காஞ்சி கருட சேவை!

காஞ்சி கருட சேவை!

"நகரேஷி காஞ்சி' அதாவது, நகரங்களில் சிறந்தது காஞ்சிமா நகரம் என்று மகாகவி காளிதாசனால் சிறப்பிக்கப் பெற்றது காஞ்சி மாநகரம். " கல்வியில் கரையில்லா காஞ்சி' என்கிறார் திருநாவுக்கரசர்.

"நகரேஷி காஞ்சி' அதாவது, நகரங்களில் சிறந்தது காஞ்சிமா நகரம் என்று மகாகவி காளிதாசனால் சிறப்பிக்கப் பெற்றது காஞ்சி மாநகரம். " கல்வியில் கரையில்லா காஞ்சி' என்கிறார் திருநாவுக்கரசர். சேக்கிழார் பெருமான், "சீர் வளரும் மதிற் கச்சி', " மதில் கொண்டளித்த காஞ்சி', என்றெல்லாம் சிறப்பிக்கிறார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக காஞ்சிமாநகர், தமிழ் நாட்டு சமயம், கலை, பண்பாடுகளில் உன்னதமான இடம் பெற்றுள்ளது.
காஞ்சிபுரத்தில் மூன்று காஞ்சிகள் உள்ளன. பெரிய காஞ்சிபுரத்தை "சிவகாஞ்சி' என்றும் சின்ன காஞ்சிபுரத்தை "விஷ்ணு காஞ்சி' என்றும் சமணர்களின் காஞ்சியை "ஜைன காஞ்சி' என்றும் கூறுகிறார்கள். இவற்றுள் விஷ்ணு காஞ்சியில் அமைந்துள்ள வரதராஜப் பெருமாள் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாகும். சுவாமி பத்தடி உயரத்தில் நின்ற திருக்கோலத்தில் சங்கு, சக்கர, அபய, வரதம் காட்டி சேவை சாதிக்கிறார். வரதராஜப் பெருமாளின் துணைவியாக இங்கே எழுந்தருளியிருப்பது பெருந்தேவித் தாயார்.
இங்கு, "கருடசேவை' வருடத்துக்கு மூன்று முறை அதாவது வைகாசி பிரம்மோற்சவம், ஆனி மாதம், சுவாதி நட்சத்திரம் கூடிய பெரியாழ்வார் சாற்றுமுறை, ஆடிமாதம் பௌர்ணமி கஜேந்திர மோட்சம் ஆகிய வைபவங்களின்போது சிறப்பாக நடைபெறுகிறது.
காஞ்சி மாநகரம், "விழா அறாக் காஞ்சி' என்ற புகழைப் பெற்றது. ஆண்டு முழுவதும் பல விழாக்கள் நடந்தவண்ணம் இருக்கின்றன. அவற்றுள் பிரசித்தி பெற்றது "கருட சேவை' ஆகும். பல நூற்றாண்டுகளாக காஞ்சி வரதர் கருட சேவை சிறப்பாக நடைபெற்று வருவதை வரலாற்றுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
கி.பி. 15 -ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சிலேடைப் புலவர் கவி காளமேகம் காஞ்சி மாநகரில் நடைபெறும் கருட சேவையை கண்டு தரிசிக்கும் பேறு பெற்றார். அப்போது புலவர், காஞ்சியில் கருட சேவையின்போது ஒளிமிக்க கருடன் மீது சுடர்விட்டுப் பிரகாசிக்கும் பொன்வண்ணத் திருமேனியில் வரதராஜப் பெருமாள் ஆடை அணிமணிகள் பூண்டு கம்பீரமான திருக்கோலத்தில் திருவீதி உலாவைக் கண்டு பெருமாளை வணங்கி பாடலொன்றையும் பாடியுள்ளார். கவிகாளமேகப் புலவர் வாழ்ந்தபோது, சமகாலப் புலவரான "காஞ்சிபுரம் அம்மைச்சி' என்ற பெண் பாற்புலவர் தம் அனுபவத்தையும் வரலாற்றில் பதிவு செய்துள்ளார்.
காஞ்சிபுரம் அத்திவரதர் கோயிலில் வைகாசி விசாகத்தில் நடைபெறும் கருடோற்சவமும் ஏழாம் நாள் நடக்கும் தேர்த் திருவிழாவும் மிகச் சிறப்புடையவை. இந்த வரதரின் தேர் ஒரு தடவை, காஞ்சிபுரத்து அம்மைச்சி என்கிற பெண்பாற் புலவர் வீட்டருகில் வரும்போது திசைமாறி வேகமெடுத்து அவர் வீட்டையே இடித்துத் தள்ளிவிடுவது போல் வந்து விட்டது. அதைக் கண்டு சினம் கொண்ட அம்மை, அப்போது ஒரு பாடலைப் பாடினார். இந்த பாடலைக் கேட்டதும் வேகமாக வந்த தேர் அப்பால் விலகிச் சென்று விட்டதாகச் சொல்வர்.
ஆங்கிலேயர் காலத்தில் ஆற்காடு யுத்தத்தில் நோய்வாய்ப்பட்ட ராபர்ட் கிளைவ் ஸ்ரீவரதரின் துளசி தீர்த்தம் பருகி நோய் நீங்கப் பெற்றதாகவும் அதற்கு நன்றி செய்யும்விதமாக கழுத்தில் அணியும் மகர கண்டி ஒன்றை வரதராஜப் பெருமாளுக்குக் காணிக்கையாகச் சமர்ப்பித்துள்ளார்.
கி.பி. 19 -ஆம் நூற்றாண்டில் காஞ்சிபுரம் பகுதியை ஆட்சிபுரிந்த ஆங்கிலேய அதிகாரி பிளேஸ் துரை, காஞ்சி வரதர் கருடசேவையை கண்டு தரிசித்து மனம் மகிழ்ந்து வரதருக்கு தலையில் அணியும் விலையுயர்ந்த தங்க ஆபரணம் ஒன்றை காணிக்கையாகத் தந்துள்ளார்.
திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார், கூரத்தாழ்வார், ஸ்ரீராமானுஜர், ஸ்ரீ நிகமாந்த மகா தேசிகன். கன்னிகாதானம் தாதாச்சாரியார் சுவாமிகள், அப்பய்ய தீட்சிதர், புரந்தர தாசர், நடாத்தூர் அம்மாள் ஆகியோர் வரதராஜப் பெருமாளையும் பிரசித்திப் பெற்ற கருட சேவையையும் போற்றிப் பாராட்டியுள்ளனர். வரதராஜப்பெருமாள் மீது திருக்கச்சி நம்பிகள் தேவராஜ அஷ்டகமும்; வேதாந்த தேசிகர் வரதராஜ பஞ்சாசத்தும்; மணவாள மாமுனிகள் தேவராஜ மங்களமும் பாடியுள்ளனர். பிரசித்திப் பெற்ற காஞ்சி வரதர் கருடசேவை 29.05.2018 அன்று நடைபெறும்.
- டி.எம். இரத்தினவேல்

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com