வாயு புயல் எதிரொலி: கடலோர கர்நாடகத்தில்கடல் கொந்தளிப்பால் வீடுகள் சேதம்
By DIN | Published On : 14th June 2019 10:33 AM | Last Updated : 14th June 2019 10:33 AM | அ+அ அ- |

வாயு புயல் எதிரொலியால், கடலோர கர்நாடகத்தில் கடல் கொந்தளிப்பால் வீடுகள் சேதமடைந்தன. இதையடுத்து, அங்கு வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் அண்மையில் தென்மேற்கு பருவ மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
இதனிடையே அரபிக் கடல் பகுதியில் உருவாகி உள்ள வாயு புயல் காரணமாக பல்வேறு பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. கடந்த சில நாள்களாக உடுப்பி, கார்வார், மங்களூரு, கடலோர கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் சீரான இடைவெளியில் பலத்த காற்றுடன் கன மழை பெய்து
வருகிறது.
இதனால் உல்லால், கார்வார் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதுடன், ராட்சத அலை வீசுகிறது. இந்த ராட்சத அலையின் காரணமாக கடலோரப் பகுதிகலிலு உள்ள சில வீடுகள் இடிந்து விழுந்தன.
கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதாலும், மேலும் 48 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும் என்பதாலும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதுதவிர, கடலோரப் பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான பகுதிகளில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.
மழையால் கடந்த சில மாதங்களாக வறண்டு கிடந்த நேத்ராவதி, குமாரதாரா, பால்குனி, சவ்பார்னிகா, சீதா ஆகிய ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.