ஆடிப்பட்ட காய்கறி விலை முன்னறிவிப்பு

ஆடிப் பட்டத்திற்கான தக்காளி, கத்தரி, வெண்டை ஆகிய காய்கறிகளின் விலை முன்னறிவிப்பை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
ஆடிப்பட்ட காய்கறி விலை முன்னறிவிப்பு
Published on
Updated on
2 min read

ஆடிப் பட்டத்திற்கான தக்காளி, கத்தரி, வெண்டை ஆகிய காய்கறிகளின் விலை முன்னறிவிப்பை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

தக்காளி

தமிழகத்தில் தக்காளி வரத்து ஜூன்-ஜூலை (சித்திரை நடவு) மற்றும் அக்டோபர்-நவம்பர் (ஆடி நடவு) மாதங்களில் அதிகரித்துக் காணப்படும்.

கர்நாடகம், ஆந்திரத்திலிருந்து வரும் தக்காளி, தமிழகத்தில் வரத்து குறைவான பருவங்களில் (ஏப்ரல், மே, ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் டிசம்பர்) தேவையைப் பூர்த்தி செய்யும்.

அதிக வரத்து பருவமான ஜூலையிலும் இந்த ஆண்டு மொத்த சந்தைகளான கோவை, ஓசூர், ஒட்டன்சத்திரம் மற்றும் தலைவாசலில் குறைந்த வரத்தே காணப்படுகிறது. வறட்சி மற்றும் கோடை பருவமழை தவறியதுமே குறைவான அளவு சாகுபடிக்கான காரணங்களாகும்.

பொதுவாக, ஜூலை முதல் அக்டோபர் வரையான காலகட்டங்களில் தக்காளி விலை குறைந்து காணப்படும். மாறாக, தற்போது கர்நாடக மாநிலம் மைசூரு மற்றும் கோலார் பகுதிகளிலிருந்து கோவை மொத்த சந்தைக்கு வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளது.

தற்போது, மேற்கூறிய மொத்த சந்தைகளில் தக்காளி விலை அதன் அளவு மற்றும் தரத்திற்கேற்ப கிலோ ரூ.25 முதல் ரூ.30 வரை உள்ளது. ஆகஸ்ட் -அக்டோபர் மாதங்களில் விலை நிலவரம் பற்றி விவசாயிகள் அறிந்து கொள்ள ஏதுவாக கடந்த 11 வருடங்களில் கோவை, ஒட்டன்சத்திரம், ஓசூர் மற்றும் தலைவாசல் உழவர் சந்தைகளில் நிலவிய தக்காளி விலை விவரங்கள் ஆய்வு மற்றும் வர்த்தக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

விலை விவர மற்றும் வர்த்தக ஆய்வுகளின் முடிவில், தக்காளி விலை அடுத்துவரும் இரண்டு மாதங்களில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

மேலும், தக்காளியின் பண்ணை விலை அக்டோபரில் கோவை மற்றும் ஒசூரில் கிலோவிற்கு ரூ.20-22 வரையும், ஒட்டன்சத்திரம் சந்தையில் கிலோவுக்கு ரூ.16 -18 வரையும் மற்றும் தலைவாசல் சந்தையில் கிலோவிற்கு ரூ.18 - 20 வரையும் இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

இப்பண்ணை விலை அடுத்துவரும் மூன்று மாத பருவ மழைக்கு ஏற்ப மாறுவதற்கு வாய்ப்புள்ளது. இத்தகவலின் அடிப்படையில் விவசாயிகள் தங்களது ஆடிப்பட்ட தக்காளி விதைப்பை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கத்தரி

தமிழகத்தில் சேலம், திண்டுக்கல், வேலூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கத்தரி அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன.

வர்த்தக மூலங்களின்படி, தற்போது கோவை, ஒட்டன்சத்திரம் மற்றும் தலைவாசல் சந்தைகளில் வழக்கமான வரத்தைக் காட்டிலும் குறைவாக உள்ளது. பொதுவாக, கோடை அறுவடை முடிந்த நிலையில் இவற்றின் விலை அடுத்துவரும் மாதங்களில் ஏறுமுகத்தில் இருக்கும்.

