ஜூன் 12-இல் கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை
By DIN | Published On : 09th June 2019 05:28 AM | Last Updated : 09th June 2019 05:28 AM | அ+அ அ- |

கர்நாடகத்தில் ஜூன் 12-ஆம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் ஜூன் 1-ஆம் தேதி கேரள மாநிலத்தில் பொழியத் தொடங்குவது வழக்கம். அப்போது, கர்நாடகத்தில் ஜூன் 5-ஆம் தேதி தென்மேற்கு பருவமழை பெய்வது வாடிக்கை. நிகழாண்டில் இது 3-4 நாள்கள் தாமதமாகியுள்ள நிலையில், தென்மேற்கு பருவமழை ஜூன் 12-ஆம் தேதி கர்நாடகத்தில் பெய்யத் தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பெங்களூரு வானிலைஆய்வுமைய (பொ) இயக்குநர் கீதா அக்னிஹோத்ரி கூறியது: தென்மேற்கு பருவமழை ஜூன் 12-ஆம் தேதி முதல் கர்நாடகத்தில் பொழிய இருக்கிறது. வழக்கமாக ஜூன் 5-ஆம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை பெய்வது வழக்கம். நிகழாண்டில் இது தாமதமாகியுள்ளது.
அடுத்த 3 நாள்களில் பெங்களூரு மற்றும் தென் கர்நாடகத்தின் உள்பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், இடியுடன் கூடிய மழை பெய்யும். இது தென்மேற்கு பருவமழைக்கு முந்தைய மழையாகும். இதை தென்மேற்கு பருவமழை என்று தவறாக புரிந்துகொள்ளக் கூடாது என்றார் அவர்.
கர்நாடக மாநில இயற்கை பேரிடர் கண்காணிப்புக்குழு இயக்குநர் ஜி.ஸ்ரீனிவாச ரெட்டி கூறியது: கடந்த ஆண்டில் கர்நாடகத்தில் 6 சதவீத மழை குறைவாக பெய்தது. வட கர்நாடகத்தில் மட்டும் 37 சதவீத மழை குறைவாக காணப்பட்டது. கடந்த 3-4 ஆண்டுகளாகவே வட கர்நாடகத்தில் கடுமையான வறட்சி காணப்படுகிறது.
தற்போதைய நிலவரப்படி, வட கர்நாடகத்தில் 97 சதவீத மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதனால், இம்முறை வட கர்நாடக மக்கள் நம்பிக்கையுடன் இருக்கலாம். கர்நாடக அரசின் திட்டப்படி செயற்கை மழைக்கு ஏற்பாடு செய்யப்படும். இதன் காரணமாக 27.95 சதவீத மழை கூடுதலாக இருக்கும் என்றார் அவர்.