மத்தியில் ஆட்சி மாற்றத்துக்கான நேரம் கனிந்துள்ளது: காங்கிரஸ் வேட்பாளர் ரிஸ்வான் அர்ஷத்
By DIN | Published On : 12th April 2019 08:50 AM | Last Updated : 12th April 2019 08:50 AM | அ+அ அ- |

மத்தியில் ஆட்சி மாற்றத்திற்கான நேரம் கனிந்துள்ளதாக மத்திய பெங்களூரு காங்கிரஸ் வேட்பாளர் ரிஸ்வான் அர்ஷத் தெரிவித்தார்.
மத்திய பெங்களூரு காங்கிரஸ் வேட்பாளர் ரிஸ்வான் அர்ஷத்தின் இல்லம், அலுவலகம், நண்பர்கள், உறவினர் இல்லங்களில் வியாழக்கிழமை வருமான வரித் துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதையடுத்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
கடந்த சில நாள்களாக தேசிய அளவில் எதிர்க்கட்சியினர் இல்லம், அலுவலகங்களின் மீது வருமான வரித் துறையினர் சோதனை செய்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். மத்திய அரசு தோல்வி பயத்தால் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது கண்கூடாக தெரிகிறது. அவர்களுக்கு காங்கிரஸ் கட்சி எந்த பதிலையும் அளிக்காது. தேர்தலில் மக்கள் அவர்களுக்கு உரிய பாடத்தை கற்பிப்பார்கள்.
மத்திய பெங்களூரு தொகுதியில் கடந்த 10 நாள்களாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டேன். அதில் மக்கள் மாற்றத்தை விரும்புவது கண்கூடாக தெரிகிறது. எனவே மத்தியில் ஆட்சி மாற்றத்திற்கான நேரம் கனிந்துள்ளது. இந்த வாய்ப்பை யாரும் நழுவவிடக் கூடாது.
மத்திய பெங்களூரில் குடிநீர், போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் உள்ளன. இதனை பாஜக மக்களவை உறுப்பினர் கண்டுகொள்ளாமல் உள்ளார். அவரை காணவில்லை என்று மக்கள் கூறி வருகின்றனர். எனவே இளைஞரான என்னை ஆதரிக்க முடிவு செய்துள்ளனர்.
பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் கடந்த தேர்தலில் அளித்துள்ள வாக்குறுதிகளையே மீண்டும் அளித்துள்ளனர். அவர்கள் அளித்த எந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப் போவதில்லை என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர். தங்களது எதிர்ப்பை தேர்தலில் வாக்குகள் மூலம் வழங்குவார்கள் என்று நம்புகிறேன் என்றார்.