

கறவை மாடுகளில் இனப் பெருக்க மேலாண்மை குறித்து கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் (திண்டுக்கல் பிரிவு) தலைவர் எஸ்.பீர் முகமது மற்றும் இணைப் பேராசிரியர் ப.சங்கர் ஆகியோர் அளித்துள்ள விளக்கம்:
லாபகரமான முறையில் கறவை மாட்டுப் பண்ணை நடத்துவதற்கு ஒரு பசுவிலிருந்து, ஆண்டுக்கு ஒரு கன்று வீதம் பெற வேண்டும். அதற்கு முதல் கன்று ஈன்று 60-90 நாள்களுக்குள், மறுபடியும் தாய்ப் பசுவை கருத்தரிக்கச் செய்ய வேண்டும். இதனை வெற்றிகரமாகச் செயல்படுத்த, சரியான சினைத் தருணத்தில் கருவூட்டல் செய்தல், சினை பரிசோதனை செய்தல், சினை மாடுகளைப் பராமரித்தல் போன்ற வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.
சினைப் பருவ அறிகுறிகள்: கறவை மாடுகள் சராசரியாக 21 நாள்களுக்கு ஒருமுறை பருவத்துக்கு வருகின்றன. பசுக்கள் பருவத்துக்கு வருவதை எளிதாகக் காண முடியும். ஆனால், எருமைகள் பருவத்துக்கு வருவதை தீவிரமாக கண்காணித்தால் மட்டும் அறிய முடியும்.
அறிகுறிகள்: மாடு அமைதியின்றிக் காணப்படும். அடிக்கடி அடிவயிற்றிலிருந்து கத்திக் கொண்டே இருக்கும். அருகில் உள்ள மாடுகள் மீது தாவுவதோடு, தன்மீது காளைகளையும், மாடுகளையும் தாவுவதற்கு அனுமதிக்கும். மந்தை மாடுகளோடு மேயும்போது, தனியாக ஒதுங்கி நிற்கும். உடல் வெப்பநிலை சிறிது அதிகரித்து காணப்படும். உணவில் நாட்டமில்லாமல், குறைந்தளவு உணவை மட்டுமே உட்கொள்ளும். அடிக்கடி சிறிது, சிறிதாக சிறுநீர் கழிக்கும் (எருமைகளில் அதிகமாக காணப்படும்). வாலை ஒதுக்கி நிற்கும். பசுக்களின் பிறப்பு உறுப்பின் வெளி உதடுகள் தடித்தும், வழவழப்பாகவும் சிவந்தும் காணப்படும். கண்ணாடி போன்ற திரவம் பசுவின் பிறப்பு உறுப்பிலிருந்து வழிந்து தொங்கி கொண்டிருக்கும். கறவையில் உள்ள மாடாக இருந்தால், 2 அல்லது 3 நாள்களுக்கு பாலின் அளவு குறையும். கண்ணில் உள்ள கருவிழிப் பார்வை விரிந்து காணப்படும்.
சினை பருவத்தில் கவனிக்க வேண்டிய அறிகுறிகள்: ஒருசில பசுக்களில் சினைப்பட்ட பின்னும், கண்ணாடி போன்ற திரவம் 3 மாதங்கள் வரை தொடர்ந்து வழிந்துகொண்டே இருக்கும். இதனைப் பார்த்து பசு சினைக்கு வரவில்லை என தவறாகக் கருதி, காளையுடன் இணைவதற்கோ, சினை ஊசி போடுவதற்கான முடிவுக்கோ வந்து விடக் கூடாது. தவறுதலாக இனச் சேர்க்கை செய்தால், கருச்சிதைவு ஏற்பட வாய்ப்புள்ளது. இதுபோன்ற தருணங்களில், கால்நடை மருத்துவர்களை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.
கண்ணாடி போன்ற திரவத்தில் வெள்ளை கலந்தோ, சீழ் கலந்தோ வந்தால், அது கருப்பையில் நோய் ஏற்பட்டதற்கான அறிகுறி. இதனை அலட்சியம் செய்தால், சினை பிடிக்கும் தன்மையை பசு இழக்க நேரிடும். எனவே, நோய்க்கு வைத்தியம் பார்ப்பது அவசியம்.
மாடுகள் சாதாரணமாக 21 நாள்களுக்கு ஒருமுறை சினை பருவத்துக்கு வருகின்றன. 21 நாள்களுக்கு முன்னதாக பலமுறை சினை பருவத்தை அடைந்தாலோ, திரவம் வழிதல் தொடர்ந்து தென்பட்டாலோ, கருப்பைக் கோளாறாக இருக்கலாம். சூலத்தில் கட்டிகள் தோன்றுவது மற்றும் தாமதமாக கரு முட்டை வெளியேறுதல் போன்றவற்றின் காரணமாகவும் மேற்கூறிய அறிகுறிகள் தோன்றும்.
