பிரதமர் மோடியின் ஆட்சியில்தான் இந்தியா வளம் பெற்றது

பிரதமர் மோடியின் ஆட்சியில்தான் இந்தியாவுக்கு நல்லகாலம் பிறந்தது என்று பாஜக எம்பி ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்தார்.
Updated on
1 min read

பிரதமர் மோடியின் ஆட்சியில்தான் இந்தியாவுக்கு நல்லகாலம் பிறந்தது என்று பாஜக எம்பி ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்தார்.
இதுகுறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: பிரதமர் மோடி போன்ற தலைசிறந்த தலைவரை நமதுநாடு பார்த்ததில்லை. அப்படிப்பட்ட தலைவரை நமது நாடு கட்டிக்காக்க இந்த தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் வாக்களிக்கவேண்டும். நமது நாட்டுக்கு சீரான பொருளாதாரம், நிலையான பாதுகாப்பு, தங்குதடையற்ற வளர்ச்சி, அடித்தட்டுமக்களின் தொடர்ச்சியான மேம்பாடு நிகழவேண்டுமானால் மோடி மீண்டும் பிரதமராக வேண்டும். 
2014-ஆம் ஆண்டு முந்தைய காங்கிரஸ் அரசு பதவியைவிட்டு விலகியபோது இந்தியாவின் பொருளாதாரம் மிகவும் மோசமாக இருந்தது. காங்கிரஸ் ஆட்சியில் உணவுப்பொருள் விலைவாசி உச்சத்தில் இருந்தது, மொத்த உற்பத்திப்பொருள் வீழ்ச்சியடைந்திருந்தது, வங்கிகளின் வாராக்கடன் அதலபாதாளத்துக்கு சென்றிருந்தது. 
கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் இந்திய பொருளாதாரத்தை பிரதமர் மோடி சீரமைத்துள்ளார். உலக அளவில் மிகவும் வேகமாக வளர்ந்துவரும் பொருளாதாரமாக இந்தியா உயர்ந்துள்ளது. 
நேரடி வெளிநாட்டு முதலீடுகள் குவிந்தவண்ணம் உள்ளன. வங்கிகளில் வாங்கப்படும் கடன்களை திரும்ப அடைக்காவிட்டால், அதை ஜப்தி செய்யும் உரிமை வங்கிகளுக்கு வழங்கும் சட்டத்தை பிரதமர் மோடி கொண்டுவந்துள்ளார். அதேபோல, காங்கிரஸ் கூறுவது போல 5 ஆண்டுகளில் வேலைவாய்ப்புகள் குறையவில்லை. அது சீராக உயர்ந்துள்ளது. 
விவசாயிகளின் வாழ்விலும் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. ரசாயன உரத்தின் விலை வீழ்ச்சியடைந்து,விளைப் பொருள்களுக்கான விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 2022-ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாகும் என்ற பிரதமர் மோடியின் கனவு நனவாகும். அனைவருக்கும் எல்லாவிதமான வாய்ப்புகளும் கிடைப்பதுதான் நல்லகாலம் என்கிறோம். 
நல்லகாலம் என்பது அனைவரும் பணக்காரர்களாக வலம் வருவது அல்ல. நல்லகாலம் என்பது நல்ல எண்ணம். அந்தவகையில் இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் நல்லகாலம் வந்துள்ளது. மக்களின் எண்ணங்கள் நிறைவேற தொடங்கியுள்ளதே நல்லகாலத்திற்கான அறிகுறிதான்.
காங்கிரஸ் கூறிவரும் ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் குறைந்தபட்ச வருவாய்த் திட்டம் நடைமுறைக்கு ஒவ்வாதது. ஆட்சிக்கு வரமாட்டோம் என்ற தைரியத்தில் காங்கிரஸ் அந்தவாக்குறுதியை அளித்துள்ளது. பிரதமர் மோடியின் வலுவான தலைமை நமதுநாட்டுக்கு தேவை. ராகுல்காந்தியை போன்ற முதிர்ச்சியற்ற அரசியல் நமக்கு தேவையில்லை. பிரதமர் மோடியை வலுப்படுத்த பாஜக ஆட்சியமைக்க வேண்டும். இந்தியா வலிமையாகவும், பாதுகாப்பாகவும் இருக்க மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com