மோடி மீதான நம்பிக்கையால்தான் பாஜகவுடன் அதிமுக கூட்டணி: மத்திய பெங்களூரு பாஜக வேட்பாளர் பி.சி.மோகன் பேச்சு
By DIN | Published On : 01st April 2019 09:51 AM | Last Updated : 01st April 2019 09:51 AM | அ+அ அ- |

பிரதமர் நரேந்திர மோடி மீது நம்பிக்கை உள்ளதால்தான், பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்துள்ளது என்று பாஜக எம்பியும், மத்திய பெங்களூரு மக்களவைத் தொகுதி வேட்பாளருமான பி.சி.மோகன் தெரிவித்தார்.
பெங்களூரு ஸ்ரீராமபுரத்தில் கர்நாடக மாநில அதிமுக சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில், பி.சி.மோகன் பேசியது:-
கடந்த 70 ஆண்டுகளில் செய்ய முடியாத சாதனைகளை நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் மோடி செய்துள்ளார். மோடியால் மட்டுமே நாடு மேலும் வளர்ச்சி அடையமுடியும். மோடி மீது நம்பிக்கையுள்ளதால்தான் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்துள்ளது.
1972-இல் எம்ஜிஆரால் தொடங்கப்பட்ட அதிமுக, இன்றைக்கும் மக்கள் செல்வாக்கோடு திகழ்வது மகிழ்ச்சி அளிக்கிறது. எம்ஜிஆர் தொண்டர்களாகிய அதிமுகவினர், பாஜக வெற்றி பெற பாடுபட வேண்டும்.
தமிழகத்துக்கு முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி- துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூட்டணி என்றால், நாட்டுக்கு பாஜக-அதிமுக கூட்டணி தேவைப்படுகிறது. மோடியின் கரத்தை வலுப்படுத்த அதிமுக ஆதரவு அளித்துள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் மோடி செய்துள்ள சாதனைகளை மக்கள் மறக்கவில்லை. இந்தியாவின் 130 கோடிமக்களும் மோடியின் குடும்பத்தினர் தான்.
அதனால் நாட்டின் வளர்ச்சிக்கு அயராது மோடி உழைத்துவருகிறார்.
காங்கிரஸ் மக்களை ஏமாற்றியதை மேலும் தொடரவிடக்கூடாது. மக்களுக்கு வங்கிக்கடன் தொடங்கியது. எளிய முறையில் கடன் பெறும் முத்ரா திட்டம். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கியது போன்ற பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி அறிமுகம் செய்துள்ளார்.
பெங்களூரு புறநகர் ரயில்திட்டத்துக்கு ரூ.17ஆயிரம் கோடியை பிரதமர் மோடி பட்ஜெட்டில் ஒதுக்கியிருக்கிறார். பெங்களூருவில் 10 ஏக்கர் ராணுவநிலங்களை சாலை, மேம்பாலங்கள் அமைக்க பெற்றுத்தந்துள்ளேன். மீண்டும் மோடி பிரதமரானால் எண்ணற்ற பல புதிய திட்டங்களை செயல்படுத்துவார். எனவே, மத்திய பெங்களூரு தொகுதியில் என்னை அதிக வாக்குவித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும் என்றார் அவர்.
கூட்டத்தில் கர்நாடக மாநில அதிமுக அவைத்தலைவர் கே.பி.முனுசாமி, செயலர் எம்.பி.யுவராஜ், கர்நாடக மாநில அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலர் மு.அன்பு, பாஜக நிர்வாகிகள் பழனி, மகேந்திரபிரசாத், சப்தகிரிகெளடா, மாமன்ற உறுப்பினர் சிவபிரகாஷ், எம்ஜிஆர் ரவி, கர்நாடக செங்குந்தர் சங்க நிர்வாகிகள் சந்திரசேகரன், பழனிசாமி, வெங்கடேசன் உள்ளிட்டோர்
கலந்துகொண்டனர்.