கருவூட்டல் செய்ய சிறந்த நேரம்:காலையில் சினைப் பருவத்தை வெளிப்படுத்திய மாடுகளுக்கு மாலையிலும், மாலையில் பருவத்துக்கு வந்த மாடுகளை மறுநாள் காலையிலும் கருவூட்டல் செய்ய வேண்டும். ஒரு மாடு சினை முட்டையை வெளியிட, பருவத்துக்கு வந்த நேரம் முதல் 27-29 மணி நேரம் எடுத்துக் கொள்ளும். விந்தணுவானது கருமுட்டையை அடையும் முன், கருப்பையினுள் உணர் ஊட்டம் பெருகின்றது. அதற்குரிய கால அளவான 10 மணி நேரத்தை விடுத்து, பருவத்துக்கு வந்த 12-18 மணி நேரம் கழித்து கருவூட்டல் செய்தால், சினை முட்டை வெளிவரவும், விந்து உணர்வூட்டம் பெற்று சினை முட்டையைச் சென்று அடையவும் சரியாக இருக்கும்.
கருவூட்டல் செய்தல்: கருவூட்டம் செய்யும்போது சுற்றுப்புற வெப்பம் மிகக் குறைவாகவோ, மிக அதிமாகவோ இருந்தால் சினைப் பிடிக்காமல் போக வாய்ப்புள்ளது. தூரத்திலிருந்து பசு அல்லது கிடேரியை ஓட்டி வருவோர், சிறிது நேரம் ஓய்வு அளித்த பின் கருவூட்டல் செய்தால், சினை பிடிப்பது அதிகரிக்கும். கருவூட்டல் செய்ய 2 வழிமுறைகளைப் பின்பற்றலாம்.
இயற்கை மற்றும் செயற்கை முறை கருவூட்டல்: நல்ல தரமான பொலிக்காளை கொண்டு, மேற்கூறிய பருவத்தில் இருக்கும் கறவை மாட்டோடு இயற்கை முறையில் இனப்பெருக்கம் செய்யலாம். பொலிக்காளையைத் தாக்கி இருக்கும் நோய், கறவை மாட்டுக்கும் பரவ வாய்ப்புள்ளது.
செயற்கை முறையில் திரவ விந்து அல்லது உறை விந்து மூலம் கருவூட்டல் செய்யலாம். இந்த முறையில் காளைகளிலிருந்து நோய் பரவுவதைத் தடுக்க முடியும்.
சினைப் பரிசோதனை: கருவூட்டல் செய்த 18 - 24 நாள்களுக்குள் சினை தருண அறிகுறி தென்படும். இல்லாத பட்சத்தில் 45-90 நாள்களுக்குள், கால்நடை மருத்துவரை சினையை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும். அப்படியில்லாமல் 5 முதல் 6 மாதம் கழித்து சினை பிடிக்காமலிருப்பது தெரியவந்தால், மாடு வளர்ப்போருக்கு நஷ்டம் ஏற்படும்.
கன்று ஈனுதல்: கறவை மாடுகளின் சினைக் காலம் 278 நாள்களாகும். கன்று ஈனும் முறையை 3 நிலைகளாகப் பிரிக்கலாம். முதல் நிலையில் கருப்பையின் வாய் விரிவடையும். இதனால் பனிக்குடம் மற்றும் திரவம், இளகிய நிலையில் உள்ள கருப்பை வாயின் வழியாக வெளியே தள்ளப்படுகிறது. இரண்டாம் நிலையில் நன்றாக விரிந்த கருப்பையின் வாய் வழியாக கன்று வெளியே தள்ளப்படும். அதன்பின்னர், முதல் பனிக்குடம் உடைந்த 30 நிமிடத்திலிருந்து 1 மணி நேரத்துக்குள் இரண்டாவது பனிக்குடம் உடைந்து, கன்று வெளிவரும்.
மூன்றாம் நிலையில் கன்று போட்ட 6 முதல் 12 மணி நேரத்துக்குள் நஞ்சுக்கொடி வெளிவரும். வராதபட்சத்தில் கால்நடை மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்.
கன்று ஈன்ற 3 மாதங்களில் கறவை மாடுகளில் காணப்படும் சினைப் பருவ அறிகுறிகளை, பண்ணையாளர்கள் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். அதன்மூலம், சரியான பருவத்தில் கருவூட்டல் செய்து ஆண்டுக்கு ஒரு கன்று பெறலாம். அப்போது தான் பண்ணையில் உற்பத்தி பெருகி, லாபகரமான பண்ணையத்துக்கு வழி வகுக்க முடியும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.