காவிரியின் குறுக்கே அமைந்துள்ள 4 அணைகளிலும் வரலாறு காணாத குறைந்த நீர் இருப்பு: கர்நாடக விவசாயிகள் அதிர்ச்சி

கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள 4 அணைகளிலும் வரலாறு காணாத வகையில் குறைந்த அளவு நீர் இருப்பு காணப்படுகிறது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Updated on
2 min read


கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள 4 அணைகளிலும் வரலாறு காணாத வகையில் குறைந்த அளவு நீர் இருப்பு காணப்படுகிறது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
காவிரி ஆற்றின் குறுக்கே கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய 4 அணைகள் கட்டப்பட்டுள்ளன. ஹேமாவதி, ஹாரங்கி அணைகளில் இருந்து திறந்துவிடப்படும் நீர், கிருஷ்ணராஜசாகர் அணையை வந்தடையும். ஆனால், கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் இருந்து திறந்துவிடப்படும் நீர், பிலிகுண்டுலு அளவை மையத்தைக் கடந்து தமிழகத்தைச் சென்றடையும். ஹாசன், குடகு, மைசூரு, மண்டியா மாவட்டங்களில் மழை பெய்தால் மட்டுமே காவிரி ஆற்றில் நீர் பெருக்கெடுக்கும். ஆனால், நிகழாண்டில் காவிரி நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை போதுமான அளவுக்கு பெய்யவில்லை. ஜூன் 1 முதல் ஆக.3ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் குடகு மாவட்டத்தில் 859 மிமீ மழை பெய்துள்ளது. இது 46 சத குறைவாகும். மைசூரு மாவட்டத்தில் 141மிமீ (36 சதம் குறைவு), மண்டியா மாவட்டத்தில் 99மிமீ (12 சதம் குறைவு), ஹாசன் மாவட்டத்தில் 349மிமீ (15 சதம் குறைவு) மழை பதிவாகியுள்ளது. போதுமான மழை பெய்யாததால் காவிரி குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளில் எதிர்பார்த்த மழை நீர் இருப்பு இல்லை. 
2002ஆம் ஆண்டுக்குப் பிறகு நிகழாண்டில் கர்நாடகத்தில் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளதால், போதுமான மழை இல்லாமல் அணைகளில் நீர்வரத்தும், நீர் இருப்பும் கணிசமாகக் குறைந்து காணப்படுகிறது. கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் 124.80 அடியாகும். 2002ஆம் ஆண்டு ஆக.3ஆம் தேதி இந்த அணையின் நீர்மட்டம் 74.70 அடியாக இருந்தது. கடந்த ஆண்டு இதே நாளில் 123.36 அடியாக இருந்த நீர்மட்டம், நிகழாண்டில் இது 83.45 அடியாக உள்ளது. கபினி அணையின் நீர்மட்டம் கடல்மட்டத்தில் இருந்து 2284 அடியாகும். கடந்த ஆண்டு இதேநாளில் 2283.15 அடியாக இருந்த நீர்மட்டம், நிகழாண்டில் இது 2273.88 அடியாக உள்ளது. ஹேமாவதி அணையின் நீர்மட்டம் கடல்மட்டத்தில் இருந்து 2922 அடியாகும். கடந்த ஆண்டு இதேநாளில் 2920.77 அடியாக இருந்த நீர்மட்டம், நிகழாண்டில் இது 2892.66 அடியாக உள்ளது. ஹாரங்கி அணையின் நீர்மட்டம் கடல்மட்டத்தில் இருந்து 2859 அடியாகும். கடந்த ஆண்டு இதேநாளில் 2856.88 அடியாக இருந்த நீர்மட்டம், நிகழாண்டில் இது 2833.40 அடியாக உள்ளது. 
4 அணைகளின் முழுமையான தண்ணீர் கொள்ளளவு 104.55 டிஎம்சி ஆகும். கடந்த ஆண்டு இதேநாளில் 100.11 டிஎம்சியாக இருந்த நீர் இருப்பு, நிகழாண்டில் 35.11 டிஎம்சியாக உள்ளது. கிருஷ்ணராஜ்சாகர் அணையில் 45.05 டிஎம்சிக்கு பதிலாக 7.99 டிஎம்சி (கடந்த ஆண்டு 43.06டிஎம்சி) நீரும், கபினி அணையில் 15.67 டிஎம்சிக்கு பதிலாக 9.82 டிஎம்சி (கடந்த ஆண்டு 15.12டிஎம்சி) நீரும், ஹேமாவதி அணையில் 35.76 டிஎம்சிக்கு பதிலாக 14.21 டிஎம்சி (கடந்த ஆண்டு 34.57டிஎம்சி) நீரும், ஹாரங்கி அணையில் 8.07 டிஎம்சிக்கு பதிலாக 3.09 டிஎம்சி (கடந்த ஆண்டு 7.36டிஎம்சி) நீரும் உள்ளது. இதனால் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் வேதனை தெரிவித்தனர்.
ஆக.3ஆம் தேதி நிலவரப்படி கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 5104 கன அடியும், நீர் வெளியேற்றம் விநாடிக்கு 7589 கன அடியாக உள்ளது. கபினி அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 2089 கன அடியும், நீர் வெளியேற்றம் 1000 கன அடியாகவும்; ஹேமாவதி அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 5991 கன அடியும், நீர் வெளியேற்றம் விநாடிக்கு 3800 கன அடியாகவும்; ஹாரங்கி அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 985 கன அடியும், நீர் வெளியேற்றம் விநாடிக்கு 1230 கன அடியாகவும் உள்ளது. இது காவிரிப் படுகை விவசாயிகளை கலக்கத்தில்
ஆழ்த்தியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com