போராட அனைவருக்கும் உரிமை உள்ளது: அமைச்சர் ரமேஷ்குமார்

தங்கள் உரிமைக்காக போராடுவதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர் ரமேஷ்குமார் கூறினார்.

தங்கள் உரிமைக்காக போராடுவதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர் ரமேஷ்குமார் கூறினார்.
 பெலகாவியில் திங்கள்கிழமை தொடங்கிய கர்நாடக சட்டப் பேரவை கூட்டத் தொடரில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது:-
தனியார் மருத்துவமனைகளைக் கட்டுப்படுத்தும் சட்ட  மசோதாவைக் கண்டித்து,  தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல  பகுதிகளில் நோயாளிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை ஈடு செய்யும் வகையில் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் கூடுதலாகப் பணியாற்றி வருகின்றனர்.  இருந்தாலும்,  நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் தேக்கநிலை உள்ளது.
தனியார் மருத்துவமனைகளைக் கட்டுப்படுத்தும் சட்ட  மசோதாவை தாக்கல் செய்வது அரசின் தனிப்பட்ட விருப்பமல்ல.  இந்த மசோதாவுக்கு சட்டப் பேரவை, மேலவை உறுப்பினர்களின் ஒப்புதல் பெற்ற பின்னரே அமல்படுத்தப்படும்.  இதில் உள்ள பிரச்னைகள், சவால்கள் உள்ளிட்டவை குறித்து தீவிரமாக ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
சட்ட மசோதாவே தேவையில்லை என தனியார் மருத்துவர்கள் கூறுவதில் நியாயமில்லை.  தங்கள் தரப்பு நியாயத்தை கூறும்பட்சத்தில் அவர்களுக்கு ஏற்ப மசோதாவில் திருத்தம் செய்யப்படும்.  யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கம் அரசுக்கு இல்லை.
மருத்துவர்கள்,  நோயாளிகள் என இரு தரப்பினும் பயனடைய வேண்டும் என்பது கர்நாடக அரசின் நோக்கமாக உள்ளது.  இதனை புரிந்து கொண்டு தங்கள் போராட்டத்தை தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் திரும்பப் பெற வேண்டும்.  மருத்துவர்கள் மட்டுமின்றி உரிமைக்காகப் போராட்டம் நடத்துவதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com