290 விஞ்ஞானி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 04th August 2019 05:14 AM | Last Updated : 04th August 2019 05:14 AM | அ+அ அ- |

மத்திய அரசின் பல்வேறு நிறுவனங்களில் காலியாக உள்ள 290 விஞ்ஞானி பதவிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து ஆள்சேர்ப்பு மற்றும் மதிப்பீட்டு மையம் (ஆர்ஏசி) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மத்திய அரசின் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ), மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை(டிஎஸ்டி), விமானவியல் வளர்ச்சி முகமை (ஏடிஏ), கேலியம் அர்சேனைட் எனேப்லிங் தொழில்நுட்ப மையம் (கேடெக்) போன்ற நிறுவனங்களில் காலியாக உள்ள 290 விஞ்ஞானி பதவிகளுக்கான பணியிடங்களுக்கு ஆள் தேர்வு நடத்தப்படுகிறது.
இந்தப் பணியில் சேர ஆர்வமுள்ளவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இளநிலை பொறியியல் பட்டதாரிகள், முதுநிலை அறிவியல் பட்டதாரிகள், இறுதி ஆண்டு மாணவர்கள் இப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இப் பதவிகளில் சேரத் தகுதியடைந்தால், மாதம் ரூ.80 ஆயிரம் வரை ஊதியம் அளிக்கப்படும். மின்னணுவியல், தகவல் தொடர்பியல், இயந்திரவியல், கணினி அறிவியல், வேதியியல், இயற்பியல், மின்னியல், விமானவியல், கணிதம், உலோகவியல், உலோக அறிவியல், கட்டடவியல், நில அமைப்பியல், கருவியியல், துகிலியல், தொழிலக உற்பத்தி, உணவு அறிவியல் பாடங்களில் இளநிலை அல்லது முதுநிலை பட்டம் படித்தோர் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் பல்வேறு பிரிவுகளுக்கு 28 வயது முதல் 40 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும்.
இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 011-23889533, 23889526 என்ற தொலைபேசி எண்கள், மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...