பேரவைத் தேர்தல் 2018

இதுவரை முதல்வர்கள்...
கடிதாள் மஞ்சப்பா
(19.8.1956-21.10.1956)
கடிதாள் மஞ்சப்பா, சிவமொக்கா மாவட்டத்தின் தீர்த்தஹள்ளி வட்டத்தில் உள்ள ஹரொகொலிகே  கிராமத்தில் 1907, ஜூலை மாதத்தில் துக்கனே கெளடா மற்றும் சென்னம்மா தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். 
சிவமொக்காவில் முன்னணி வழக்குரைஞராக பணியாற்றி வந்த கடிதாள் மஞ்சப்பா, சுதந்திரப் போராட்டக் காலத்தில் காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து பல்வேறு போராட்டங்களில் பங்கெடுத்தவர். 1942-இல் வெள்ளையனே வெளியேறு, 1947-இல் மைசூரு செல்வோம் போராட்டங்களில் கலந்துகொண்டு சிறைவாசத்தையும் அனுபவித்தவர். 
1941 முதல் 1944 வரை மைசூரு பிரதிநிதித்துவ சபையின் உறுப்பினராகவும் கடிதாள் மஞ்சப்பா பணியாற்றினார். 1945 முதல் 1949-ஆம் ஆண்டு வரை மைசூரு சட்ட மேலவையின் உறுப்பினராகவும், 1950 முதல் மைசூரு சட்டப்பேரவை உறுப்பினராகவும் சேவையாற்றினார். 1952-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தீர்த்தஹள்ளி-கொப்பா தொகுதியில் இருந்து வெற்றிபெற்றார். உழவர்களின் நலனுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தியவர் கடிதாள் மஞ்சப்பா. இவரது போராட்டத்தின் பயனாகவே மைசூரு இனாம்(தனிநபர் மற்றும் பொதுவகை)தடைச்சட்டம் மற்றும் மைசூரு இனாம்(மதம் மற்றும் அறக்கொடை)தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டது. 
கன்னடம் பேசும் பிற மாகாணங்களை சேர்த்துக் கொள்ளாமல், உடையார் ஆட்சி காலத்தில் இருந்த பண்டைய மைசூரு ராஜ்ஜியம் தனது தனித்துவத்தை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற கருத்துடையவர் கடிதாள் மஞ்சப்பா. பண்டைய மைசூரு ராஜ்ஜியம், அண்டைய குடகு, வடகன்னடம், கொள்ளேகால் மாவட்டங்களை உள்ளடக்கிய ஒரு மாநிலம்; முந்தைய பம்பாய் மற்றும் ஹைதராபாத் ஆட்சிப்பகுதிகளை உள்ளடக்கிய ஒரு மாநிலம் என்று இரு மாநிலங்களாக தற்போதைய கர்நாடகம் செயல்பட வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டு, தனது கருத்தை வெளிப்படுத்தியவர். 
