கர்நாடகத்தில் பாஜக மூத்த அமைச்சர்கள் அதிருப்தி? முன்னாள் முதல்வர் சித்தராமையா

அமைச்சரவையில் துறைகளை ஒதுக்கீடு செய்ததில் பாரபட்சம் காட்டியதாலும், 3 துணை முதல்வர்களை
Updated on
1 min read

அமைச்சரவையில் துறைகளை ஒதுக்கீடு செய்ததில் பாரபட்சம் காட்டியதாலும், 3 துணை முதல்வர்களை உருவாக்கியதில் முக்கியத்துவம் அளிக்கப்படாததாலும் கர்நாடகத்தில் மூத்த பாஜக அமைச்சர்கள் முதல்வர்  எடியூரப்பா மீது அதிருப்தியடைந்துள்ளதாக முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
இதுகுறித்து அவரது சுட்டுரைப் பதிவு:  பாஜக ஆட்சியில் முதல்வராகப் பதவி ஏற்ற எடியூரப்பா, 26 நாள்களுக்கு பிறகு அமைச்சரவையை விரிவாக்கினார்.  அதைத் தொடர்ந்து 6 நாள்களுக்குப் பிறகு அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.  இதில் முக்கியத்துவம் கிடைக்காததால்,  ஒருசில மூத்த அமைச்சர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். குறிப்பாக,  3 துணை முதல்வர் பதவிகளை உருவாக்கியுள்ளது பிரச்னையை மேலும் அதிகரித்துள்ளது.
ஆட்சி அமைத்து  ஒரு மாதமாகியும், இன்னும் எவ்வித வளர்ச்சிப் பணிகளும் நடைபெறவில்லை.  இதனால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.  அமைச்சரவை விரிவாக்கம்,  துறைகளை ஒதுக்குவதில் எடியூரப்பா பெரும் சவால்களை சந்தித்து வருகிறார்.   இதனால் மாநிலத்தில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதில் அவர் தோல்வியடைந்துள்ளார். அதிருப்தியடைந்துள்ள மூத்த அமைச்சர்கள் எடியூரப்பாவுக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குவார்களா என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அதில் குறிப்பிட்டுள்ளார்.
பின்னணி: கர்நாடகத்தில் காங்கிரஸ், மஜத கூட்டணி அரசு கவிழ்ந்ததையடுத்து,  முதல்வர் எடியூரப்பா கடந்த மாதம் பதவியேற்றார்.   26 நாள்களாகத் தனி ஆளாக அமைச்சரவையை நடத்தி வந்த எடியூரப்பா, பின்னர் அமைச்சரவையை விரிவு படுத்தியதை அடுத்து 17 பேர் புதிய அமைச்சர்களாகப் பதவி ஏற்றனர். 
இந்த நிலையில்,  கோவிந்தகார்ஜோள், அஸ்வத்நாராயணா, லட்சுமண் சவதி ஆகிய 3 பேருக்கு துணை முதல்வர் பதவி திங்கள்கிழமை இரவு வழங்கப்பட்டது.  மேலும், 17 அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.  ஒதுக்கப்படாத துறைகளை முதல்வர் எடியூரப்பாவே கவனித்துக் கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com