மக்களவைத் தேர்தல்: 28 தொகுதிகளில் 90,997 காவலர்கள் பாதுகாப்பு
By DIN | Published On : 17th April 2019 02:51 AM | Last Updated : 17th April 2019 02:51 AM | அ+அ அ- |

கர்நாடகத்தில் 2 கட்டங்களாக நடைபெறும் மக்களவைத் தேர்தல் 28 தொகுதிகளில் நடைபெற உள்ளது. தேர்தல் பாதுகாப்பு பணியில் 90,997 காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை டிஜிபி நீலமணிராஜு தெரிவித்தார்.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: கர்நாடகத்தில் ஏப். 18, 23 என 2 கட்டங்களாக 28 தொகுதிகளில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்காக 58,992 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 11,992 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும், 46,223 வாக்குச்சாவடிகள் சாதாரணமானவை என்று அறியப்பட்டுள்ளது.
பதற்றமான வாக்குச்சாவடிகளில் 2 தலைமைக் காவலர்கள், ஒரு ஊர்க்காவல்படை வீரர் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். சாதாரண வாக்குச்சாவடிகளில் ஒரு தலைமை காவலர் உள்பட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். வாக்குச்சாவடிகளை கண்காணிக்க 3,313 வாகனங்களில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
தேர்தலில் 282 காவல் துணைக் கண்காணிப்பாளர்கள், 851 ஆய்வாளர்கள், 1188 துணை ஆய்வாளர்கள், 4205 உதவி ஆய்வாளர்கள், 42,950 காவலர்கள், 40,117 ஊர்க்காவல் படையினர், 414 வனக்காவலர்கள், 990 சிறைக் காவர்கள் உள்பட 90,997 பேர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர்.
தேர்தலையொட்டி, ரூ. 15,72,17,616 ரொக்கப்பணம், 23,248 லிட்டர் மதுபானம், 3.12 கிலோ தங்கம், 43.85 கிலோ வெள்ளி பொருள்கள், 38 லட்சம் மதிப்புள்ள பரிசு பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரெளடிகள் உள்ளிட்ட 47,427 பேர் மீது 44,844 வழக்குகள் போடப்பட்டுள்ளது என்றார். பேட்டியின் போது ஏடிஜிபி கமல்பந்த், ஐ.ஜி.ஹிதேந்திரா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...