கன்னடம் பேசும் அண்டை மாகாணங்களை சேர்த்துக் கொண்டால், உடையார் ஆட்சியால் நல்லவளர்ச்சி கண்டுள்ள மைசூரு, மாதிரி மாநிலம் என்ற தனது நற்பெயரை இழக்க நேரிடும் என்று கடிதாள் மஞ்சப்பா கருதினார். மைசூரு மாநிலத்தின்(பண்டைய மைசூரு ராஜ்ஜியம்)தனித்தன்மையை தக்கவைத்துக்கொள்ள முன்வைத்த கருத்தை ஏற்காத காரணத்தால், தனது ஆதரவு எம்எல்ஏக்கள் 20 பேருடன் அன்றைய முதல்வர் கெங்கல் ஹனுமந்தையாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார்.  அதனால், முதல்வர் பதவியை கெங்கல் ஹனுமந்தையா இழக்க நேர்ந்ததோடு, மைசூரு மாநிலத்தின் முதல்வராக கடிதாள் மஞ்சப்பாவும் பதவியேற்றார். 
சாதனைகள்... அன்றைய முதல்வர் கெங்கல் ஹனுமந்தையாவால் பெங்களூரில் கட்டிமுடிக்கப்பட்ட விதான செளதா கட்டடத்தை 1956-ஆம் ஆண்டு அக்.14-ஆம் தேதி விஜயதசமி தினத்தன்று கடிதாள் மஞ்சப்பா திறந்துவைத்தார்.  கோலார் தங்கச்சுரங்கம் கையகப்படுத்தல் சட்டம், 1956-ஐ கொண்டுவந்ததோடு, தங்கச் சுரங்கத்திற்கு இழப்பீட்டுத்தொகையாக ரூ.164கோடியை வழங்கவும் வகைசெய்தார். இதேபோல, பெங்களூரு சாலை போக்குவரத்து சேவை சட்டத்தை கொண்டுவந்து, பெங்களூரு போக்குவரத்து நிறுவனத்தின் நிர்வாகத்தை 1956 அக்.1-ஆம் தேதி முதல் கையகப்படுத்தினார். 
இந்த நிறுவனத்திற்கு இழப்பீடாக அரசு ரூ.15.50 லட்சத்தை வழங்கியது. மொழிவாரிமாநிலங்கள் உருவாக்கப்பட்டதைத் தொடர்ந்து கன்னடம் பேசும் பகுதிகளை உள்ளடக்கிய புதிய மைசூரு மாநிலம் 1956 நவ.1-ஆம் தேதி உதயமானது. அதைத் தொடர்ந்து, புதியமாநிலத்தின் புதிய முதல்வராக எஸ்.நிஜலிங்கப்பா பதவியேற்றுக் கொண்டார். எஸ்.நிஜலிங்கப்பா அமைச்சரவையில் கடிதாள் மஞ்சப்பாவுக்கு இடம் அளிக்கப்படவில்லை. ஆனால், இரண்டாவது முறையாக நிஜலிங்கப்பா முதல்வரான போது, கடிதாள் மஞ்சப்பா அமைச்சராக்கப்பட்டார்.
பிந்தைய காலம்... 1970-ஆம் ஆண்டில் வீரேந்திர பாட்டீல் முதல்வராக இருந்தகாலத்தில் நடைபெற்ற மாணவர் போராட்டத்தின் பின்னணியில் கடிதாள் மஞ்சப்பா முக்கியப் பங்காற்றினார். அமைச்சர் பதவியை துறந்தபிறகு தனது வாழ்வாரத்திற்காக வழக்குரைஞர் தொழிலைத் தொடர்ந்தார்.
ஜெகஜீவன்ராம் தொடங்கிய ஜனநாயகத்துக்கான காங்கிரஸ் கட்சியின் தலைவராக கடிதாள் மஞ்சப்பா பொறுப்பேற்றிருந்தார். காந்திய தத்துவத்தில் ஈடுபாடுகொண்ட கடிதாள் மஞ்சப்பா, கடைசி காலத்தில் வீடில்லாமல், தினசரி வாழ்க்கையின் தேவையை நிறைவுசெய்ய பணமில்லாமல் வருமையில் உழன்றார். 1992 மார்ச் 8-ஆம் தேதி காலமானார்.

