பாஜகவுக்கு ஆதரவாக அதிமுக பிரசாரம்: எம்.பி.யுவராஜ்
By DIN | Published On : 01st April 2019 09:49 AM | Last Updated : 01st April 2019 09:49 AM | அ+அ அ- |

கர்நாடகத்தில் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக அதிமுக பிரசாரம் செய்யும் என்று கர்நாடக மாநில அதிமுக செயலர் எம்.பி.யுவராஜ் தெரிவித்தார்.
பெங்களூரில் அவர் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:-
தமிழகத்தில் அதிமுக தலைமையில் கூட்டணியில் பாஜக இணைந்துள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக தனது கூட்டணியில், பாஜக, பாமக, தேமுதிகவுடன் இணைந்து மக்களவைத் தேர்தலுக்காக வெற்றிக்கூட்டணியை அமைத்துள்ளது.
கர்நாடகத்தில் உள்ள 28 மக்களவைத் தொகுதிகளில் மண்டியா நீங்கலாக 27 தொகுதிகளில் பாஜக தனது வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. 27 தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்களுக்கு அதிமுக ஆதரவளிக்கிறது.
27 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக அதிமுக பிரசாரம் செய்யும். மத்திய பெங்களூரு, வடபெங்களூரு, தென் பெங்களூரு, கோலார், மைசூரு, சிவமொக்கா, மைசூரு தொகுதிகளில் அதிமுக தொண்டர்கள் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர பிரசாரத்தில் அதிமுகவினர் ஈடுபடுவர். இதற்காக ஆங்காங்கே அதிமுக தேர்தல்பிரசாரக்கூட்டங்களை நடத்தும்.
இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் ஏப்.18-ஆம் தேதி நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யவிருக்கிறோம். இதற்காக கர்நாடக அதிமுக குழு தமிழகம் செல்லும். ஒசூரில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை சனிக்கிழமை சந்தித்தோம். அப்போது கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பாவின் வேண்டுகோளுக்கு இணங்க, பாஜக வேட்பாளர்களை ஆதரிக்கும் அதிமுகவின் முடிவை தெரிவித்தார் என்றார் யுவராஜ்.