தற்போது, மொத்த சந்தைகளில் கத்தரி விலை அதன் அளவு மற்றும் தரத்திற்கேற்ப கிலோ ரூ.25 முதல் 30 வரை உள்ளது. வரும் ஆகஸ்ட் -அக்டோபர் மாதங்களில் விலை நிலவரம் பற்றி விவசாயிகள் அறிந்து கொள்ள ஏதுவாக கடந்த 11 வருடங்களில் கோவை, ஒட்டன்சத்திரம் மற்றும் தலைவாசல் உழவர் சந்தைகளில் நிலவிய கத்தரி விலை விவரங்கள் ஆய்வு மற்றும் வர்த்தக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

மேற்கண்ட மொத்த சந்தைகளின் விலை ஆய்வு மற்றும் வர்த்தக ஆய்வுகளின் அடிப்படையில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் விலை உயர்ந்து காணப்படும். அதற்கடுத்த அக்டோபர் மாதத்தில் விலை சற்று குறையவாய்ப்புள்ளது.

இதன்படி, கத்தரியின் ஆடிப்பட்ட சாகுபடியின் அக்டோபர் மாத அறுவடையின் போது பண்ணை விலையானது கிலோவிற்கு ரூ.12 முதல் 15 வரை கோவை சந்தையிலும், கிலோவிற்கு ரூ.10 முதல் 12 வரை ஒட்டன்சத்திரம் மற்றும் தலைவாசல் சந்தையிலும் இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

எனவே, விவசாயிகள் இந்த விலைகள் அடிப்படையில் விதைப்பு முடிவுகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வெண்டை

தமிழகத்தில் வெண்டை ஆடிப்பட்டம் மற்றும் தைப்பட்டங்களில் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றது.

சேலம் மாவட்டத்தில் தலைவாசல் மகுடஞ்சாவடி வட்டாரங்கள், கோவை மாவட்டத்தில் காரமடை, பெரியநாயக்கன் பாளையம் மற்றும் தொண்டாமுத்தூர் வட்டாரங்கள், தேனி மாவட்டத்தில் ஆண்டிப்பட்டி வட்டாரம் மற்றும் திருச்சி மாவட்டத்தில் வையம்பட்டி வட்டார பகுதிகளில் பரவலாக பயிரிடப்படுகிறது.

வர்த்தக மூலங்களின்படி வறட்சி காரணமாக கோவை, ஒட்டன்சத்திரம் மற்றும் தலைவாசல் மொத்த சந்தைகளில் வெண்டை வரத்து குறைந்துள்ளது.

தற்போது, மொத்த சந்தைகளில் வெண்டை விலை அதன் அளவு மற்றும் தரத்திற்கேற்ப கிலோ ரூ.25 முதல் 30 வரை உள்ளது. வரும் ஆகஸ்ட் -அக்டோபர் மாதங்களில் விலை நிலவரம் பற்றி விவசாயிகள் அறிந்து கொள்ள ஏதுவாக கடந்த 11 வருடங்களில் கோவை, ஒட்டன்சத்திரம் மற்றும் தலைவாசல் உழவர் சந்தைகளில் நிலவிய வெண்டை விலை விவரங்கள் ஆய்வு மற்றும் வர்த்தக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

வர்த்தக மூலங்கள் மற்றும் விலை விவர ஆய்வின்படி ஆடி மாதத்தில் விதைக்கும் வெண்டைக்கு அக்டோபர் மாதத்தில் அறுவடைக்கு வரும்போது கோயம்புத்தூர் மற்றும் ஒட்டன்சத்திரம் மொத்த சந்தையில் கிலோவிற்கு ரூ.10 முதல் 15 வரையிலும், தலைவாசல் மொத்த சந்தையில் கிலோவிற்கு ரூ.10 முதல் ரூ.12 வரையிலும் கிடைக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட விலைகள் அடிப்படையில் விவசாயிகள், வெண்டை விதைப்பு முடிவுகளை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத் தகவல் மையம், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோவை - 641 003. தொலைபேசி 0422 -2431405.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com