அறிந்துகொள்வோம் தலைவர்களை...
கே.ஜே.ஜார்ஜ்
கர்நாடக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக தன்னை வளர்த்துக் கொண்ட கே.ஜே.ஜார்ஜின் முன்னேற்றத்தில் தமிழர்களின் பங்களிப்பு உள்ளது. மலையாளத்தை தனது தாய்மொழியாகக் கொண்ட ஜார்ஜ், பெங்களூரில் 18 ஆண்டுகாலம் மூடிக்கிடந்த திருவள்ளுவர் சிலையை நிறுவ பெங்களூரு தமிழ்ச் சங்கத்துக்கு ஒத்துழைத்தார். மேலும், அந்த சிலையை வைக்கும் இடத்துக்கு அரசின் அனுமதியைப் பெற்றுத்தந்தார். அதனால் தமிழர்களோடு மிகுந்த நெருக்கம் பாராட்டுபவர் கே.ஜே.ஜார்ஜ். 
தமிழர்களின் பாதுகாப்புக்கும் துணைநிற்பவர். கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால், அமைச்சர் பதவியை வழங்கும் பட்டியலில் முதலாவதாக இடம்பிடிக்கும் தகுதிகளை வளர்த்துக் கொண்டவர். 
கேரள மாநிலம், கொட்டயம் மாவட்டட்தின் சிங்கவனம் கிராமத்தில் கேளசந்திரசாக்கோ ஜோசப் மற்றும் மரியம்மா ஜோசப்புக்கும் 1946 ஆக.24-ஆம் தேதி பிறந்த கே.ஜே.ஜார்ஜுன் குடும்பம் கர்நாடகத்தின் குடகு மாவட்டத்திலும் பிறகு  பெங்களூரிலும் நிலைகொண்டது. 
குடகு மாவட்டத்திலிருந்தபோதே 1968-இல் காங்கிரஸ் கட்சியில் இணைந்த ஜார்ஜ், 1969-ஆம் ஆண்டு முதல் கோனிகொப்பல்நகர இளைஞர் காங்கிரஸ் தலைவராகப் பணியாற்றினார். 1971 முதல் 1972வரை விராஜ்பேட் வட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவராக வேலைசெய்தார். 1972-இல் குடகு மாவட்ட இளைஞர் காங்கிரஸின் பொதுச்செயலாளராகவும், 1973-இல் அதன் தலைவராகவும் பதவிவகித்தார்.
இந்த பதவியை 1975-ஆம் ஆண்டுவரை அலங்கரித்த ஜார்ஜ், 1975 முதல் 1978-ஆம் ஆண்டுவரை கர்நாடக மாநில இளைஞர் காங்கிரஸின் பொருளாளராகப் பதவி வகித்து, கட்சிப் பணியாற்றி வந்தார். 1982-இல் அகில இந்திய இளைஞர் காங்கிரஸின் பொதுச்செயலாளரான ஜார்ஜ், அப்பதவியில் 1985 வரை இருந்தார். 
அக்காலத்தில் கர்நாடகம் மட்டுமல்லாது, இந்தியாமுழுவதும் இளைஞர் காங்கிரஸை பலப்படுத்தினார். அதன்பிறகு, கே.எச்.ரங்கநாத், என்.தரம்சிங், எஸ்.எம்.கிருஷ்ணா, வி.எஸ்.கெளஜல்கி, அல்லம் வீரபத்ரப்பா, மல்லிகார்ஜுன கார்கே, ஆஸ்கர் பெர்ணான்டஸ், வீரேந்திரபாட்டீல், ஜனார்தனபூஜாரி ஆகியோர் கர்நாடக காங்கிரஸ் கமிட்டித் தலைவர்களாக இருந்தபோது, மாநில பொதுச் செயலாளராக செயலாற்றினார்.
1985-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்முறையாக அன்றைய பாரதிநகர் தொகுதியில் கே.ஜே.ஜார்ஜ் போட்டியிட்டு வென்றார். அதேதொகுதியில், 1989, 1994 ஆகிய தேர்தல்களிலும் வென்றார். 1989-இல் வீரேந்திரபாட்டீல் தலைமையில் அமைந்த காங்கிரஸ் அரசில் போக்குவரத்து, உணவு மற்றும் பொதுவழங்கல் துறை அமைச்சராகவும், பங்காரப்பா அரசில் நகர்ப்புற மற்றும் வீட்டுவசதித்துறை அமைச்சராகவும் திறம்பட செயலாற்றினார். 
2008, 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் சர்வக்ஞநகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 2013-இல் சித்தராமையா தலைமையில் அமைச்சரவையில் உள்துறை, பெங்களூருவளர்ச்சித் துறை அமைச்சராக இருந்தார். மூன்றாவது முறையாக சர்வக்ஞநகர் தொகுதியில் போட்டியிட்டுள்ளார்.

