மக்களவைத் தேர்தலில் மஜத தனித்துப் போட்டியா?

வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுடனான தொகுதிப் பங்கீட்டில் இழுபறி ஏற்பட்டால், தனித்துப் போட்டியிட்டு

வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுடனான தொகுதிப் பங்கீட்டில் இழுபறி ஏற்பட்டால், தனித்துப் போட்டியிட்டு பிறகு காங்கிரஸுக்கு ஆதரவளித்துக் கொள்ளலாம் என்ற மாய கணக்கில் மஜத திட்டம் வகுத்துள்ளது.
ஆட்சியிலிருக்கும் போது தேர்தல் வெற்றியை எளிதில் பெற்றுவிடலாம்; இதுவே தமக்கான தருணம் என முடிவு செய்துள்ள மதச் சார்பற்ற ஜனதா தள தலைவர்கள், மக்களவைத் தேர்தலில் 28 தொகுதிகளில் 9 முதல் 12 தொகுதிகளை காங்கிரஸ் தமக்கு ஒதுக்க வேண்டும் என்ற முடிவில் உறுதியாக உள்ளனர்.
கர்நாடகத்தில் பாஜகவுக்கு ஆட்சி அமைக்கும் வாய்ப்பை தட்டிப்பறிப்பதற்காக, 37 இடங்களில் மட்டுமே வென்றிருந்த மஜதவுக்கு முதல்வர் பதவியை வாரிவழங்கி அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆட்சி நடத்த நிபந்தனையற்ற ஆதரவை அளித்தது காங்கிரஸ். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ராகுல்காந்தியின் இந்த முடிவுக்கு கட்டுப்பாட்டாலும், இது கர்நாடக காங்கிரஸ் தலைவர்களின் மனதுக்கு திருப்தியை தரவில்லை. 
மஜதவுக்கு ஆதரவு தருவது அல்லது அக்கட்சியுடன்கூட்டணி அமைத்து போட்டியிடுவது தனது அழிவுக்கு தானே வழிவகுத்துக் கொள்வது என்பது உள்ளூர் காங்கிரஸாருக்கு நன்றாக தெரியும். அதனால்,  கூட்டணியை விரும்பாவிட்டாலும், பாஜகவுக்கு எதிரான அரசியல் தந்திரமாக மஜதவை ஆதரிக்க வேண்டிய நிலைக்கு காங்கிரஸார் தள்ளப்பட்டுள்ளனர்.  
கூட்டணி அரசு அமைத்தபிறகு, அண்மையில் நடந்த 3 மக்களவைத் தொகுதிகள், 2 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட்டு, 2 சட்டப்பேரவை, 2 மக்களவைத் தொகுதிகளைக் கைப்பற்றியது. இது பாஜகவுக்கு எதிரான வலுவான கூட்டணியாக கருதப்படுகிறது. 
இடைத்தேர்தலுக்கு முன்பாக, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் மஜதவும், காங்கிரஸும் தனித்தனியே போட்டியிட்டன. காங்கிரஸும், மஜதவும் ஒருவரை ஒருவர் திட்டிக்கொள்ளாமல் பாஜகவை குறிவைத்து, தனியாக போட்டியிட்டன.
இத்தேர்தலில் காங்கிரஸ் கணிசமான வெற்றியை ஈட்டியது. இதேபோல, மஜதவும் திருப்திகரமான இடங்களைக் கைப்பற்றியிருந்தது. அறுதிப்பெரும்பான்மை பலமில்லாத மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் காங்கிரஸும், மஜதவும் கூட்டணி அமைத்துக்கொண்டன. கூட்டணி அரசு அமைந்தவுடன் நடந்த ராஜராஜேஸ்வரிநகர், ஜெயநகர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தலிலும் காங்கிரஸும், மஜதவும் தனியாகவே போட்டியிட்டன. ஆனால், வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசுக்கு ஆதரவு அளித்துக்கொண்டன. 
இதேபோன்றதொரு திட்டத்தை ஏன் மக்களவை தேர்தலிலும் பின்பற்றக்கூடாது என்ற எண்ணம் மஜதவின் முன்னணித் தலைவர்களிடையே தோன்றியுள்ளது. 
மக்களவைத் தொகுதியில் கர்நாடகத்தில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் மூன்றில் ஒருபங்கு என்றளவில் 9-12 இடங்களை மஜத எதிர்பார்த்து காத்திருக்கிறது. இத்தனை இடங்களை கொடுக்கமுடியாத நிதர்சனத்தை மஜதவுக்கு விளக்க காங்கிரஸ் தயாராக இருந்தாலும், அதை கேட்கும் நிலையில் மஜத இல்லை. 
கட்சி ஆட்சியில் இருக்கும் போது வெற்றிவாய்ப்பு எளிதில் வந்துசேரும் நேரத்தில் குறைந்த தொகுதிகளில் போட்டியிட்டு அந்தவாய்ப்பை இழக்க மஜத தயாராக இல்லை. குறைந்தது 9 இடங்களிலாவது போட்டியிடுவது என்ற முடிவில் மஜத உள்ளது. மஜதவுக்கு அதிகபட்சமாக 6-7 தொகுதிகளை ஒதுக்கும் எண்ணத்தில் காங்கிரஸ் உள்ளது. இம்மாத இறுதியில் மக்களவைத் தொகுதி பங்கீடுக்கான பேச்சுவார்த்தை நடக்கவிருக்கிறது. அந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால், மாநிலத்தில் கூட்டணி அரசுக்கு அளித்துவரும் ஆதரவு வேறு, மக்களவை தேர்தல் கூட்டணி வேறு என்று பேசி, மக்களவைத் தேர்தலில் தனித்து போட்டியிடும் யோசனையில் மஜத முன்னணித் தலைவர்கள் மூழ்கியுள்ளனர். 
உள்ளாட்சித் தேர்தலை போல தனித்து போட்டியிட்டு, தேர்தலுக்கு பிறகு கூட்டணி அமைத்துக்கொள்ளலாம் என்று மஜத யோசிக்கிறது. அப்போது, 28 தொகுதிகளிலும் வேட்பாளர்களை களமிறக்கி, மாநிலம் முழுவதும் தனது வேர்களை பரப்பிக் கொள்ளலாம் என்று மஜத திட்டமிடுகிறது. இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலைக்காகத்தான் காங்கிரஸும் தயாராக இருப்பது போன்ற சமிக்ஞைகள் தென்பட தொடங்கியுள்ளன. முதல்வர் குமாரசாமி தலைமையிலான மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசை தொந்தரவு செய்யாமல், மக்களவைத் தேர்தலுக்கு முந்தைய தொகுதிபங்கீடு அல்லது கூட்டணியை ஒத்திவைக்க இருகட்சிகளின் தொண்டர்களும் விரும்புகிறார்கள். 
தேர்தல் முடிந்ததும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்க மஜத திட்டமிட்டுள்ளதாக அக்கட்சியின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com