2014 மக்களவைத் தேர்தல் வாக்குறுதிகளை பாஜக நிறைவேற்றவில்லை: நடிகை குஷ்பு

2014-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக அளித்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை
Updated on
1 min read

2014-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக அளித்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு குற்றஞ்சாட்டினார்.
பெங்களூரு குயின்ஸ் சாலையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: 
மக்களவைத் தேர்தலில் வாக்குகளைக் கவரும் நோக்கில் பாஜக தேர்தல் அறிக்கையைத் தயாரித்துள்ளது.  ஆனால், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை, நாட்டை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்லவும், மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது.  நாட்டின் பாதுகாப்பு, வேலைவாய்ப்பு, எல்லையில் உள்ள ராணுவ வீரர்களின் பாதுகாப்பு,  மகளிரின் வளர்ச்சி உள்ளிட்டவை காங்கிரஸ்
தேர்தல் அறிக்கையில்
இடம்பெற்றுள்ளன. 
72 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி நாட்டிற்கு என்ன செய்தது என பாஜகவினர் கேள்வி எழுப்புகின்றனர்.  ஆனால், அவர்களுக்கு காங்கிரஸ் செய்த வளர்ச்சிப் பணிகள் எதுவும் தெரியவில்லை.  குஜராத்தின் முதல்வராக நரேந்திர மோடி இருந்த போது,  காங்கிரஸ் கட்சியின் வேலை உறுதித் திட்டத்தை அவர் குற்றம் சாட்டினார்.  ஆனால், அந்தத் திட்டத்துக்கு தேசிய அளவில் மட்டுமல்லாது,  சர்வதேச அளவில் பொருளாதார வல்லுநர்கள் பாராட்டுத் தெரிவித்தனர்.
காங்கிரஸ் கட்சி தேர்தல் நேரத்தில் அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி உள்ளது.  பாஜக கட்சி 2014- ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.  அதுமட்டுமல்லாது,  பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் மக்களை வாட்டி வதைத்தனர். 
பொருள் மற்றும் சேவை வரி மூலம் தொழில் வர்த்தகர்கள் பாதிக்கப்பட்டனர்.   ராணுவ வீரர்களின் தியாகத்தை தங்கள் கட்சியின் அரசியல் லாபத்திற்காக பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.  தன்னை நாட்டின் காவலர் என்று கூறிக் கொள்ளும் பிரதமர் மோடி,  ரஃபேல் ஊழல் ஆவணங்கள் திருடு போனது குறித்து மக்களிடம் விவரம் தெரிவிக்க வேண்டும்.  இந்தத் தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும் என்றார். 
முன்னதாக, மத்திய பெங்களூரு காங்கிரஸ் வேட்பாளர் ரிஸ்வான் அர்ஷத்தை ஆதரித்து தமிழர்கள் வாழும் பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com