விதைத்த 75-ஆவது நாளில் காய்க்கும் வாள் அவரை

விதைத்த 75-ஆவது நாளில் காய்த்து பலன் தரும் வாள் அவரையைப் பயிரிட்டு பயனடையலாம் என்று விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.
விதைத்த 75-ஆவது நாளில் காய்க்கும் வாள் அவரை
Updated on
1 min read


அரக்கோணம்: விதைத்த 75-ஆவது நாளில் காய்த்து பலன் தரும் வாள் அவரையைப் பயிரிட்டு பயனடையலாம் என்று விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து வேளாண் துறை சார்பில் தெரிவிப்பதாவது:
எஸ்.பி.எஸ். 1 என வேளாண் துறையினரால் குறியிடப்பட்டுள்ள வாள் அவரை அறிமுகம் செய்யப்பட்ட நாளில் இருந்தே விவசாயிகளுக்கு லாபம் தந்து வருகிறது. இப்பயிர் ஒளியுணர்வு இல்லாத காய்கறி பயிர்களில் ஒன்றாகும். இந்த வாள் அவரை 110-120 நாள்களுக்குள் முதிர்ச்சி அடைந்துவிடும். இதை ஆண்டு முழுவதும் பயிர் செய்யலாம். மேலும், பாசனத்துக்கு மிகவும் எற்றது. விதைத்த 75-ஆவது நாளில் இதன் காய்கள் அறுவடைக்கு வந்துவிடும். தனிப்பயிராக ஒரு ஹெக்டருக்கு 1,356 கிலோ விதை மகசூலையும், 7,500 கிலோ காய் மகசூலையும் தரவல்லது. மேலும், இதை வரப்புப் பயிராகவும், ஊடுபயிராகவும் மற்றும் நிழல் பயிராகவும் பயிரிடலாம்.
மானாவாரிகளில் ஜூன், ஜூலை மாதங்களிலும், செப்டம்பர், அக்டோபர் மாதங்களிலும், கோடையில் பிப்ரவரி, மார்ச் மாதங்களிலும் இதைப் பயிரிடலாம். குறிப்பாக வடதமிழக மாவட்டங்களில் மானாவாரிகள் அதிகம் இருப்பதால் இப்பயிர் இம்மாவட்டங்களுக்கு ஏற்ற பயிராகும். 1990-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வாள்அவரை பயிர் குட்டையான, நேரான, படரும் தாவரத் தோற்றம் கொண்டது. பச்சை நிறத்தில் இருக்கும் இதன் கிளைகள் 6 முதல் 8 எண்ணிக்கை கொண்டவையாக இருக்கும். இலைக்கோணத்தில் பூங்கொத்தும் தடித்த வெளிர்ஊதா நிறத்தில் மலர்களும் இருக்கும். இதன் காய்கள் நீளமாகவும், தொங்குபவையாகவும் இருக்கும். பச்சை, தட்டையான சடைப்பகுதி கொண்டவையாக காய்கள் இருக்கும். இதன் விதைகள் பால்வெள்ளை நிறத்தில் இருக்கும். இதன் 60 சதவீத பூக்கள் 45 முதல் 50 நாள்களில் பூத்துவிடும். 
தானியப் பயிர்களிலேயே மிகவும் சத்தான, சுவையான காய்கறியான வாள் அவரை, 110 முதல் 120 நாள்கள் எனும் குறைந்த காலம் கொண்டவை ஆகும். இதில், பூச்சி மற்றும் நோய் பாதிப்பு அதிக அளவில் காணப்படுவதில்லை என்பதால் இதை பயிரிட்டு லாபம் பார்த்த விவசாயிகள் வேறு பயிருக்கு மாறுவதில்லை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com