அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 150 இடங்களைக் கைப்பற்ற பாடுபடுவோம்: முதல்வர் எடியூரப்பா

கர்நாடகத்தில் இன்னும் 3 ஆண்டுகள் கழித்து நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 150 இடங்களைப்
Updated on
1 min read

கர்நாடகத்தில் இன்னும் 3 ஆண்டுகள் கழித்து நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 150 இடங்களைப் பிடிக்க பாடுபடுவோம் என்று முதல்வர் பி.எஸ். எடியூரப்பா தெரிவித்தார்.
கர்நாடக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நளின்குமார் கட்டீல்,  பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள பாஜக அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.  அவரிடம் பொறுப்புகளை ஒப்படைத்து முதல்வர் எடியூரப்பா பேசியது: 
கர்நாடகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் நடைபெறுவதற்கு இன்னும் 3 ஆண்டுகள் 10 மாதங்கள் உள்ளன.  அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக ஆட்சியைப் பிடிக்க வேண்டும்.  அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்க 150 தொகுதிகள் வரை வெற்றி பெற வேண்டிய அவசியமுள்ளது.  எனவே, கட்சியைப் பலப்படுத்த வேண்டும். அதற்காக இப்போதிருந்தே பாடுபடுவோம். 
மாநிலத்தில் பாஜக ஆட்சியைப் பிடிக்க மக்களே முக்கிய காரணம்.  அவர்களின் பிரச்னைகளை தீர்க்க கட்சியினர் முன்னுரிமை அளித்து பாடுபட வேண்டும்.  முதல்வர் பதவியை ஏற்ற பிறகு,  ஒரு நிமிடம் கூட ஓய்வு எடுக்காமல் பணியாற்றி வருகிறேன்.  தற்போது சிறந்த அமைச்சரவை உருவாகியுள்ளது.  இதன்மூலம் மக்களுக்குப் பணியாற்றுவதிலும், மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லவும் அனைவரும் உறுதுணையாக இருப்போம்.
மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பணிகள் செய்வது பெரும் சவாலானதாகும்.  என்றாலும், அனைவரும் ஒன்றிணைந்து நிவாரணப் பணிகளை மேற்கொள்வோம்.  கட்சியின் மாநிலத் தலைவராகப் பதவி ஏற்றுள்ள நளின்குமார் கட்டீல் சாதாரண தொண்டராக தனது பணியைத் தொடங்கி,  தற்போது அவர் தலைவராக உயர்ந்துள்ளார்.  அவர் கட்சியை வளர்ப்பதில் அதிக கவனம் செலுத்துவார் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.


"கர்நாடக பாஜக தலைவர் பொறுப்பை சிறப்பாக நிர்வகிப்பேன்'

பாஜக மேலிடம் வழங்கியுள்ள கர்நாடக பாஜக தலைவர் பொறுப்பை சிறந்த முறையில் நிர்வகிப்பேன் என்று நளின்குமார் கட்டீல் தெரிவித்தார்.
பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள பாஜக அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை கர்நாடக பாஜக தலைவராக பொறுப்பேற்று அவர் பேசியது: நான் மெத்த படித்த அறிஞர் அல்ல. கட்சியில் சாதாரண தொண்டராக இணைந்து படிப்படியாக உயர்ந்து, தற்போது தலைவர் பதவியை அடைந்துள்ளேன். இந்த பதவியை எப்படி நிர்வகிப்பது என்ற அச்சம் இருந்தாலும், திறமையாக நிர்வகிப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது. கட்சி எனக்கு வழங்கியுள்ள இந்த பொறுப்பை சிறப்பாக நிர்வகிப்பேன். 
மாநிலத்தின் முதல்வரும், கட்சியின் மூத்த தலைவருமான எடியூரப்பாவின் ஆசீர்வாதம் எனக்குள்ளது. மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அனந்த்குமார் போன்றவர்களின் உழைப்பால் கட்சி இந்த நிலைமைக்கு உயர்ந்துள்ளது. மாநிலத்தில் முதல்வராக உள்ள எடியூரப்பா, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு சென்று நிவாரணப் பணிகளை கவனித்து வருகிறார். அவருக்கு உறுதுணையாக கட்சி தொண்டர்களும் இருப்பார்கள் என்றார்.
நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் அங்கடி, கட்சியின் மாநில பொறுப்பாளர் முரளிதரராவ், துணை முதல்வர்கள் கோவிந்தகார்ஜோள், அஸ்வத்நாராயணா, லட்சுமண்சவதி, அமைச்சர்கள் ஈஸ்வரப்பா, பசவராஜ்பொம்மை, சுரேஷ்குமார், சி.டி.ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com