ஸ்டீவ் ஜாப்ஸ் ஆசைப்பட்ட ஆப்பிள் பார்க்: கட்டுமானத்தின் உச்சம்

கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள கோபெர்டினோவில் ஒரு முடிவிலா வட்டமான கட்டிடமாக நிர்மானிக்கபட்டு வரும் ஆப்பிளின் புதிய தலைமையகம்.
ஸ்டீவ் ஜாப்ஸ் ஆசைப்பட்ட ஆப்பிள் பார்க்: கட்டுமானத்தின் உச்சம்

உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான ஆப்பிள், தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒரு புதிய உச்சத்தைத் தொட்ட நிறுவனம். இது தன் புதிய தலைமையகத்தை அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள கோபெர்டினோவில் ஒரு முடிவிலா வட்டமான கட்டிட வடிவில் நிர்மானித்து வருகிறது. பறக்கும் சாஸரைப் போல் ‘ஸ்பேஸ்ஷிப்’ அமைப்பிலுள்ள இந்தக் கட்டிடத்திற்கு ‘ஆப்பிள் பார்க்’ என்று பெயரிட்டுள்ளனர்.  

மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்நுட்ப நிறுவனங்களின் வரிசையில் முன்னிலையில் இருப்பது ஆப்பிள். ஆகையால் இப்பொழுது கட்டப்பட்டு வரும் இந்தக் கட்டிடமும் பல சிறப்பான வடிவமைப்புகளைக் கொண்டிருக்கிறது. மரபுசாரா ஆற்றல் மூலங்களை வைத்து இயங்கும் வண்ணம் இது உருவாக்கப் பட்டுள்ள நிலையில் அதிகரித்து வரும் மின்சக்தி தேவையை பூர்த்தி செய்வதற்காக கட்டிடத்தின் கூரையில் சூரிய தகடுகள் பொருத்தப்பட்டுள்ளது, இது சுமார் 17 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் ஆற்றல் மிக்கது.  

2011-ல் தொடங்கப்பட்ட இந்தக் கட்டிடம் 175 ஏக்கர் பரப்பளவில் சுமார் 5 பில்லியன் செலவில் இந்த வருட இறுதிக்குள் முடிவடைந்து, குறைந்தது 6 மாதத்திற்குள் அலுவலகங்கள் அமைக்கப் பட்டு ஆப்பிளில் பணிபுரியும் 12,000 ஊழியர்களும் புதிய தளத்திற்கு நகர்த்தப் படுவார்கள். பார்க்கின் ஒரு உயரமான பகுதியில் 1000 இருக்கைகளைக் கொண்ட ‘ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டர்’ அமைக்கப்படவுள்ளது. ஆப்பிளின் வருங்கால புதிய தயாரிப்புகளின் வெளியீட்டு விளம்பரங்கள் இந்த அரங்கில்தான் திரையிடபடும்.  

ஆப்பிளின் தலைமை நிர்வாகியான டிம் குக், இந்தக் கட்டிடம் ஆப்பிளின் நிறுவனரான ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்களின் எண்ணத்தின் அடிப்படையில் பல தலைமுறைகளை கடந்து மக்களால் பேசப்படும் வகையிலும், பணியாளர்களுக்கு ஒரு நல்ல பணி சூழலை தருவதாகவும், உலகின் மிக சக்தி வாய்ந்த கட்டிடங்களில் ஒன்றாகவும் இது இருக்கும் என்று தெரிவித்துள்ளார். கூடுதலாக வளாகத்தை சுற்றிலும் 7000 மரங்களும், பழங்கால தாவரங்களைக் கொண்ட பழத்தோட்டமும் அமைக்கப்படவுள்ளது. இந்த வளாகம் தண்ணீரை மறுசுழற்சி செய்து அதை பயன்படுத்துவதோடு, கோப்பர்டினோ நாட்டுடன் 13,300 அடி நீளக் தண்ணீர் குழாய்களைக்கொண்டு இனைக்கப்பட்டுள்ளது. 

