கர்தார்பூர் வழித்தடம்: இன்று அடிக்கல் நாட்டுகிறார் இம்ரான் கான்

பாகிஸ்தானின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள சீக்கியர்களின் புனிதத்தலங்களுள் ஒன்றான கர்தார்பூர் சாஹிப்
கர்தார்பூர் வழித்தடம்: இன்று அடிக்கல் நாட்டுகிறார் இம்ரான் கான்


பாகிஸ்தானின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள சீக்கியர்களின் புனிதத்தலங்களுள் ஒன்றான கர்தார்பூர் சாஹிப் குருத்வாராவிலிருந்து, பஞ்சாப் மாநிலத்தின் குருதாஸ்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தேரா பாபா நானக் பகுதிக்கு எளிதில் செல்வதற்கு வசதியாக ஏற்படுத்தப்பட உள்ள வழித்தடத்துக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் புதன்கிழமை(நவ.28) அடிக்கல் நாட்டுகிறார்.
சீக்கிய மதத்தைத் தோற்றுவித்தவரும், சீக்கியர்களின் முதல் குருவுமான குரு நானக் தேவ், தனது வாழ்நாளில் ஏறத்தாழ 18 ஆண்டுகளை பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூரில் கழித்தார். அவர் அங்கேயே உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. அந்தப் பகுதியில் சீக்கியர்களின் முதலாவது குருத்வாராவான கர்தார்பூர் தர்பார் சாஹிப் குருத்வாரா கடந்த 1522-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. 
இந்நிலையில், கர்தார்பூர் குருத்வாராவுக்கு இந்தியாவிலுள்ள சீக்கியர்களும் நுழைவு இசைவு(விசா) இன்றி எளிதில் பயணம் செய்ய ஏதுவாக வழித்தடம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான அடிக்கல்லை புதன்கிழமை இம்ரான் கான் நாட்ட உள்ளார். 
இது குறித்து, பாகிஸ்தான் வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் முகமது ஃபைசல் கூறுகையில், இந்த வழித்தடத்துக்கான பணிகள் 6 மாதங்களில் நிறைவடையும் என்றார்.
குரு நானக்கின் 549-ஆவது பிறந்த தினத்தையொட்டி, அதைக் கொண்டாடுவதற்காக, பாகிஸ்தானில் உள்ள குருத்வாராவுக்கு உலகெங்கிலும் இருந்து சீக்கியர்கள் வந்திருந்தனர். 
அவர்கள் விடைபெற்ற பிறகு, கர்தார்பூரில் ரயில் நிலையம் அமைப்பது தொடர்பாக அந்நாட்டின் ரயில்வே அமைச்சர் சேக் ரஷித் அகமது செய்தியாளர்களிடையே திங்கள்கிழமை கூறியதாவது:
சீக்கிய பக்தர்களுக்கான வசதிகளை ஏற்படுத்தி தரும் வகையில், புனித தலங்கள் உள்ள அனைத்து இடங்களிலும் தங்கும் விடுதி, உணவு விடுதிகளை அமைத்துக் கொள்ள பாகிஸ்தான் நிலம் வழங்க தயாராக உள்ளது. கர்தார்பூரில் ரயில் நிலையம் அமைத்துக் கொள்ள ரயில்வே நிர்வாகம் நிலம் ஒதுக்க உள்ளது. 
கர்தார்பூர், நன்கனா சாஹிப் மற்றும் நரோவால் ஆகிய இடங்களில் உணவகங்கள் அமைத்துக் கொள்ளலாம். கர்தார்பூர் மற்றும் நன்கனா சாஹிப் ஆகிய பகுதிகளில் 10 ஏக்கர் நிலமும், நரோவால் பகுதியில் 5 ஏக்கர் நிலமும் வழங்க பாகிஸ்தான் ரயில்வே முடிவு செய்துள்ளது.
நன்கனா சாஹிப் முதல் கர்தார்பூர் வரை ரயில்வே வழித்தடம் அமைக்கப்பட உள்ளது. மற்ற சீக்கிய புனித தலங்களின் அருகே சொகுசு விடுதிகள் அமைத்து கொள்ளவும் நிலம் வழங்கப்பட உள்ளது என்றார்.
கர்தார்பூரையும் இந்தியாவின் குருதாஸ்பூரில் உள்ள தேரா பாபா நானக் பகுதியையும் இணைக்கும் வகையில் வழித்தடம் அமைப்பதற்கு இந்திய அரசு அண்மையில் ஒப்புதல் அளித்தது. இதன்படி, குருதாஸ்பூர் மாவட்டத்தில் இருந்து சர்வதேச எல்லை வரை இந்தியா சார்பில் வழித்தடம் அமைக்கப்படுகிறது. மறுபக்கம், கர்தார்பூரில் இருந்து சர்வதேச எல்லை வரை பாகிஸ்தான் சார்பில் வழித்தடம் அமைக்கப்படுகிறது.
இந்தியப் பகுதிக்கான வழித்தடம் அமைப்பதற்கான அடிக்கல்லை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் ஆகியோர் திங்கள்கிழமை நாட்டியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com