ஆரோக்கியமான மிளகாய் நாற்றுகளை வளர்ப்பது எப்படி?

மிளகாய் விவசாயத்தில் வீரிய ஓட்டு மிளகாயை பயிரிட்டாலும் ஆரோக்கியமான நாற்றுகளை உற்பத்தி செய்து நடவு செய்வதன் மூலமே
ஆரோக்கியமான மிளகாய் நாற்றுகளை வளர்ப்பது எப்படி?
Updated on
2 min read

மிளகாய் விவசாயத்தில் வீரிய ஓட்டு மிளகாயை பயிரிட்டாலும் ஆரோக்கியமான நாற்றுகளை உற்பத்தி செய்து நடவு செய்வதன் மூலமே நல்ல மகசூல் பெற முடியும் எனவும், அதைச் செயல்படுத்தும் முறை குறித்தும் வேளாண் துறையினர் விளக்கமளித்தனர்.
 மேட்டுப்பாத்தி நாற்றங்கால்: மேட்டுப்பாத்திகளை ஓரளவு நிழல்படியும் படியான இடத்தில் 10-15 செ.மீ. உயரத்தில் தயாரிக்க வேண்டும். மேட்டுப்பாத்தியின் அகலம் ஒரு மீட்டர் வரையும், நீளம் 3 மீட்டர் வரையும், தேவைக்கேற்ப அமைக்கலாம். மண் மிருதுவாகவும் இறுக்கமாக இல்லாமலும், ஈரம் காக்கும் தன்மையுடையதாகவும் அமைக்க வேண்டும். இதற்காக மண்ணின் தன்மையைப் பொருத்து குறுமண், மணல் ஆகியவற்றை கலக்க வேண்டும். நல்ல வீரியமுள்ள நாற்றுகளைப் பெற நன்கு பண்படுத்திய ஒரு சென்ட் நாற்றங்காலுக்கு 20 கிலோ மக்கிய தொழு உரம் அல்லது கம்போஸ்ட் சேர்க்க வேண்டும். அதோடு ஒரு சென்ட் நாற்றங்காலுக்கு இரண்டு கிலோ டி.ஏ.பி. உரம் இடுவதால் நாற்றுகள் நன்கு ஊட்டச்சத்துடன் வளர்கின்றன. மேலும், நாற்றுகளைப் பிடுங்கும் போதும் வேர் அறுபடாமல் எளிதாக வரும்.
 நாற்றங்காலில் நூற்புழு, இளம்பயிரில் சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த ஒரு சென்ட் நாற்றங்காலுக்கு 250 கிராம் வீதம் பியூரிடான் குருணைகளை இடலாம். நாற்றங்காலில் நாற்றுகளில் அழுகல் நோய் வராமல் தடுக்க ஒரு சதவீதம் வீரியமுள்ள போர்டா கலவையால் மண்ணை நேர்த்தி செய்ய வேண்டும். மேட்டுப்பாத்தியின் மேற்பரப்பை மரப்பலகையால் சமப்படுத்த வேண்டும். அதில் 10 செ.மீ இடைவெளியில் 1.2 செ.மீ ஆழத்தில் கோடுகள் போட்டு அந்த கோடுகளில் விதை நேர்த்தி செய்த விதைகளை பரவலாக சீரான இடைவெளியில் விதைக்க வேண்டும். அடர்த்தியாக விதைப்பது அழுகல் நோயை உண்டாக்கும். மேலும் நாற்றுக்கள் மெலிந்தும் காணப்படும். விதைக்கும் ஆழம் தோராயமாக விதைகளின் விட்டத்தை விட 3-4 மடங்கு இருக்க வேண்டும்.
 கோடுகளில் போட்ட விதைகளை மணல் அல்லது நாற்றங்கால் மண் கொண்டு மூடிவிட்டு பூவாளியால் நீர் பாய்ச்ச வேண்டும். பின் வைக்கோல் அல்லது உலர்ந்த இலைகளை பாத்திகளின் மேல் பரப்ப வேண்டும். இது நேரடி சூரிய வெப்பத்தால் விதைகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கிறது. விதைத்து 10 முதல் 15 நாள்கள் கழித்து பாத்திகளின் மேல் பரப்பிய வைக்கோல் அல்லது இலைகளை அகற்றி விட வேண்டும். தினமும் பூவாளி கொண்டு காலை மாலை நேரங்களில் நீர் ஊற்றுவது நாற்றுகள் நல்ல வளர்ச்சி அடைவதற்கும், விதைகள் நாற்றங்காலை விட்டு வெளியே வராமல் இருப்பதற்கும் உதவுகிறது.
 நாற்றங்காலில் வேர் அழுகல் நோயைக் கட்டுப்படுத்த 15 நாள்கள் இடைவெளியில் காப்பர் ஆக்ஸிகுளோரைடு அல்லது புளுகாப்பர் 2.5 கிராம் மருந்தை ஒரு லிட்டர் நீரில் கரைத்து ஊற்ற வேண்டும். நடவுக்காக நாற்று பிடுங்குவதற்கு 12 மணி நேரத்துக்கு முன்பே மேட்டுப்பாத்திகள் நன்கு முழ்கும் அளவு நீர் பாய்ச்ச வேண்டும்.
 குழித்தட்டு நாற்றங்கால்: நாற்றுகள் நல்ல வாளிப்பாகவும் முழுமையான வேர்களுடனும் கிடைக்க புரோடிரே என சொல்லப்படும் குழித்தட்டு நாற்று அட்டைகள் உதவுகின்றன. இந்த முறையில் நன்கு மக்கிய தென்னை நார்க்கழிவை வளர் ஊடகமாகப் பயன்படுத்தி பூச்சிகள் புகாத நிழல் வலைகூடாரங்களில் நாற்றுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
 குழித்தட்டு நாற்றங்காலின் பயன்கள்: நாற்றுகள் நல்ல ஆரோக்கியமாகவும் முழுமையான வேர்களுடனும் கிடைகின்றன. சீரான வளர்ச்சி உடைய நாற்றுக்கள் உருவாகின்றன. பருவமற்ற காலங்களிலும் நாற்றுகளை உற்பத்தி செய்யமுடியும். குழித்தட்டுகளில் நாற்றுகள் உற்பத்தி செய்யும் போது வழக்கமான முறையை விட விதையளவு 30-40 சதவிகிதம் குறைவாகத் தேவைப்படும். நடவுக்குத் தயாரான நாற்றுகளை நடவு வயலுக்கு எடுத்துச் சென்று நடுவது நல்லது. வேரின் வளர்ச்சி சீராகவும் அதிகமாக இருப்பதாலும் நாற்றுகளை வயலுக்கு கொண்டு செல்லும் போது அதிர்ச்சி இல்லாததாலும் நடவு வயலில் நாற்று நடவேண்டிய அவசியம் இல்லை.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com