குடியரசுத் தலைவர் தேர்தல்: எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரை ஆதரிக்க மஜத தயார்

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் நிறுத்தும் பொது வேட்பாளரை ஆதரிக்க மஜத தயாராக உள்ளதாக அக்கட்சியின் தேசியத் தலைவரும், முன்னாள் பிரதமருமான எச்.டி.தேவெ கெளடா தெரிவித்தார்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் நிறுத்தும் பொது வேட்பாளரை ஆதரிக்க மஜத தயாராக உள்ளதாக அக்கட்சியின் தேசியத் தலைவரும், முன்னாள் பிரதமருமான எச்.டி.தேவெ கெளடா தெரிவித்தார்.
 இதுகுறித்து தில்லியில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
 கர்நாடக சட்டப்பேரவைக்கு முன்கூட்டியே தேர்தல் அறிவிக்கப்பட்டால் அதை எதிர்கொள்ள மஜத தயாராக உள்ளது. முன்கூட்டியே தேர்தல் நடத்தினால் அதை எதிர்க்கமாட்டோம். எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ் கட்சிகளைப் புறக்கணித்து, மஜதவுக்கு மக்கள் ஆதரவளிக்கவிருக்கின்றனர்.
 சட்டப்பேரவைத் தேர்தலில் மஜத அறுதிப் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைக் கைப்பற்றும். சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் குறித்து பாஜக, காங்கிரஸ் கட்சிகள் கருத்துக் கணிப்புகளை நடத்திவருவது குறித்து எனக்கு தகவல் கிடைத்தது.
 எனது குடும்பத்தினர் சட்ட விரோதமாக ரூ.20 ஆயிரம் கோடி சொத்துகள் குவித்துள்ளதாக வருமான வரித் துறையிடம் வெங்கடேஷ் கெüடா என்ற காங்கிரஸ் பிரமுகர் புகார் அளித்திருக்கிறார். அதுகுறித்து நான் கருத்து கூறவிரும்பவில்லை. இந்த குற்றச்சாட்டில் உண்மையில்லை.
 இந்த விவகாரம் குறித்து மஜத மாநிலத் தலைவர் எச்.டி.குமாரசாமி விளக்கம் அளித்திருக்கத் தேவையில்லை. குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரை எதிர்த்து திறமையான ஒருவரை களமிறக்குவது குறித்து விவாதிக்க காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, தில்லியில் வெள்ளிக்கிழமை அரசியல் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்.
 இந்த கூட்டத்தில் மஜத சார்பில் கட்சியின் எம்பி புட்டராஜூ கலந்து கொள்ளவிருக்கிறார். எதிர்க்கட்சிகள் இணைந்து பொதுவேட்பாளராக யாரை நிறுத்தினாலும் அந்த முடிவை மஜத ஆதரிக்கும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com