சிதம்பரம், ஜூன் 16: விவசாயிகள் தங்களிடம் உள்ள வேளாண் இடு பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படும் இயற்கை விவசாய உற்பத்தி முறைக்கு நல்ல வரவேற்பு தருகின்றனர்.
வட மாநிலங்களிலும், தமிழகத்தில் சில பகுதிகளிலும் இயற்கை முறையில் அதிக உற்பத்தி, உற்பத்தித் திறன் மற்றும் அதிக மகசூல் பெற்றுத் தரும் இயற்கை மூலிகை கிணறு பற்றி விவசாயிகள் தெரிந்து கொள்வது அவசியமாகும்.
÷இயற்கை மூலிகை கிணறு: கிராமங்களில் வயல்களில் மற்றும் தோட்டங்களில் நீர் பாசனத்துக்கு பயன்படும் கிணறுகள் இருக்கும். இத்தகைய கிணறுகளை இயற்கை மூலிகை கிணறுகளாக மாற்றி பலர் குறைந்த செலவில் அதிக லாபம் பெற்று வருகின்றனர். இந்த புதிய சாகுபடி முறையில் விவசாயிகள் தங்கள் பண்ணைகளில் உள்ள கிணற்றை விவசாயத்துக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். இக்கிணற்றில் மாட்டு சாணம், எரு, நொச்சி, வேப்பந்தழை மற்றும் பிற மருத்துவ குணம் கொண்ட மூலிகைகள், ஆட்டு கழிவுகள், கோழி எரு போன்றவை கொட்டப்பட்டு நீண்ட கம்புகள் கொண்டு நன்றாக கலக்கப்படுகிறது.பின்னர் முதலில் ஒரு வாரம் கழித்து மோட்டார் வாயிலாக நீர் பாசனம் செய்யும் போது தண்ணீரில் கலந்த இயற்கை உரங்கள் எளிதாக பயிறுக்கு சென்று சேருகிறது.
÷இந்த முறை வாயிலாக வயல்கள், தோட்டங்களுக்கு ஆண்டு முழுவதும் இயற்கை உரமிட முடியும். பின்னர் கோடைக் காலங்களில் நீர் நிலைகளில் தண்ணீர் குறையும் போது விவசாயிகள் கிணறுகளில் இறங்கி தூர்வாரி, சுத்தம் செய்து கிணற்றின் அடியில் உள்ள கால்நடை கழிவுகளை எடுத்து கோடை உழவின்போது பயன்படுத்தும் முறை நடைமுறையில் உள்ளது.
நொச்சி, வேப்பந்தழை போன்ற மருத்துவ குணம் கொண்ட தழைகளும் பயன்படுத்தப்படுவதால் பயிர்களை நோய் மற்றும் பூச்சித் தாக்குதலில் இருந்து பாதுகாக்க முடிகிறது. விவசாயிகள் இணைந்து செயல்படும் போது இயற்கை மூலிகை கிணறு வாயிலாக நீர் பாசனம் செய்து பலர் எளிதாக பயன் பெற முடியும்.
பிற பயன்கள்: மூலிகைகள் மற்றும் மருத்துவ குணம் கொண்ட தழைகள் பயன்படுத்துவதால் பயிர் பாதுகாப்புக்கு குறைந்த செலவே போதுமானது.
இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்படும் வேளாண் விளை பொருள்களுக்கு பெரு நகர்களில், வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு உள்ள காரணத்தால் அதிக விலைக்கு தங்களின் விலை பொருள்களை விற்பனை செய்ய முடியும். இயற்கை மூலிகை கிணறு வாயிலாக விவசாயிகளின் மண், தண்ணீர் நல்ல வளமுடன் இருக்கும்.
÷எனவே குறைந்த செலவில் அதிக லாபம் பெற்றுத் தரும் மூலிகைக் கிணறு வாயிலாக தமிழக சிறு மற்றும் குறு விவசாயிகள், சுய உதவிக்குழு உறுப்பினர், முன்னோடி விவசாயிகள் கிராம அளவில் இணைந்து செயல்பட்டால் வாழ்வில் வளம் பெற முடியும் என்கிறார் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் விரிவாக்கத்துறை விரிவுரையாளர் தி.ராஜ்பிரவீன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.