விவசாய நிலத்தின் தரத்தினை தெரிவிக்கும் மண்வள அட்டைகள்: வேளாண் துறை வழங்கல்

விழுப்புரம் மாவட்டத்தில் தேசிய மண்வள இயக்கத்தில், விவசாயிகளுக்கு “மண்வள அட்டைகள்” வழங்கிடும் பணியை ஆட்சியர்
Updated on
1 min read

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் தேசிய மண்வள இயக்கத்தில், விவசாயிகளுக்கு “மண்வள அட்டைகள்” வழங்கிடும் பணியை ஆட்சியர் எம்.லட்சுமி அண்மையில் தொடங்கி வைத்தார்.
ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வேளாண் இணை இயக்குநர் ராமலிங்கம் விளக்கிப் பேசியது:  தேசிய மண்வள அட்டை இயக்கமானது, பிரதமரால் 2015-ஆம் ஆண்டு பிப்ரவரி 17-இல் ராஜஸ்தானில் துவக்கி வைத்து நாடு முழுவதிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தியாவில் பெருகிவரும் மக்கள் தொகையில், குறைந்து வரும் சாகுபடி பரப்பு மற்றும் அதிகரிக்கும் பருவநிலை மாற்றங்கள் என நகரும் இக்கட்டான இக்காலகட்டத்தில் விவசாயத்திற்கு அடிப்படையான மண்ணின் தன்மை, சத்துகளின் நிலை ஆகியவற்றை ஆராய்ந்து அதன் அடிப்படையில் பயிர்களுக்குத் தேவையான சத்துக்களை சரியாகவும், சரிவிகிதமாகவும் அளிப்பதன் மூலம் மண்வளம் காப்பதோடு, உரச்செலவினைக் குறைத்து விவசாயிகள் குறைந்த செலவில் நிறைந்த மகசூல் எடுத்திட வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

விழுப்புரம் மாவட்டத்தில் “கிரிட் முறையில்” வேளாண்துறை மூலம் கடந்தாண்டு மற்றும் நடப்பாண்டில் 85,409 மண் மாதிரிகள் எடுக்கப்பட்டு, மாவட்டத்திலுள்ள மண் ஆய்வுக்கூடங்கள் மூலம், இதுவரை 44,401 மண் மாதிரிகள் ஆய்வுசெய்யப்பட்டு முடிவுகள் வலைதளத்தில் ஏற்றப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் 5,19,000 விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் வழங்க திட்டமிட்டுள்ளதால், வரும் டிசம்பருக்குள் இப்பணிகள் முடிக்கப்படும்.
இந்த மண்வள அட்டையில், விசாயிகளின் மண்ணின் நயம், கார அமிலத்தன்மை, தழை,  மணி, சாம்பல் சத்துக்கள் மற்றும்நுண்சத்துக்களின் அளவுகள் தெளிவாக வழங்கப்படுகிறது.

விவசாயிகள் தங்கள் மண்ணிற்கு இடவேண்டிய உரங்களின் விவரங்கள் சாகுபடி செய்திட வேண்டிய பயிர்களின் விவரங்கள் அதில் அளிக்கப்படுகிறது.
இதனால் விவசாயிகள், தங்கள் நிலத்திலுள்ள சத்துக்களின் அடிப்படையில் உர மேலாண்மை செய்வதால், ரசாயன உரங்களின் பயன்பாடு குறைவதுடன் மகசூல் அதிகரித்து வருவாயும் அதிகரிக்கும்.
மாவட்டத்திலுள்ள விவசாயிகள், தேசிய மண்வள அட்டை இயக்கத்தில் பயன்பெற வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com