பாகிஸ்தானையும் வங்கதேசத்தையும் மல்லுக்கட்ட வைத்த ஒரு முகநூல் விடியோ!

வங்கதேசத்தின் விடுதலைப் போராட்டம் குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த விடியோ ஒன்று பாகிஸ்தான் தூதரகத்தின் முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டதால், தற்பொழுது இரு நாடுகளுக்குமிடையே மோதல்...
பாகிஸ்தானையும் வங்கதேசத்தையும் மல்லுக்கட்ட வைத்த ஒரு முகநூல் விடியோ!

டாக்கா: வங்கதேசத்தின் விடுதலைப் போராட்டம் குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த விடியோ ஒன்று பாகிஸ்தான் தூதரகத்தின் முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டதால், தற்பொழுது இரு நாடுகளுக்குமிடையே மோதல் உருவாகி இருக்கிறது  

பாகிஸ்தானின் ஒரு பகுதியாக இருந்த வங்கதேசமானது இந்தியாவின் துணையுடன் அங்கு நிகழ்ந்த சுதந்திர போராட்டத்தின் காரணமாக மார்ச் 26, 1971 அன்று விடுதலை பெற்றது. போரில் ஈடுபட்டு வந்த பாகிஸ்தான் படைகள் இறுதியாக அன்று சரணடைந்ததைத் தொடர்ந்து, 'வங்கபந்து' என்று மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட ஷேக் முஜிபுர் ரஹ்மான், வங்கதேசத்தின் சுதந்தரத்தை அறிவித்தார். அப்பொழுது வங்கதேசத்தின் ராணுவத் தளபதியாக இருந்தவர் ஜியாவுர் ரஹ்மான். பின்னாளில் அவர் அந்நாட்டின் அதிபர் ஆனார்.

வரலாறு இவ்வாறு இருக்க டாக்காவில் இருக்கும் பாகிஸ்தான் தூதரகத்தின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் சமீபத்தில் வீடியோ ஒன்று பகிரப்பட்டது. சுமார் 13.45 நிமிடங்கள் ஓடக்  கூடிய அந்த வீடியோவில் வங்கதேசத்தின் சுதநதிரத்தை அறிவித்தவர் ஜியாவுர் ரஹ்மான்தான் என்றும், ஷேக் முஜிபுர் ரஹ்மான் வங்கதேசத்தின் சுதந்திரத்தினை கோரவில்லை என்றும், அவர் வங்காள மொழி பேசும் மக்களுக்காக தன்னாட்சி உரிமையைத்தான் கோரினார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த விடியோ வெளியானதும் கடும் சர்ச்சை ஏற்பட்டது. வங்கதேச ஊடகங்கள் இந்த வீடியோ பற்றி எழுதியதன் காரணமாக நாடு முழுவதும் பரவலான கண்டனங்கள் எழுந்தன.

முதலில் 'பாகிஸ்தான் அபையர்ஸ்' என்ற முகநூல் பக்கத்தில் வெளியான இந்த விடியோவை பின்னர் பாகிஸ்தான் தூதரகத்தின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கம் பகிர்ந்திருந்தது. பின்னர் எழுந்த கண்டனங்களை தொடர்ந்து, அந்த விடியோ நீக்கப்பட்டது.

இது தொடர்பாக வங்கதேசத்திற்கான பாகிஸ்தான் துணைத் தூதர் ரபியுசமான் சித்திக்கினை வங்கதேச வெளியுறவுத் துறை அழைத்து கண்டித்ததுடன், கடுமையான எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. இந்த பதிவு தவறான உள்நோக்கம் கொண்டதும், திசை திருப்பும் முயற்சியும் ஆகும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இத்தகைய தவறான தகவல்கள் மூலம் வரலாற்றினை திரிக்கும் நடவடிக்கைகளில் பாகிஸ்தான் ஈடுபடக் கூடாது என்றும், இந்த விஷயமானது முறையாக பாகிஸ்தானில் தலைமைக்கு தெரியப்படுத்தப்பட்டு, 'அதிகாரப்பூர்வ மன்னிப்பு' அளிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவல்களை செய்தியாளர்களிடம் தெரிவித்த வங்கதேச வெளியுறவுத் துறை செயலர் கம்ருல் அசன், விடியோ பகிர்வுக்காக தூதர் மன்னிப்பு கேட்டதுடன் இது வேண்டுமென்றே நடந்தது அல்ல என்றும் , தாங்கள் இங்குள்ள சூழ்நிலையினை சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று கூறியதாகவும் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com