எனது 22 ஆண்டுகால போராட்டத்தில் இன்று வெற்றிபெற்றுள்ளேன்: இம்ரான் கான்

சமீபகாலங்களில் இந்திய ஊடகங்கள் என்னை சித்தரித்த விதம் மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவுடனான நல்லுறவை விரும்பும் பாகிஸ்தானியர்களில் நானும் ஒருவன் தான்.
எனது 22 ஆண்டுகால போராட்டத்தில் இன்று வெற்றிபெற்றுள்ளேன்: இம்ரான் கான்

பாகிஸ்தானில் புதன்கிழமை நடைபெற்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டன. இதில் தனிப்பெரும்பான்மை இல்லையென்றாலும் அதிக இடங்களில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் நிலைக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தலைமையிலான பிடிஐ கட்சி உருவெடுத்துள்ளது. இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த இம்ரான் கான் கூறியதாவது:

என்னுடைய 22 ஆண்டுகால போராட்டத்தில் இன்று வெற்றிபெற்றுள்ளேன். என்னுடைய வேண்டுதல்களுக்கும் இன்று பதில் கிடைத்துவிட்டது. இதற்காக கடவுளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். என்னுடைய நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எனது கனவு நினைவாக்கும் நாள் பிறந்துவிட்டது. பாகிஸ்தானில் ஜனநாயகம் வலுப்பெற்றுள்ளதை இன்று நாம் காண்கிறோம். பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களுக்கு மத்தியில் தேர்தல் வெற்றிகரமாக நிறைவுபெற்றுள்ளது. இதற்காக நமது பாதுகாப்புப் படையினருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். 

வறுமை தான் நமக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. அதை நாம் எதிர்த்துப் போராட வேண்டும். இதில் சீனா தான் நமக்கு முன் உதாரணமாக திகழ்கிறது. ஏனென்றால் கடந்த 30 ஆண்டுகளில் அந்நாடு சுமார் 70 கோடி மக்களின் வறுமையை ஓழித்து வாழ்வாதாரத்தை உயர்த்தியுள்ளது.

சமீபகாலங்களில் இந்திய ஊடகங்கள் என்னை சித்தரித்த விதம் மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவுடனான நல்லுறவை விரும்பும் பாகிஸ்தானியர்களில் நானும் ஒருவன் தான். வறுமையற்ற துணைக் கண்டத்தை உருவாக்க வேண்டுமென்றால் இந்தியா, பாகிஸ்தான் இடையில் வர்த்தகத் தொடர்புகளிலும் நல்லுறவு ஏற்படுத்தப்பட வேண்டும். 

நீண்ட காலமாக காஷ்மீர் மக்கள் கடும் இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர். இதுதொடர்பாக இந்தியாவும், பாகிஸ்தானும் இணைந்து பேச்சுவார்த்தைகள் நடத்த வேண்டும். இதை இந்திய அரசு விரும்பினால், நிச்சயம் இருவரும் இணைந்து பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காண முடியும். இது இந்திய துணைக்கண்டத்துக்கும் நன்மையை ஏற்படுத்தும்.   

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com