மல்லிகை, ரோஜா சாகுபடி!

மல்லிகை, ரோஜா மலர்கள் சாகுபடி செய்து விவசாயிகள் பயன்பெறுமாறு தோட்டக்கலைத் துறை தெரிவித்துள்ளது.
மல்லிகை, ரோஜா சாகுபடி!
Updated on
2 min read

மல்லிகை, ரோஜா மலர்கள் சாகுபடி செய்து விவசாயிகள் பயன்பெறுமாறு தோட்டக்கலைத் துறை தெரிவித்துள்ளது.
மலர் பயிர்களின் ராணி மல்லிகை. விவசாயிகளின் பொருளாதாரத்தை உயர்த்தும் பயிர்களில் மல்லிகையும் ஒன்று. தொடர்ந்து பத்து வருடங்கள் வரை 
மகசூல் தரும் பயிர். செடிகளின் வளர்ச்சிக்கு ஏற்ப மகசூல் அதிகரிக்கும்.

குண்டு மல்லி 

மல்லிகையை நடவு செய்யும்பொழுது செடிக்கு செடி இடைவெளி 4 க்கு 4 அல்லது 5க்கு 4 அடி இருக்குமாறு நடவு செய்ய வேண்டும். பதியன் குச்சிகளை ஆடி மாதம் நடவு செய்வது மல்லிகைக்கு சிறந்தது. ஒன்றுக்கு ஒன்றரை அடி ஆழம் குழி வெட்டி ஒரு மாதம் கழித்து மண்புழு உரத்துடன் சிறிது மக்கிய ஆட்டு உரம் மற்றும் மண் கலந்து தயார் செய்து கொள்ளவும். நடவு செய்யும் போது செடியை சுற்றிலும் சிறிது மண் அணைத்து நடவு செய்ய வேண்டும். இதனால் வேர்பிடிப்பு நன்றாக இருக்கும். மண் தன்மைக்கு ஏற்ப தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
மாதம் ஒரு முறை நுண்ணூட்ட சத்துகள் வேருக்கு அருகே இட்டு தண்ணீர் கட்ட வேண்டும். உயிர் உரங்களான பாஸ்போபாக்டீரியா, அசோஸ் பைரில்லம், பொட்டாஷ் பாக்டீரியா, தொழு உரத்துடன் கலந்து சிறிது வெல்லம், தயிர் கலந்து மூன்று நாள்கள் நிழலில் வைத்து மாதம் ஒருமுறை தண்ணீர் பாய்ச்சி பின் வேரில் இடுவதால் செடிகளின் வளர்ச்சி நன்றாக இருக்கும். மேலும் செடிகள் திடமாகவும் இருக்கும்.
மல்லிகையில் களைகள் இல்லாமல் பார்த்துக்கொள்வது நல்லது. வரிசைகள் இடைவெளியில் சணப்பை விதைகளை தொடர்ந்து தூவி ஓரளவு வளர்ந்த உடன் மடக்கி உழுதுவிட்டால் நல்ல சத்துகள் மல்லிகை செடிகளுக்கு கிடைக்கும். மேலும் களைகள் எளிதாக கட்டுப்படும்.
மல்லிகை நடவு செய்த ஆறாம் மாதம் முதல் பூக்கள் தோன்றும். ஏப்ரல் மாதம் முதல் அதிகமாக துளிர்கள் தோன்றும். பிறகு மொட்டுகள் தோன்ற ஆரம்பிக்கும். மேம்படுத்தப்பட்ட அமிர்தகரைசல் மற்றும் மீன் அமிலம் ஆகியவற்றை தொடர்ந்து பாசன நீரில் கலந்து விடுவதால் நல்ல மகசூல் கிடைக்கும். மேலும் அளவிற்கு அதிகமாக துளிர் மற்றும் பூக்கள் தோன்றும். வருடத்திற்கு இரண்டு முறை கட்டாயம் மக்கிய ஆட்டு சாணம் இடவேண்டும்.
மல்லிகை செடிகளை அதிகம் தாக்குவது செம்பேன் மற்றும் மொட்டு துளைப்பான். கற்பூர கரைசல் மற்றும் மேம்படுத்தப்பட்ட அமிர்தகரைசல் இவை இரண்டையும் மாறி மாறி தெளித்து வந்தால் எந்தவித பூச்சி தாக்குதலும் இருக்காது. இரண்டாவது வருடம் முதல் பூக்கள் பூத்து முடிந்த உடனே கவாத்து செய்து செடிகள் அதிக உயரம் வளராமல் தடுக்கலாம். இதனால் அதிக துளிர்கள் தோன்றும். மேற்சொன்ன இயற்கை சாகுபடி முறையை பின்பற்றினால் வருடம் முழுவதும் பூக்கள் பறிக்கலாம். மகசூல் அதிகமாக இருக்கும்.


