கர்நாடகத்தில் சட்டப்பேரவை இடைத் தேர்தல்வேட்பாளர்கள் தேர்வில் அரசியல் கட்சிகள் மும்முரம்

 கர்நாடகத்தில் மே 19-ஆம் தேதி நடக்கவிருக்கும் 2 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களில் வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் அரசியல் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.


 கர்நாடகத்தில் மே 19-ஆம் தேதி நடக்கவிருக்கும் 2 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களில் வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் அரசியல் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.
தார்வாட் மாவட்டத்தின் குந்தகோல் சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த சி.எஸ்.சிவள்ளி மார்ச் 22-ஆம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார். இதேபோல, கலபுர்கி மாவட்டத்தின் சின்சோளி சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த உமேஷ் ஜாதவ் தனது பதவியை மார்ச் 4-ஆம் தேதி ராஜிநாமா செய்துவிட்டு, பாஜகவில் இணைந்தார். 
இதன்காரணமாக காலியாக உள்ள குந்தகோல், சின்சோளி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மே 19-ஆம் தேதி இடைத் தேர்தல் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஏப்.22-ஆம் தேதி தொடங்கியது. ஏப்.29-ஆம் தேதி வரை வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 
கடந்த ஒரு மாதமாக மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் தீவிரம் காட்டிவந்த அரசியல் கட்சிகள்,  தற்போது 2 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் கவனத்தைச் செலுத்தியுள்ளது. இத் தொகுதியில் காங்கிரஸுக்கு ஆதரவளிப்பதாக மஜத அறிவித்துள்ளது. 
எனவே,  இரு தொகுதிகளிலும் காங்கிரஸுக்கும், பாஜகவுக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.  வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி நெருங்கிக் கொண்டிருப்பதால்,  வேட்பாளர்கள் தேர்வில் அரசியல் கட்சிகள் மும்முரமாக உள்ளன. 
சின்சோளி,  குந்தகோல் ஆகிய இரு தொகுதிகளும் காங்கிரஸ் கைவசம் இருந்ததால், மீண்டும் இத் தொகுதிகளை தக்கவைத்துக் கொள்ள காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது. இதேபோல,  மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசைக் கவிழ்க்க இரு தொகுதிகளிலும் வெல்ல வேண்டிய  கட்டாயத்தில் பாஜக உள்ளது. 
வேட்பாளர் தேர்வு தொடர்பாக விவாதிக்க பெங்களூரு பாஜக தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை அக் கட்சியின் மாநிலத் தலைவர் எடியூரப்பா தலைமையில் கட்சியின் மாநில உயர்நிலைக் குழு கூட்டம் நடைபெற்றது.  இக் கூட்டத்தில் கலபுர்கி, தார்வாட் மாவட்ட பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 
கூட்டத்தில், இரு வேட்பாளர்களின் பெயர்களை முடிவு செய்து,  மத்திய பாஜகவுக்கு ஒப்புதலுக்காக அனுப்பி வைத்துள்ளதாக எடியூரப்பா தெரிவித்தார்.  காங்கிரஸிலிருந்து அண்மையில் விலகி கலபுர்கி மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டுள்ள உமேஷ் ஜாதவின் தம்பி ராமசந்திர ஜாதவ் பெயரை சின்சோளி தொகுதிக்கும், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் குறைந்தவாக்கில் தோல்வியைத் தழுவிய சிக்கன கெளடாவை குந்தகோல் தொகுதிக்கும் பாஜக பரிந்துரைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதேபோல,  காங்கிரஸ் வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது குறித்து ஆலோசிக்க பெங்களூரு, காங்கிரஸ் அலுவலகத்தில் வியாழக்கிழமை அக் கட்சியின் மாநிலத்தலைவர் தினேஷ் குண்டுராவ் தலைமையில் கூட்டம் நடந்தது.  இக்கூட்டத்தில் கலபுர்கி, தார்வாட் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர். குந்தகோல் தொகுதியில் மறைந்த அமைச்சர் சிவள்ளியின் மனைவி குசுமாவையும்,  சின்சோளி தொகுதியில் முன்னாள் அமைச்சர் கே.பி.சானப்பா அல்லது பாபுராவ் செளஹான் ஆகிய இருவரில் ஒருவரை நிறுத்த காங்கிரஸ் முடிவுசெய்துள்ளது.  இரு கட்சிகளின் வேட்பாளர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இரண்டொரு நாள்களில் வெளியாகுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com