கன்னடத்தில் நல்ல திரைப்படத்தில் இசை அமைக்க வாய்ப்பு கிடைத்தால் ஒப்புக்கொள்வேன்: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்
By DIN | Published On : 26th April 2019 03:06 AM | Last Updated : 26th April 2019 10:52 AM | அ+அ அ- |

கன்னடத்தில் நல்ல திரைப்படத்தில் இசை அமைக்க வாய்ப்பு கிடைத்தால் ஒப்புக்கொள்வேன் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்தார்.
பெங்களூரில் வியாழக்கிழமை சாம்சங், ஹர்மான் இந்தியா, ஸ்வாகத் குழுமத்தினருடன் இணைந்து உருவாக்கியுள்ள ஓனையக்ஸ் திரையரங்கு தொடக்க விழாவில் கலந்து கொண்டு அவர் பேசியது:
பெங்களூரில் எல்.இ.டி. திரை கொண்ட திரையரங்கத்தை சாம்சங், ஹர்மான் இந்தியா, ஸ்வாகத் குழுமத்தினருடன் இணைந்து உருவாக்கியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. சர்வதேச அளவில் திரையரங்களுக்கும் புதிய தொழில்நுட்பங்கள் புகுத்தப்படுகின்றன. புதிய தொழில்நுட்பங்களை ஏற்றுக் கொள்வதன் மூலம் திரைப்படத் துறை மட்டுமின்றி திரையரங்களும் வளர்ச்சி பெறமுடியும்.
ஹர்மான் குழுமத்தினரின் ஜேபிஎல் தொழில்நுட்பத்தால், சிறந்து ஒலியை ரசிகர்கள் பெற முடியும். எனது இசை ஜேபிஎல் தொழில்நுட்பத்தால் நல்ல முறையில் ரசிகர்களிடம் சென்றடைகிறது. சிறந்த தொழில்நுட்பம், ஒலியமைப்பு முறையால், திரைப்படத்தையும், இசையும் எல்லோராலும் ரசிக்க முடிகிறது.
இந்திய அளவில் முதல்முறையாக பெங்களூரில் தொடங்கப்பட்டுள்ள எல்.இ.டி. திரை கொண்ட திரையரங்கம், எதிர்கால திரையரங்குகளுக்கு முன்னோட்டமாக திகழும் என்பதில் சந்தேகமில்லை. நான் விரும்பும் முக்கிய நகரங்களில் ஒன்றாக பெங்களூரு விளங்குகிறது. கன்னட மொழி திரைப்படங்களில் ஏன் இசை அமைப்பதில்லை என்ற கேள்வியை பலரும் கேட்டு வருகின்றனர். கன்னடத்தில் நல்ல திரைப்படத்தில் இசை அமைக்க வாய்ப்பு கிடைத்தால் ஒப்புக்கொள்வேன் என்றார்.