அதிக லாபம் தரும் கூட்டுக் கெண்டை மீன் வளர்ப்பு

கிராமப்புற குளம், குட்டைகளில் கூட்டுக் கெண்டை மீன் வளர்ப்பு மூலம் அதிக லாபம் பெறலாம். இதுதொடர்பாக மீன்வளத் துறையினர் அளித்துள்ள தகவல்கள்:
அதிக லாபம் தரும் கூட்டுக் கெண்டை மீன் வளர்ப்பு
Updated on
1 min read

கிராமப்புற குளம், குட்டைகளில் கூட்டுக் கெண்டை மீன் வளர்ப்பு மூலம் அதிக லாபம் பெறலாம். இதுதொடர்பாக மீன்வளத் துறையினர் அளித்துள்ள தகவல்கள்:

காலத்தின் மாற்றத்திற்கேற்ப விவசாயிகளும் தங்களுக்கு அதிக லாபம் தரும் தொழில்களைச் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. அவர்களுக்கு கூட்டுக் கெண்டை மீன் வளர்ப்பு லாபம் தரும் தொழிலாக இருக்கும்.

விவசாயிகள் தங்களது பகுதியில் உள்ள ஊராட்சிக் குளங்கள், குட்டைகள் ஆகியவற்றில் சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெற்று, கூட்டுக் கெண்டை மீன் வளர்ப்பு தொழிலில் ஈடுபடலாம்.

மீன் வகைகள்: கெண்டை மீன்களில் பலவகைகள் உள்ளன. அவற்றில் அதிவேக வளர்ச்சி பெறும் கெண்டை மீன்களைத் தேர்வு செய்து குளங்களில் வளர்த்தால் பெருமளவில் பயன் கிடைக்கும்.

தோப்பா கெண்டை, தம்பட கெண்டை, புல் கெண்டை, சாதா கெண்டை உள்ளிட்டவை குளங்களில் வளர்க்க ஏதுவான மீன்கள் ஆகும். இந்த மீன்களை குறிப்பிட்ட இன விகிதங்களின் படி ஒன்றாகக் கலந்து வளர்த்தால் நல்ல உற்பத்தித் திறனும் லாபமும் பெற முடியும். இவ்வாறு கூட்டாக வளர்ப்பதே கூட்டுக் கெண்டை மீன் வளர்ப்பாகும்.

மீன்களின் தன்மை: ஒவ்வொரு வகை மீனும் தனித்தன்மையான உணவுப் பழக்கத்தைக் கொண்டது. கெண்டை மீன்களின் உணவு மாற்று விதிகத் திறன் அதிகம். இவை வேகமான வளர்ச்சித் திறன் உடையவை. பிறவகை மீன்களுடன் இணைந்து வாழும் திறன் உடையவை.

சாதா கெண்டை: புழு, பூச்சிகள், குளத்தடியில் உள்ள சிறு தாவரங்கள், விலங்கின நுண்ணுயிரினங்கள், மட்கிய பொருள்கள்.

தோப்பா கெண்டை: விலங்கின நுண்ணுயிர் மிதவைகள்.

தம்பட கெண்டை: விலங்கின நுண்ணுயிர் மிதவைகள்.

புல் கெண்டை: நீர்த் தாவரங்களான ஹைடிரில்லா, வேலம்பாசி, வாத்துப் பாசி, புல். இவை தவிர அனைத்து மீன்களுக்கும் பொதுவான உணவாக மட்கிய பொருள்கள், தாவர, விலங்கின நுண்ணுயிர்கள், மிதவைகள், புழு, பூச்சிகள் ஆகியவை உள்ளன.

உணவுப் பொருள் உற்பத்தி: வளர்ப்பு மீன்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களின் உற்பத்தியை இயற்கை உரம், செயற்கை உரமிடுதலின் மூலம் நாமே செய்யலாம். ஒரு ஹெக்டேர் நீர்ப் பரப்புள்ள குளத்துக்கு 10 ஆயிரம் கிலோ மாட்டுச் சாணம், 200 கிலோ யூரியா, 250 கிலோ சூப்பர் பாஸ்பேட், 40 கிலோ பொட்டாஷ் ஆகியவற்றைச் சேர்த்து அதில் 6-இல் ஒரு பகுதியை, மீன் குஞ்சுகளை குளத்தில் விடுவதற்கு 10 நாள்கள் முன்னதாக இட வேண்டும். மீதமுள்ள உரத்தை 15 தினங்களுக்கு ஒரு முறை பகிர்ந்து இட வேண்டும். இதன்மூலம் குளத்தில் நுண்ணுயிர்கள் உற்பத்தியாகி மீன்களுக்கு உணவாகும்.

லாபம் தரும் கூட்டுக் கெண்டை மீன் வளர்ப்புத் திட்டத்தைப் பயன்படுத்தி, விவசாயிகள், வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், மகளிர் சுயஉதவிக் குழுவினர் பயன்பெறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com