மூங்கில் வளர்ப்புக்கு ஊக்கம்
By DIN | Published On : 12th February 2019 08:47 AM | Last Updated : 12th February 2019 08:47 AM | அ+அ அ- |

தேசிய அளவில் மூங்கிலை வளர்க்கும் விவசாயிகளை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசின் இந்திய பிளைவுட் தொழில்துறை ஆய்வு மற்றும் பயிற்சி மையத்தின் இயக்குநரும், கண்காட்சியின் தலைவருமான பி.என்.மொகந்தி தெரிவித்தார்.
பெங்களூரில் திங்கள்கிழமை 2 நாள் நடைபெறும் மூங்கில் கண்காட்சியை தொடக்கி வைத்து அவர் பேசியது: சர்வதேச அளவில் மூங்கிலின் பயன்பாடும், வரவேற்பும் அதிகளவில் உள்ளது. ஆனால், மூங்கிலை விளைவிக்க விவசாயிகள் பலரும் தயக்கம் காட்டி வருகின்றனர்.
தென்னிந்தியாவில் கேரள மாநிலத்தில் அதிகளவில் மூங்கில் விளைவிக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, வடகிழக்கு மாநிலங்களில் அதிகப்படியாக மூங்கில் விளைவிக்கப்படுகிறது.
மூங்கில்களுக்கு இந்தியாவில் மட்டுமின்றி ஆசியா, ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மூங்கிலால் செய்யப்படும் பொருள்களுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் அதிக வரவேற்பு உள்ளது. மூங்கிலின் தேவை அதிகரித்துள்ளதால், தேசிய அளவில் மூங்கில் வளர்ப்புக்கு ஊக்கமளிக்கப்படும். கண்காட்சியில் மூங்கில் வளர்ப்பு குறித்தும், அதன் பயன்பாடு குறித்தும் விளக்கப்படும் என்றார் அவர்.
நிகழ்ச்சியில், கிழக்கு மண்டல வளர்ச்சி செயலகத்தின் செயலர் நவீன் வர்மா, சிந்தாந்தாதாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.