தரம் சிங் மறைவுக்கு சட்டப் பேரவையில் இரங்கல்

முன்னாள் முதல்வர் தரம் சிங் உள்ளிட்டோரின் மறைவுக்கு,  கர்நாடக சட்டப் பேரவையில் இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முன்னாள் முதல்வர் தரம் சிங் உள்ளிட்டோரின் மறைவுக்கு,  கர்நாடக சட்டப் பேரவையில் இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கர்நாடக சட்டப் பேரவையின் குளிர்காலக் கூட்டத் தொடர் பெலகாவியில் திங்கள்கிழமை தொடங்கியது.  அப்போது மறைந்த முன்னாள் முதல்வர் தரம் சிங்,  முன்னாள் அமைச்சர் கமருள் இஸ்லாம்,  சட்டப்பேரவை உறுப்பினர்  சிக்கமாது,  சட்டமேலவை முன்னாள் தலைவர் ஆர்.பி.போத்தேதார்,   சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள் வித்யாதர் குருஜி, சித்தனகெளடா சோமனகெளடா பாட்டீல்,  பி.பி.சிவப்பா, ஜெயபிரகாஷ் ஷெட்டி, பி.ஜி.கோட்டரப்பா,  விஞ்ஞானி யு.ஆர்.ராவ்,  மூத்த யக்ஷகானா கலைஞர் சித்தானி ராமசந்திர ஹெக்டே,  நாடகக் கலைஞர் ஹெனகி பாலப்பா,  பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ், இலக்கியவாதி அச்யதன் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தை சட்டப் பேரவைத் தலைவர் கே.பி.கோலிவாட் முன்மொழிந்தார்.
இந்தத் தீர்மானத்தை ஆதரித்து முதல்வர் சித்தராமையா பேசியது:-
மறைந்த முன்னாள் முதல்வர் என்.தரம்சிங்,  எதிரிகளே இல்லாத நல்ல பண்பாளராகவும்,   மக்கள் நேசிக்கும் தலைவராக விளங்கினார்.  அவரது புகழ் கர்நாடகம் உள்ளவரை நிலைத்து நிற்கும்.  அதேபோல மறைந்த அமைச்சர் கமருள் இஸ்லாம், சட்டப் பேரவை உறுப்பினர் சிக்கமாது ஆகியோரின் சேவை அளப்பரியது.
விஞ்ஞானி யு.ஆர்.ராவ்,  மூத்த யக்ஷகானா கலைஞர் சித்தானி ராமசந்திர ஹெக்டே,  நாடகக் கலைஞர் ஹெனகி பாலப்பா,  பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ்,  இலக்கியவாதி அச்யதன் ஆகியோரின் சேவை பாராட்டுதலுக்குரியது. இவர்கள் மறைவால் வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துகொள்கிறேன். மறைந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்கிறேன் என்றார் அவர்.
இதைத் தொடர்ந்து,  தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சித் தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர், மஜத சட்டப் பேரவைக் குழுத் துணைத் தலைவர் ஒய்.எஸ்.வி.தத்தா உள்ளிட்டோர் பேசினர். இதன் முடிவில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் இரண்டு நிமிடம் எழுந்து நின்று மறைந்தவர்களுக்கு மெளன அஞ்சலி செலுத்தினர்.
சட்டமேலவையிலும்
அஞ்சலி: இதேபோல்,  மறைந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தை சட்ட மேலவையில் அதன் தலைவர் டி.எச்.சங்கர்மூர்த்தி முன்மொழிந்தார். அதன்மீது அவை முன்னவரான சீதாராம், எதிர்க்கட்சித் தலைவர் கே.எஸ்.ஈஸ்வரப்பா,  மஜத சட்ட மேலவைக் குழுத் தலைவர் பசவராஜ் ஹோரட்டி உள்ளிட்டோர் பேசினர். இதன்பின்னர்,  உறுப்பினர்கள் இரண்டு நிமிடம் எழுந்து நின்று மெளன அஞ்சலி செலுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com