பிரட்டனின் ‘ஃபாஸ்டர்+பார்ட்னர்’ நிறுவனமே இந்த மிகப்பெரிய கட்டத்தைக் கட்டி வருகிறார்கள். இந்நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவருமான நார்மன் ஃபோஸ்டர், லண்டனில் அமைந்துள்ள லண்டன் சதுக்கத்தின் கட்டுமானத்தால் ஈர்க்கப்பட்டு, அதில் எவ்வாறு ஒரு பூங்காவைச் சுற்றி வீடுகள் அமைந்துள்ளதோ அதைப்போல் இது ஒரு பெரிய வட்ட வடிவ பூங்காவைச் சுற்றி அமைக்கப் பட்டுள்ள வெளிப்புற சுவரின் அமைப்பை இதற்கு கொடுத்துள்ளதாக கூறியுள்ளார். வெம்பலே மைதானம், கேனரி வார்ஃப் அண்டர் கிரவுண்ட் ஸ்டேஷன், லண்டனின் மில்லேனியம் பாலம் மற்றும் நியூ யார்க்கிலுள்ள ஹார்ட் டவர் போன்றவை இந்நிறுவனத்தால் கட்டப்பட்டவை. மேலும் ஸ்டீவ் ஜாப்ஸ் இந்த கட்டிடம் கலிஃபோர்னியா நிலப்பரப்பைப் பிரதிபலிப்பதாகவும், ஸ்டான்ஃபோர்ட் பல்கலைகழக வளாகத்தில் உள்ள ‘மெய்ன் குவாட்’ என்று அழைக்கப்படும் மையத்தில் அமைந்திருக்கும் பெரிய இடைவெளியைக் கொண்ட கட்டுமானத்தை போல் இது அமைய வேண்டும் என்று விரும்பியதாகவும் அவர் தெரிவித்தார். 

ஸ்டான்ஃபோர்ட் பல்கலைகழகம்
ஸ்டான்ஃபோர்ட் பல்கலைகழகம்

இந்த ஆப்பிள் பார்க்கினுள் பார்வையாளர்களுக்காக ‘ஆப்பிள் ஸ்டோர் அண்டு கஃபே’ என்ற பெயரில் வெளிநபர்கள் பயன்படுத்தும் வகையில் வர்த்தக கடை ஒன்றும் திறக்கப் படவுள்ளது. மேலும் அலுவலர்களுக்காக 1 லட்சம் சதுர அடியில் உடற்பயிற்சி கூடமும், 2 மைல் தூரத்திற்கு நடைப்பயிற்சி செய்யும் தடமும், அடித்தளத்தில் பழத்தோட்டத்துடன் கூடிய புல்வெளி குளமும் அமைந்துள்ளது. 1000 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் அளவிற்கு பார்க்கிங் வசதியும் செய்யப்பட்டுள்ளது. திறந்த வெளியில் அமர்ந்து பணி செய்யும் வகையில் 500 மேசைகள் ‘ஆர்க்கோ’ என்ற நிறுவனத்தால் அமைக்கப்படவுள்ளது. இது வழக்கமான பணிச் சூழலை மாற்றி பணியாளர்களுக்கு ஒரு புத்துணர்ச்சியை தரும் நோக்கத்தில் செய்யப்பட்டதாக நிறுவனம் கூறுகிறது. 

ஆப்பிள் நிறுவனம் பாதுகாப்பு விதிமுறைகளில் இம்முறை அதிகம் கவனம் செலுத்தியுள்ளது, புதிய கண்டுபிடிப்புகளுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் தனிவுரிமையை கருத்தில் கொண்டு இது கட்டபட்டுள்ளது. இதுவரை தொழில்நுட்ப வளர்ச்சியில் அனைவரையும் ஆச்சர்ய படுத்தி வந்த ஆப்பிள் நிறுவனம் இப்பொழுது அலுவலக கட்டமைப்பின் மூலம் உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com