தேசிய பேரிடர் நிவாரண நிதி விதிகளை மாற்றக் கூடாது: சித்தராமையா கோரிக்கை

தேசிய பேரிடர் நிவாரண நிதி விதிகளில் மாற்றம் செய்யக் கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் முதல்வர் சித்தராமையா கோரிக்கை மனு அளித்தார்.

தேசிய பேரிடர் நிவாரண நிதி விதிகளில் மாற்றம் செய்யக் கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் முதல்வர் சித்தராமையா கோரிக்கை மனு அளித்தார்.
 தில்லியில் வியாழக்கிழமை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கைச் சந்தித்த முதல்வர் சித்தராமையா, தேசிய பேரிடர் நிவாரண நிதி விதிகள் குறித்து கோரிக்கை மனுவை அளித்தார். அந்த மனுவில், மாநில பேரிடர் உதவி நிதியின்கீழ் 2015-16 முதல் 2019-20-ஆம் ஆண்டு வரையிலான 10 ஆண்டுகளுக்கு கர்நாடகத்திற்கு ரூ.1,527 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
 பூகோள ரீதியாக பாதிப்பு குறைவான மற்றும் பாசன பயிர் பகுதி இல்லாத மத்தியபிரதேசம், மகாராஷ்டிரம், தமிழகம், ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களைவிட கர்நாடகத்திற்கு மாநில பேரிடர் உதவி நிதி குறைவாக ஒதுக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரத்திற்கு ரூ.8195கோடி, குஜராத்திற்கு ரூ.3894கோடி, தமிழகத்திற்கு ரூ.3751கோடி, ஆந்திரமாநிலத்திற்கு ரூ.2430கோடி, ராஜஸ்தானுக்கு ரூ.2153 கோடியும் கர்நாடகத்திற்கு இதைவிடகுறைவாக ரூ.1527கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
 கர்நாடக மாநிலத்தில் தொடர்ச்சியாக பேரிடர் நிகழ்ந்தவண்ணம் உள்ளது. கடந்த 16 ஆண்டுகளில் 13 ஆண்டுகள் வறட்சியான ஆண்டுகளாகும். 1990-2005-ஆம் ஆண்டுகளில் மொத்த பேரிடர் நிவாரண நிதியில் 2 சதமான ரூ.1435.95 கோடி கர்நாடகத்திற்கு ஒதுக்கப்பட்டது. மாநிலத்தில் அடிக்கடி பேரிடர்கள் நடந்தபோதும், பேரிடர் மேலாண்மைக்கு கர்நாடக அரசு அதிக நிதி செலவிட்டபோதும், 2015-2020-ஆம் ஆண்டில் மொத்த பேரிடர் நிவாரண நிதி ரூ.43750கோடியாக இருந்தபோதும், அதில் 2.4 சத தொகையை மட்டுமே கர்நாடகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
 மாநில பேரிடர் உதவி நிதி, தேசிய பேரிடர் நிவாரண நிதி ஆகியவற்றுடன் பேரிடர் மேலாண்மைக்கு மாநில அரசு கூடுதலாக செலவிட்டுவருகிறது. அண்மையில் வெளியிடப்பட்டுள்ள வறட்சிமேலாண்மை விதிமுறைகள்-2016 அமல்படுத்தப்பட்டால் மத்திய அரசு வழங்கும் நிதி ஆதாரம் குறைந்துவிடும் அபாயம் உள்ளது. மேலும் இந்த புதிய விதிமுறைகளால் மிதமான வறட்சிக்கு ஆள்பட்டுள்ள வட்டங்களுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியின்கீழ் நிதி உதவி அளிக்க இயலாதசூழ்நிலை உருவாகியுள்ளது.
 இந்த சூழலில் சொற்பமாக ஒதுக்கப்பட்டுள்ள மாநில பேரிடர் உதவிநிதியில் வறட்சிநி வாரணப் பணிகளைச் செயல்படுத்த நேரிடும். இது மாநில அரசின் நிதி ஆதாரங்களை வெகுவாக பாதிக்கும். எனவே, மாநில பேரிடர் உதவி நிதியை உயர்த்துமாறு பிரதமர் மோடிக்கு ஏற்கெனவே கடிதம் எழுதியிருக்கிறேன்.
 எனவே, பேரிடர்களால் ஏற்படும் பாதிப்புகளின் அடிப்படையில் நிதி ஆதாரங்களை ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். வடகர்நாடகத்தின் உள்பகுதியில் முன்பருவமழை காலத்தில் அடிக்கடி பெய்யும் ஆலங்கட்டிமழையால் உயர்மதிப்பிலான தோட்டக்கலை பயிர்கள் நாசமாகியுள்ளன. 2009-10, 2010-11, 2013-14-ஆம் ஆண்டுகளில் ஆலங்கட்டி மழையால் உடைமைகள் மட்டுமன்றி உயிர்சேதமும் ஏற்பட்டது.
 மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை திருத்தியமைத்து கொண்டுவந்துள்ள வறட்சி மேலாண்மை விதிமுறைகள் 2017-ஆம் ஆண்டின் காரீப் பருவம்முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்தவிதிகளின்படி வறட்சிப்பகுதியாக அறிவிக்க வகுக்கப்பட்டுள்ள விதிமுறை கடுமையாக உள்ளதோடு, பாதிக்கப்பட்டோர் நிவாரண உதவிகளை பெறுவதும் சிரமமாகியுள்ளது.
 எனவே, வறட்சி பகுதியாக அறிவிக்க ஏற்கெனவே விதிக்கப்பட்டிருந்த விதிமுறைகளில் மாற்றம் செய்துள்ளதைத் திரும்பப் பெற வேண்டும். இந்த மாற்றங்கள்விவசாயிகளை கடுமையாக பாதிக்கும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். மேலும், தேசிய பேரிடர் நிவாரண நிதியின்கீழ் மாநிலத்திற்கு மத்திய அரசு ஒதுக்கும் நிதியின் அளவும் குறைந்துவிடும் அபாயம் உள்ளது. எனவே,விவசாயிகளுக்கு சாதகமான வகையில் விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 "ரயில்வே திட்டங்களை விரைவுபடுத்த வேண்டும்'
 கர்நாடகத்தில் செயல்படுத்தப்படும் ரயில்வே திட்டங்களை விரைவுபடுத்துமாறு மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவிடம் முதல்வர் சித்தராமையா கோரிக்கை மனு அளித்தார்.
 தில்லியில் வியாழக்கிழமை மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவை முதல்வர் சித்தராமையா சந்தித்து கர்நாடகத்தில் செயல்படுத்தப்படும் ரயில்வே திட்டங்களை விரைவுபடுத்துமாறு வலியுறுத்தி கோரிக்கை மனுவை அளித்தார். அந்த மனுவில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:
 கர்நாடகத்தில் ரயில் பெட்டி தொழிற்சாலை தொடங்க கர்நாடக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.1461கோடியில் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ள இந்தத் திட்டத்திற்கான செலவில் 50 சத நிதியை மாநில அரசு ஏற்பது என்றும், அதற்கான நிலத்தை இலவசமாக ஒதுக்குவது என்றும் ஏற்கெனவே ஒப்புக் கொள்ளப்பட்டு, நிகழ் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் ரூ.50 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கு ரயில்வே வாரியத்திடம் இருந்து பதிலை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.
 கடலோர கர்நாடகத்தில் இருந்து உள்மாநிலத்திற்கு இணைப்பை ஏற்படுத்த ஹுப்பள்ளி-அங்கோலா இருப்புப் பாதையை அமைக்க 1998-ஆம் ஆண்டு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனாலும், இந்தத் திட்டம் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ளது. இந்தத் திட்டத்திற்கான விவர அறிக்கையைத் தயாரிக்க தேவையான உதவிகளை செய்ய மாநில அரசு தயாராக இருக்கிறது.
 பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதோடு, பொதுமக்களும் கோரிக்கை விடுப்பதால் மைசூரு ரயில் நிலையத்தை விரிவாக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்த ரயில் நிலையத்தை பன்னாட்டு தரத்தில் அமைக்க வேண்டும். இதற்கான தேவை இருப்பதால், மைசூரில் இருந்து பெங்களூரு வழியாக சென்னைக்கு சதாப்தியுடன் கூடுதலாக அதிவிரைவு ரயில்களை இயக்க வேண்டும்.
 பெங்களூரு-ஹுப்பள்ளி, பெங்களூரு-கலபுர்கி நகரங்களுக்கு இடையே கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும். பெங்களூரு மாநகரில் வாகன அடர்த்தி அதிகரித்துள்ளதால், பெங்களூரிலிருந்து ஒயிட்பீல்டுக்கு நான்கு இணை ரயிலை அறிமுகம் செய்யவேண்டிய அவசியம் எழுந்துள்ளது.
 மேலும், கன்டோன்மென்ட் முதல் ஒயிட்பீல்டு வரையிலான 19.8கிமீ நீளத்திற்கு ரூ.22 கோடி செலவில் மூன்றாம் இருப்புப்பாதையை அமைக்க திட்டம் வகுத்தும் அது கிடப்பில் போடப்பட்டுள்ளது. பெங்களூரு கன்டோன்மென்ட், யஷ்வந்த்பூர், எலஹங்கா ரயில்நிலையங்களை மேம்படுத்த வேண்டும்.
 கர்நாடகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 72 ரயில்நிலையங்களில் மேற்கூரை சூரியஒளி உற்பத்தித் திட்டத்தைச் செயல்படுத்தத் கேட்டுக் கொள்கிறேன். பெங்களூரு மற்றும் ஹுப்பள்ளியில் பயணியர் விடுதிகளை அமைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். மங்களூரில் உள்ள 25 கி.மீ. நீளமுள்ள இருப்புப்பாதையை தெற்கு ரயில்வேயின் கட்டுப்பாட்டில் இருந்து தென்கிழக்கு ரயில்வேயின் கட்டுப்பாட்டுக்கு மாற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
 யாதகிரியில் அமைக்கப்பட்டுள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையை விரைவாகத் திறக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com