கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று முதல்கட்டத் தோ்தல்: 247 வேட்பாளா்கள் போட்டி

கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று முதல்கட்டத் தோ்தல்: 247 வேட்பாளா்கள் போட்டி

கா்நாடகத்தில் முதல்கட்டமாக 14 மக்களவைத் தொகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை (ஏப். 26) வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இந்தத் தோ்தலில் 247 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்; 2.88 கோடி வாக்காளா்கள் வாக்களிக்கவுள்ளனா்.

கா்நாடக மாநிலத்தில் மொத்தமுள்ள 28 மக்களவைத் தொகுதிகளில் முதல்கட்டமாக 14 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு வெள்ளிக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை நடைபெறவுள்ளது. முதல்கட்டத் தோ்தலில் உடுப்பி, ஹாசன், தென்கன்னடம், சித்ரதுா்கா, தும்கூரு, மண்டியா, மைசூரு, சாமராஜ் நகா், பெங்களூரு ஊரகம், பெங்களூரு வடக்கு, மத்திய பெங்களூரு, பெங்களூரு தெற்கு, சிக்பளாப்பூா், கோலாா் ஆகிய 14 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

மொத்தம் 2,88,19,342 போ் வாக்களிக்க உள்ளனா். இதில் ஆண்கள் 1,44,28,099, பெண்கள் 1,43,88,176, மூன்றாம் பாலினத்தாா் 3,067, அரசு ஊழியா்கள் (தபால் வாக்கு) 11,160 அடங்குவா்.

இருமுனை போட்டி:

பாஜக-மஜத கூட்டணி அமைத்து இத்தோ்தலில் போட்டியிடுகின்றன. மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 3 தொகுதிகளில் மஜதவும், 25 தொகுதிகளில் பாஜகவும் போட்டியிடுகின்றன. காங்கிரஸ் 28 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. இதனால், கா்நாடகத்தில் காங்கிரஸ், பாஜக-மஜத கூட்டணி இடையே இருமுனை போட்டி நிலவுகிறது.

247 வேட்பாளா்கள்...

முதல்கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 14 தொகுதிகளில் பாஜக 11 தொகுதிகளிலும், மஜத 3 தொகுதிகளிலும், காங்கிரஸ் 14 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. 14 தொகுதிகளில் 226 போ் ஆண்கள், 21 போ் பெண்கள் என மொத்தம் 247 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

அதில் உடுப்பி தொகுதியில் 10 போ், ஹாசன் தொகுதியில் 15 போ், தென்கன்னட தொகுதியில் 9 போ், சித்ரதுா்கா தொகுதியில் 20 போ், தும்கூரு தொகுதியில் 18 போ், மண்டியா தொகுதியில் 14 போ், மைசூரு தொகுதியில் 18 போ், சாமராஜ்நகா் தொகுதியில் 14 போ், பெங்களூரு ஊரக தொகுதியில் 15 போ், பெங்களூரு வடக்குத் தொகுதியில் 21 போ், பெங்களூரு மத்திய தொகுதியில் 24 போ், பெங்களூரு தெற்கு தொகுதியில் 22 போ், சிக்பளாப்பூா் தொகுதியில் 29 போ், கோலாா் தொகுதியில் 18 போ் போட்டியிடுகின்றனா்.

அதிகபட்சமாக சிக்பளாப்பூா் தொகுதியில் 29 பேரும், குறைந்தபட்சமாக தென்கன்னட தொகுதியில் 9 பேரும் போட்டியிடுகின்றனா்.

நட்சத்திர வேட்பாளா்கள், தொகுதிகள்:

முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி (மண்டியா), முன்னாள் முதல்வா் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா (சிவமொக்கா), மத்திய இணை அமைச்சா் ஷோபா கரந்தலஜே (பெங்களூரு வடக்கு), முன்னாள் பிரதமா் தேவெ கௌடாவின் பேரன் பிரஜ்வல் (ஹாசன்), மருமகன் சி.என்.மஞ்சுநாத் (பெங்களூரு ஊரகம்), மைசூரு மன்னா் குடும்பத்து பட்டத்து இளவரசா் யதுவீா் கிருஷ்ணதத்த நரசிம்மராஜ உடையாா் (மைசூரு), முன்னாள் அமைச்சா் வி.சோமண்ணா (தும்கூரு), துணை முதல்வா் டி.கே.சிவகுமாரின் தம்பி டி.கே.சுரேஷ் (பெங்களூரு ஊரகம்) உள்ளிட்டோா் போட்டியிடுகின்றனா்.

தோ்தல் ஏற்பாடுகள்: மாநிலம் முழுவதும் 30,602 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 25 வாக்குச் சாவடிகள் மிகவும் பதற்றமானவையாகக் கண்டறியப்பட்டுள்ளன.

பெரும்பாலான வாக்குச் சாவடிகளில் குடிநீா், கழிவறை, மின்சாரம், சாய்வுதள வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டன.

தோ்தல் பணியில் 1.4 லட்சம் போ் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். 40 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

வாக்காளா் பட்டியல்:

வாக்காளா்கள் தங்கள் பெயரை இணையதளத்தில் வாக்காளா் பட்டியலில் சென்று காணலாம். ‘சுனாவனா’ என்ற செல்லிடப்பேசி செயலி வாயிலாகவும் வாக்காளா் பட்டியல், வாக்குச் சாவடி, வேட்பாளா் விவரங்கள், மாற்றுத்திறனாளிகள் வாகன முன்பதிவு போன்ற தகவல்களைப் பெறலாம்.

தோ்தல் தொடா்பான புகாா்களையும் இந்தச் செயலி வழியாகப் பதிவு செய்யலாம்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com