அப்துல் கலாமின் இணையதளம் நாட்டுக்கு மறுஅர்ப்பணிப்பு

அப்துல் கலாமின் இணையதளம் சாதாரண குடிமக்களால் நாட்டுக்கு மறுபடியும் அர்ப்பணிக்கப்பட்டது.
அப்துல் கலாமின் இணையதளம் நாட்டுக்கு மறுஅர்ப்பணிப்பு

அப்துல் கலாமின் இணையதளம் சாதாரண குடிமக்களால் நாட்டுக்கு மறுபடியும் அர்ப்பணிக்கப்பட்டது.

சாதனை இந்தியர்களை அறிந்துகொள்வதற்காக www.billionbeats.in (நூறு கோடிதுடிப்புகள்) என்ற இணையதளத்தை குடியரசு முன்னாள் தலைவர் டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் 2007}ஆம் ஆண்டில் தொடங்கி நடத்திவந்தார். இதில், புதியன செய்து சமூக வளர்ச்சிக்கு பங்காற்றிய சாதனையாளர்கள் அறிமுகம், தனது பேச்சுகள், சிந்தனைகள், கேள்வி} பதில்களையும் அப்துல் கலாம் வெளியிட்டு வந்தார். இந்த இணையதளம் சில காரணங்களால் செயல்படாமல் முடங்கி கிடந்தது.

இந்த நிலையில், அப்துல் கலாமின் மறைவுக்கு பின்னர் அவரது பேத்தியும், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞருமான நாகூர் ரோஜா இணையதளத்தை மீண்டும் செயல்படுத்தியிருக்கிறார்.

மறு அர்ப்பணிப்பு: இதையடுத்து, ராமேசுவரத்தில் உள்ள டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் அறக்கட்டளை மற்றும் பெங்களூரைச் சேர்ந்த ஊக்கம்நிறை இந்தியன் அறக்கட்டளை ஆகியன சார்பில் பெங்களூரு புதிய திப்பசந்திராவில் உள்ள அரசு தமிழ் ஆரம்பப்பள்ளியில் சனிக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் இந்த இணையதளம் மறுஅர்ப்பணிப்பு செய்யப்பட்டது.

சாதாரணகுடிமக்களான ராணி (வீட்டுப் பணியாளர்), ராஜேஸ்வரி (அடுக்குமாடி உதவியாளர்), செந்தில்(கட்டடத் தொழிலாளர்), பெஞ்சில்யன் (அலுவலக உதவிபையன்), சரோஜா (பள்ளி ஆயாம்மா) ஆகிய சாதாரணமானவர்களே இணையதளத்தை அர்ப்பணித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்வழியில் பயின்றுவரும் 40 குழந்தைகள் கலந்துகொண்டு கரவொலி எழுப்பி இணையதளத்தை வரவேற்றனர். போக்குவரத்து காவலர் "சிங்கம்' பாஸ்கர், பாரசூட் கலைஞர் ரெஞ்சித் சி.தவலூர், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள், அப்துல் கலாம் ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியை எச்.கலாவதி கூறியதாவது:-
 கலாமின் சிந்தனைகள், போதனைகள் காலம் கடந்தும் நிலைத்திருக்கும். அவரது இணையதலத்தை மீண்டும் தொடக்கிவைக்க எங்கள் பள்ளியை தேர்ந்தெடுத்ததற்கு என்றென்றும் கடன்பட்டுள்ளோம். இந்த நிகழ்வு பள்ளி மாணவர்களுக்கு பெரும் ஊக்கமாக அமையும்" என்றார் அவர்.

இதுகுறித்து நாகூர் ரோஜா கூறுகையில்:-
 இந்தியர்களின் வெற்றிகரமான சாதனைகள், மகிழ்ச்சியான தருணங்களை பரப்ப வேண்டுமென்று விரும்பியே இந்த இணையதளத்தை அப்துல் கலாம் நடத்தினார். சாதனை புரிந்தவர்களை அங்கீகரித்து, இளம் தலைமுறைக்கு ஊக்கம் நிறைந்தவர்களாக திகழ 'பில்லியன் பீட்ஸ்' இந்தியர்களுடன் இணைப்புப்பாலமாக விளங்கும். மக்களிடையே அறிவு தொடர்புகளை ஏற்படுத்த வேண்டும் என்ற கலாமின் நோக்கத்தை முன்னெடுக்கவே இணையதளத்தை மீண்டும் தொடங்கியிருக்கிறோம்.

இணையதளத்தில் 34 ஆண்டுகளில் 140 முறை ரத்த தானம் வழங்கிய காஷ்மீரை சேர்ந்த ஷபிர் உசேன்கான், மதுரை ரயில் நிலைய சுமையாளர் சுந்தர், மைசூரைச் சேர்ந்த முனைவர் பட்டம் பெற்றபார்வையற்ற மஞ்சுநாதாஉள்ளிட்டோரை பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. 'எனது கனவின் இந்தியா' என்ற தலைப்பிலான பகுதி பள்ளி மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com