டிஐஜி ரூபா பணியிட மாற்றம்: சிறைக் கைதிகள் உண்ணாவிரதம்

சிறைத் துறை டிஐஜி ரூபா பணியிட மாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பெங்களூரு பரப்பன அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறையில் செவ்வாய்க்கிழமை கைதிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

சிறைத் துறை டிஐஜி ரூபா பணியிட மாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பெங்களூரு பரப்பன அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறையில் செவ்வாய்க்கிழமை கைதிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
 பெங்களூரு பரப்பன அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறையில் முறைகேடுகள் நடப்பதாக சிறைத் துறை டிஐஜியாக இருந்த ரூபா, விசாரணை நடத்தி அறிக்கை அளித்தார். இது மாநில, தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, சிறைத் துறை டிஐஜியாக பணியாற்றி வந்த ரூபாவை, மாநில போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்புத் துறை டிஐஜியாக பணியிட மாற்றம் செய்து கர்நாடக அரசு உத்தரவிட்டது.
 மேலும், சிறைத் துறை டிஜிபியாகப் பணியாற்றிய சத்தியநாராயண ராவ், சிறைத் துறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் ஆகியோரை வேறு இடங்களுக்கு பணியிட மாற்றம் செய்து மாநில அரசு உத்தரவிட்டது.
 இந்த நிலையில், டிஐஜி ரூபா பணியிட மாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 200-க்கும் மேற்பட்ட கைதிகள் செவ்வாய்க்கிழமை காலை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
 இதேபோல, சிறைத் துறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, சிறைக் கைதிகளில் சிலர் கலவரத்தில் ஈடுபட்டனர். சிறைத் துறை கண்காணிப்பாளர் (பொறுப்பு) அனிதா, கைதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
 அப்போது, கிருஷ்ணகுமாருக்குப் பதிலாக கண்காணிப்பாளர் பொறுப்பை ஏற்றுள்ள அனிதாவுக்கு எதிராக கைதிகள் முழக்கங்களை எழுப்பினர். இதனால், சிறையில் கொந்தளிப்பான சூழ்நிலை ஏற்பட்டது. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர சிறைக்கு பரப்பன அக்ரஹாரா போலீஸார் வரவழைக்கப்பட்டனர்.
 சிறைக்குள் வந்த போலீஸார், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட கைதிகள் உள்ளிட்ட அனைவரையும் சமாதானப்படுத்தி, போரட்டத்தைக் கைவிடச் செய்தனர். போராட்டத்தைக் கைவிட்ட கைதிகள், சிறையில் உள்ள கைதிகள் அனைவரும் சீருடை அணிவதை சிறைத் துறை கண்காணிக்க வேண்டும் என்றனர்.
 கைதிகளின் கோரிக்கையை நடைமுறைப்படுத்துவதாக சிறைத் துறை அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து, சிறைத் துறை டிஜிபியாக மேக்ரீக் செவ்வாய்க்கிழமை பதவியேற்றுக் கொண்டார். சிறைத் துறை டிஐஜியாகப் பணியாற்றி வந்த ரூபா மாநில போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்புத் துறை டிஐஜியாக பதவி ஏற்றுக் கொண்டார். தனக்கு பிரச்னை ஏற்பட்டபோது ஆதரவு தெரிவித்த புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்த ரூபா, பணியிட மாறுதல் குறித்து கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com