கரும்பிலிருந்து வெல்லம், சர்க்கரையும்; பதநீரிலிருந்து கருப்பட்டி, கல்கண்டு மற்றும் நாட்டுச் சர்க்கரையும் தயாரிக்கப்படுகிறது. ஆனால், கர்நாடகம், பாகல்கோட் மாவட்டத்தின், சங்கனட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மஹாலிங்கப்பா சோளத் தண்டிலிருந்து வெல்லம் மற்றும் சர்க்கரை தயாரித்து சாதனை படைத்துள்ளார்.
இது வேளாண் வட்டாரங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. வேளாண் ஆய்வகங்கள் மட்டுமே புதிய தொழில் நுட்பத்தைக் கண்டுபிடிக்கமுடியும் என்பதைத் தாண்டி, விவசாயிகளும் புதிய யுக்திகளை உருவாக்க முடியும் என்பதை அவர் நிரூபித்துள்ளார்.
மஹாலிங்கப்பா சொல்வது:
'பொதுவாக, சோளத் தண்டுகள் (தட்டைகள்) கால்நடைத் தீவனமாகப் பயன்படுத்தப்படுகின்றன. அதனால் விவசாயிகளுக்கு சொற்ப லாபம்தான் கிடைக்கும்.
தற்போது விளைவிக்கப்படும் புதிய வகை இனிப்பு மென் சோளம் தடிமனான தண்டுகளையும், அதிக இனிப்பையும் கொண்டுள்ளது. இந்த அம்சங்களை சாதகமாகப் பயன்படுத்தி, சோளத் தண்டுகளிலிருந்து சாற்றைப் பிரித்தெடுத்து, அதைக் காய்ச்சி தரமான வெல்லம் தயாரிக்கலாம் என்பதை நிரூபித்துள்ளேன்.
சோளத் தண்டுகளிலிருந்து தயாரிக்கப்படும் வெல்லம் கரும்பு வெல்லத்தைவிட தரத்தில் சிறந்தது என்பதை ஆய்வகச் சோதனைகள் மூலம் கண்டறிந்துள்ளேன். அக்டோபர் 8 ஆம் தேதி தார்வாட் வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் முன் நான் எனது கண்டுபிடிப்பை செய்து காட்டி, பாராட்டு பெற்றேன்.
கரும்பு விளைய 12 மாதங்கள் ஆகும். ஆனால் சோளம் நான்கு மாதங்களில் அறுவடைக்குத் தயாராகிவிடும். நாம் வருடத்திற்கு இரண்டு முறை சோளம் பயிரிடலாம். சோளத் தண்டுகளிலிருந்து தயாரிக்கப்படும் வெல்லத்தில் ஊட்டச்சத்துகள் நிறைய உள்ளன.
அறிவியல் ரீதியாக சோள வெல்லம் அல்லது சர்க்கரையானது நீரிழிவு நோயாளிகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும். சோள வெல்லத்தில் கரும்பு வெல்லம் போன்று இனிப்பு அதிகமாக இல்லாமல், சற்று குறைவாகத்தான் உள்ளது. அத்துடன் சோள வெல்லத்தில் பொட்டாசியம், மாலிப்டினம், கார்போஹைட்ரேட் மற்றும் சுக்ரோஸ் உள்ளது. நாம் பயன்படுத்தும் வழக்கமான வெல்லத்தை விடச் சிறந்தது என்று ஆய்வகச் சோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அனைத்து வகையான சோளத் தண்டுகளிலிருந்தும் வெல்லம் தயாரிக்கலாம். என்றாலும், புதிய இனிப்பு மென் சோள வகைகள் வெல்லம் தயாரிப்பிற்குப் பொருத்தமானவை. சோளத் தண்டுகளிலிருந்து சாறு அதிக அளவில் கிடைக்க அறுவடை செய்த இரண்டு முதல் மூன்று மணி நேரத்திற்குள் அதிலிருந்து சாறு எடுத்துவிட வேண்டும்.
தார்வாட், கொப்பல், கடக் மற்றும் ஹாவேரி மாவட்டங்களில் சோளம் பரவலாகப் பயிரிடப்படுகிறது. விவசாயிகள் 50 சதவீத மானியத்துடன் கூடிய அரசாங்கக் கடன்களைப் பயன்படுத்தி வெல்லம் காய்ச்சும் உலைகளை அமைக்கலாம்.
எனது 10 ஏக்கர் பண்ணையில் வளர்க்கப்படும் சோளத் தண்டுகளிலிருந்து சாறு பிரித்தெடுத்து, சேமிப்பு, பேக்கேஜிங் மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்து விவசாய விஞ்ஞானிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளேன்.
எனது கண்டுபிடிப்பு கிராமப்புறப் பொருளாதாரத்தில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்; விவசாயிகளுக்கு புதிய வருமானம் உருவாக்கும் வழியாகவும் அமையும். கழிவு எனக் கருதப்பட்டவைகளிலிருந்து உபரி வருமானம் கிடைக்கும் என்றால், அது விவசாயிகளுக்கு சந்தோசம் தரும் விஷயம்தானே!' என்கிறார் மஹாலிங்கப்பா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.