பாஜக தலைவர்களின் வீடுகளில் வருமான வரித் துறையினர் ஏன் சோதனை நடத்துவதில்லை. 
எடியூரப்பா, ஜெகதீஷ் ஷெட்டரின் வீடுகளை ஏன் சோதிப்பதில்லை. பாஜகவைச் சேர்ந்த உமேஷ்கத்தி, சுரேஷ் அங்கடி, பிரபாகர்கோரே உள்ளிட்டோர் சட்ட விரோதமாக பணம் சம்பாதிக்கவில்லையா? வருமான வரித் துறை காங்கிரஸ் தலைவர்களை குறிவைத்து சோதனை நடத்துகிறது. ஆனால், சோதனையில் எதுவும் கிடைப்பதில்லை என்பது வேறு.
-சித்தராமையா, 
முதல்வர், கர்நாடகம்.

இளைஞரான அகிலேஷ்யாதவ், உத்தரபிரதேசத்தில் நல்லாட்சி நடத்தினாரா? சித்தராமையா அல்லது ராகுல் காந்தி போன்றோரும் வயதானவர்கள்தானே. எனவே, எடியூரப்பாவை வயதானவர் என்று ஒதுக்கிவிடமுடியாது. முதல்வர் பதவியை வகிப்போருக்கு மாநிலத்தை வழிநடத்தும் அனுபவம் தேவை. அது எடியூரப்பாவிடம் இருக்கிறது.
-ஸ்மிருதி இரானி, மத்திய அமைச்சர், ஒலிபரப்புத் துறை.

பிரதமர் மோடி தனது ஈர்ப்பாற்றலை இழந்துவிட்டார். இந்த சட்டப்பேரவை தேர்தலில் பிரதமர் மோடியின் விளைவுகள் எதுவும் இருக்காது. அடுத்த முதல்வர் யார் என்பதை மக்கள் 
தீர்மானிப்பார்கள்.
-எச்.டி.தேவெ கெளடா,முன்னாள் பிரதமர், மஜத.

கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க எந்த கட்சியின் ஆதரவும் பாஜகவுக்கு தேவையில்லை. மஜதவுடன் முன்பு வைத்திருந்த கூட்டணி மோசமான அனுபவத்தை தந்தது. எனவே, மஜதவுடன் கூட்டணி அமைக்கமாட்டோம். பாஜக தனித்து ஆட்சி அமைக்கும்.
-பி.எஸ்.எடியூரப்பா, மாநிலத்தலைவர், பாஜக.

நூற்றுக்கணக்கான வாக்குறுதிகளை அளித்த பிரதமர் மோடி, எதையும் செயல்படுத்தவில்லை. நிலையான பொருளாதாரம், கருப்புப்பணம் மீட்பு, புதிய நகரங்கள், பெண்கள் பாதுகாப்பு போன்ற வாக்குறுதிகள் காகிதத்தில் உள்ளன. 
பிரதமர் மோடி வாக்குறுதிகளை அளிப்பது நிறைவேற்றுவதற் கல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
-ஜி.பரமேஸ்வர், மாநிலத்தலைவர், காங்கிரஸ்.

வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பு: ராஜாஜிநகர்
பெங்களூரின் மிகவும் பழமையான தொகுதி ராஜாஜிநகர். இத்தொகுதியில் 5 முறை போட்டியிட்டு 4 முறை வெற்றிவாகைச்சூடியவர் எஸ்.சுரேஷ்குமார். முன்னாள் அமைச்சரான எஸ்.சுரேஷ்குமார், பாஜக வேட்பாளராக களமிறங்கியுள்ளார். 
இவரை எதிர்த்து பெங்களூரு மாநகராட்சி முன்னாள் மேயர் ஜி.பத்மாவதி, காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். மஜத வேட்பாளராக எச்.எம்.கிருஷ்ணமூர்த்தி களத்தில் நிற்கிறார். எனினும், இத்தேர்தல் பாஜகவுக்கும், காங்கிரஸுக்கும் இடையிலான நேரடி போட்டியாக உள்ளது.
தொகுதி வளர்ச்சி
ராஜாஜிநகர் தொகுதியில் மோசமான சாலைகள், குறுகிய தெருக்கள் உள்ளன. இங்கு அதிக எண்ணிக்கையிலான விளையாட்டு மைதானங்கள் இருந்தாலும், அவை சரியாக பராமரிக்கப்படவில்லை. அடிக்கடி திருட்டு, சங்கிலிப்பறிப்பு சம்பவங்கள் நடக்கின்றன. சாலையோரங்களில் உள்ள நடைபாதைகள் முழுமையாக வியாபாரிகள் உள்ளிட்டோரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதுதவிர, ஒருசிலபகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு, வாகன நிறுத்த இடமில்லாமை, பொதுவெளிகள் இல்லாமல் இருப்பது தொகுதிகளை மக்களை வேதனை அடைய செய்துள்ளது.
பாஜக அணுகுமுறை 
இத்தொகுதியில் ஒக்கலிகர், பிராமணர்கள் தவிர, வடகர்நாடகத்தை சேர்ந்த லிங்காயத்துகள் அதிகளவில் உள்ளனர். இவர்களை தவிர, தமிழர்களும் இத்தொகுதியில் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். நான்குமுறை சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும், தேர்தல் நேரத்தில் மட்டுமே மக்களைச் சந்திக்க முடியும் என்ற நிலையில் மக்களிடம் இருந்து விலகியிருப்பதாக எஸ்.சுரேஷ்குமார் மீது புகார் கூறப்படுகிறது. 
பாஜகவின் முன்னணி தலைவராக விளங்கிவரும் சுரேஷ்குமார், தொகுதியில் போதுமான கவனம் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.கடும் போட்டி எதுவுமில்லாததால், இதுவரை வெற்றிபெற்று வந்த எஸ்.சுரேஷ்குமார், இம்முறை வெற்றியை பெற கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும் என்று தெரிகிறது.
காங்கிரஸ் 
பெங்களூரு மாநகராட்சி மேயராக இருந்த ஜி.பத்மாவதி, ராஜாஜிநகரில் ஏராளமான வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டுள்ளார். பெண்ணாக இருந்தாலும் மக்களை எளிய முறையில் சந்திப்பதோடு, அணுகுவதற்கு இனிமையானவராக இருப்பதாக மக்கள் தெரிவிக்கிறார்கள்.
மேயராக பெற்ற நன்மதிப்பு ஜி.பத்மாவதிக்கு இம்முறை வெற்றிவாக்குகளாக மாறும் என்று கூறப்படுகிறது. படித்தவர்கள், ஏழைகள், நடுத்தர மக்களிடையே மிகுந்த செல்வாக்குடன் இருப்பதால், இம்முறை ஜி.பத்மாவதிக்கு சட்டப்பேரவைச் செல்லும் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. 
தாய்மொழி தெலுங்காக இருந்தாலும், தமிழர்களின் நலனில் மிகுந்த அக்கறை செலுத்தி வரும் ஜி.பத்மாவதிக்கு அவர்களது ஆதரவு கிடைக்கும் என்று தெரிகிறது. பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் பணிகளுக்கு உதவிபுரிந்துவரும் பத்மாவதி, தமிழர்களின் பிரச்னைகளை தீர்க்க ஆர்வமாக பங்காற்றியுள்ளார். 


தேர்தல் துளிகள்
ராஜராஜேஸ்வரிநகர் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடும் திரைப்பட நடிகர் ஹுச்சா வெங்கடேஷுக்கு "செருப்பு' சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
யஷ்வந்த்பூர் தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிடும் நடிகர் ஜக்கேஷின் திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு தடைவிதிக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் அத்தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடும் எஸ்.டி.சோமசேகர் மனு அளித்திருக்கிறார்.
பாஜகவின் சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கை பெங்களூரில் திங்கள்கிழமை வெளியிடப்படவிருக்கிறது. மாநிலம், மாவட்டம், தொகுதி வாரியாக தேர்தல் அறிக்கைகளை வெளியிட பாஜக திட்டமிட்டுள்ளது.
கடந்த மூன்று நாள்களாக கர்நாடகத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, ஞாயிற்றுக்கிழமை தாவணகெரே, சித்ரதுர்கா, தும்கூரு மாவட்டங்களுக்கு சென்று வீதிவீதியாக திறந்தவேனில் சென்று பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். 
*சி.வி.ராமன்நகர் தொகுதியில் வாக்காளர் பட்டியலில் 35 ஆயிரம் போலி வாக்காளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி புகார் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com