போது கோயில் அமைந்திருக்கும் இடத்தின் அருகே ஒரு குடிசையில் அவர்கள் தங்கியிருந்தனர். அனைவரும் வெளியில் சென்றிருந்தபோது சிறுமி மட்டும் வீட்டில் இருந்தாள். வெளியே சென்றவர்கள் திரும்பிய சமயம் வீட்டின் கதவு உள்ளே தாழிடப்பட்டிருந்தது. வெளியிலுள்ளோர் அழைத்தும் கதவு திறக்காமல் இருப்பதைப் பார்த்து அவளுடைய அண்ணனும் அருகிலுள்ளோரும் கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது அதிர்ச்சியடைந்தனர். அந்தச் சிறுமி அங்கு ஒரு சிலையாகக் காட்சியளித்தாள். உடனே ஊர் மக்கள் ஒன்றுசேர்ந்து ஒரு பூடம் (சிறு பெண் தெய்வம் வசிப்பதற்காகக் கட்டப்பட்ட இடம்) அமைத்து வழிபட ஆரம்பித்தனர்.
 இக்கோயிலில் உள்ள அம்மன் மிகுந்த சக்தி வாய்ந்தவளாகவும் மக்களின் வேண்டுதலை நிறைவேற்றக்கூடியவள். நம்பிக்கையோடு வரும் பக்தர்களின் குறைகளை அம்மன் தீர்த்துவைக்கின்றாள். விழாக்களின்போது அதிக எண்ணிக்கையில் முளைப்பாரி எடுத்தல், அக்னி சட்டி எடுத்தல், பால் குடம் தூக்குதல், பொங்கல் வைத்தல், மொட்டையடித்தல், காது குத்துதல் போன்ற நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுகின்றார்கள்.
 இக்கோயில் நுழைவாயிலில் நுழைந்து உள்ளே செல்லும்போது மூலவர் கருவறைக்கு முன்பாக பலி பீடம், கொடி மரம், சிங்கம், சூலம் ஆகியவை உள்ளன. கோயிலைச் சுற்றி வரும்போது ஏனாதிநாத நாயனார், சிவதுர்க்கை, கல்யாண கணபதி, அய்யப்பன், அனுமன் ஆகியோரைக் காணலாம். திருச்சுற்றில் உள்ள வேப்ப மரத்தின் அருகே நாகர்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். அடுத்து நவக்கிரகங்கள் உள்ளன.
 மூலவர் சந்நிதியில் அம்மன் அமர்ந்த கோலத்தில் சாந்த சொரூபியாக கிழக்கு பார்த்த நிலையில் காட்சி தருகிறார். மூலவர் சந்நிதியின் இரு புறமும் செல்வ விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் அமைந்துள்ளனர்.
 பக்தர்களின் பிரார்த்தனைகளைத் தீர்த்துவைத்து வாழ்வில் நம்பிக்கை ஒளியேற்றிவைக்கிறாள் உஜ்ஜயினி மாகாளியம்மன்.
 -ஜ. பாக்கியவதி
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com