"பெண்களின் உரிமைகளுக்காக போராடுவோம்'
By DIN | Published On : 04th January 2019 08:12 AM | Last Updated : 04th January 2019 08:12 AM | அ+அ அ- |

பெண்களின் உரிமைகளுக்காகவும், வளர்ச்சிக்காவும் போராடுவோம் என்று தேசிய மகளிர் கட்சியின் தலைவர் ஸ்வேதா ஷெட்டி தெரிவித்தார்.
பெங்களூரில் வியாழக்கிழமை அக்கட்சியை அறிமுகம் செய்துவைத்து அவர் பேசியது:
தேசிய அளவில் அனைத்து துறைகளின் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். ஆண் ஆதிகத்தின் தாக்கம் இன்னும் குறையாமல் உள்ளது. அரசியலிலும், தொழில் துறையிலும் பெண்கள் மிகவும் பின்தங்கியுள்ளனர். பெண்களின் உரிமைகளுக்காகவும், வளர்ச்சிக்காகவும் போராட வேண்டும் என்பதற்காகவே இக் கட்சியைத் தொடங்கியுள்ளோம்.
2019-ஆம் ஆண்டில் நடைபெறும் மக்களவைத் தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீதம் ஒதுக்கீடு செய்து வாய்ப்பு அளிக்க வேண்டும். 2018-ஆம் ஆண்டில் பெண்கள் மீதான பாலியல் பலாத்காரம் அதிகரித்துள்ளது. இதைத் தடுக்க பெண்களுக்கான கட்சி ஆட்சியைப் பிடிக்க வேண்டும். பெண்களுக்கு கல்வி அறிவை போதிப்பதோடு, யாருடைய உதவியும் இல்லாமல் சுதந்திரமாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும்.
பெரும்பாலான கட்சிகளில் ஆண்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதால், பெண்களுக்கு அரசியலில் 545 உறுப்பினர்கள் கொண்ட மக்களவையில், 11 சதவீதம் மட்டுமே பெண்கள் உள்ளனர். மக்களவையில் குறைந்த பட்சம் 33 சதவீதமாவது பெண் உறுப்பினர்கள் இருக்க வேண்டும். வரும் மக்களவைத் தேர்தலில் குறைந்தபட்சம் 50 சதவீதம் பெண் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதற்காக எங்கள் கட்சி பாடுபடும் என்றார்.