

வட கொரியா ஞாயிற்றுக்கிழமை காலை புதிய ஏவுகணை சோதனை நிகழ்த்தியதாக தென் கொரிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்தது.
ஏற்கெனவே வட கொரியா நிகழ்த்திய பல்வேறு வகை ஏவுகணை சோதனைகளைத் தொடர்ந்து, கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்ட நிலையில், அந்த நாடு மீண்டும் ஒரு ஏவுகணையை செலுத்தியுள்ளது குறிப்பிடத் தக்கது.
தென் கொரிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
வட கொரியாவின் மேற்குப் பகுதியில் உள்ள வட பியூங்கான் மாகாணத்தில் அமைந்துள்ள விமானப் படை தளத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை காலையில் உள்ளூர் நேரப்படி 7 மணிக்கு ஏவுகணை சோதனை நிகழ்த்தப்பட்டது. கிழக்கு நோக்கி செலுத்தப்பட்ட ஏவுகணை 500 கிலோமீட்டர் தொலைவு பறந்து, கிழக்குக் கடல் என அறியப்படும் ஜப்பான் கடலில் விழுந்தது.
அணு ஆயுதம் ஏந்திச் செல்லும் ஏவுகணையைச் செலத்தும் திறனை உலகுக்கு மீண்டும் பறை சாற்றவே வட கொரியா அந்த ஏவுகணை சோதனையை நிகழ்த்தியதாகத் தெரிகிறது. மேலும் அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் அண்மையில் பதவியேற்றுள்ள நிலையில், புதிய அதிபருக்கு சவால் விடும் வகையில் இந்த சோதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்த வகையான ஏவுகணை சோதனையில் பயன்படுத்தப்பட்டது என்பது அந்தச் செய்தி அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.
இதே போர் விமான தளத்திலிருந்து அணு ஆயுதம் ஏற்றிச் செல்லும் திறன் கொண்ட முசுடான் ஏவுகணையை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இரு முறை வெற்றிகரமாக வட கொரியா சோதனை செய்தது நினைவுகூரத் தக்கது.
மேலும் கடலுக்கு அடியிலிருந்தும் நகரும் ஏவுதளங்களிலிருந்தும் அணு ஆயுதம் ஏந்திச் செல்லும் திறன் கொண்ட ஏவுகணைகளை கடந்த ஆண்டு வெற்றிகரமாக நிகழ்த்தியதாக வட கொரியா அறிவித்தது.
கண்டம் விட்டு கண்டம் பாயும் அதிகத் திறன் வாய்ந்த ஐ.சி.பி.எம். ரக ஏவுகணைகளை உருவாக்கும் திட்டத்தின் இறுதிக் கட்டத்தை தங்களது விஞ்ஞானிகள் எட்டிவிட்டனர் என்று வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் கடந்த மாதம் அறிவித்தார். அது நடக்கப் போவதில்லை என்று டிரம்ப் உடனடியாக தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து, டிரம்ப்புக்கு சவால் விடும் வகையில் தற்போதைய சோதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது என்று சர்வதேசப் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.