ரோஜா

மல்லிகையை விட அதிக வருவாய் ஈட்டித் தரக்கூடியது ரோஜா மலர்கள். ரோஜாக்களில் சமீபத்திய பயன்பாட்டில் பல ரகங்கள் உண்டு. இதில் முக்கியமாக ஆந்திர சிவப்பு வண்ண ரோஜா, அடுத்து அதிகமாக சாகுபடியில் உள்ளது பட்டன் ரோஜா. பட்டன் ரோஜா முள் இல்லாமல் இருக்கும். சந்தையில் நிலையான வரவேற்பு உள்ள மலர்.
ரோஜா பயிரிட நீர் தேங்காத மண் உகந்தது. 
முக்கியமாக, மணல் மற்றும் களிமண் கலந்த மண் சிறப்பானது. ஆடி பட்டத்தில் நடுவது சிறப்பு. நடவு இடைவெளி பல வகையில் விடப்படுகிறது, நிலத்தின் அளவிற்கேற்ப, 3 க்கு 3, 5 க்கு 2, 4 க்கு 4 அடி அளவில் பயிர் செய்கின்றனர். ரோஜா பல வருடங்கள் தொடர்ந்து மகசூல் தரக்கூடியது. 
அதனால் இயந்திரம் மூலம் களைகளை கட்டுப்படுத்த வசதியாக இடைவெளி விட்டு நடவு செய்யவேண்டும். அவ்வப்பொழுது சணப்பை மற்றும் அகத்தி இரண்டும் கலந்து விதைத்து பின் மடக்கி உழுது விட்டால் செடிகளுக்கு அதிகமான சத்துகள் கிடைக்கும். 
1க்கு 0.5 அளவு குழிகளில் மண் புழுஉரம் இரண்டு கிலோ, வேப்பம்பிண்ணாக்கு அரை கிலோ, சிறிது சுண்ணாம்பு தூள் கலந்து இட்டு பதியன் குச்சிகளை நடவேண்டும். குழுக்களை சுற்றி மண் இருக்கும் அளவிற்கு சுற்றிலும் நன்கு மிதித்து விட வேண்டும்.
ரோஜா செடி நட்ட பத்தாவது நாள் முதல் துளிர்கள் வர ஆரம்பிக்கும். பின்னர் மொட்டுகள் தோன்ற ஆரம்பித்து விடும்.
ரோஜாவை அதிகமாக தாக்கும் நோய்கள், சாறுஉறிஞ்சும் பூச்சி மற்றும் மாவுப் பூச்சி. 
கற்பூர கரைசல் தொடர்ந்து வாரம் ஒரு முறை தெளித்தால் எந்த பூச்சி தாக்குதலும் இருக்காது. அளவிற்கு அதிகமாக துளிர் மற்றும் மொட்டுகள் தோன்றும். 
மேம்படுத்தப்பட்ட அமிர்த கரைசல் வேரில் அளிப்பதன் மூலமாக அதாவது பாசன நீரில் கலந்து விட்டால் நல்ல வளர்ச்சியை காணலாம். தினமும் பூக்கள் பறிக்க வேண்டும். 
பூ பூப்பது நின்ற உடன் கவாத்து செய்வது மிகவும் அவசியம். 
மண் தன்மைக்கு ஏற்ப தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 
தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்வது அவசியம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com