வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு
By DIN | Published On : 14th June 2019 10:33 AM | Last Updated : 14th June 2019 10:33 AM | அ+அ அ- |

நாட்டில் கடந்த 5 ஆண்டு கால பாஜக ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது என்று கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
மைசூரில் அவர் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம்
கூறியது:-
கடந்த 5 ஆண்டுகளாக மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்றது. 2-வது முறையாகவும் மீண்டும் பிரதமர் மோடி ஆட்சியை பிடித்துள்ளார்.
5 ஆண்டுகள் ஆட்சியில் பொருளாதாரம் பின்னடைவைச் சந்தித்துள்ளது. வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது.
விவசாயிகள், இளைஞர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். புல்வாமா தாக்குதலில் நடைபெறுவதற்கு முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால், அப்பாவி ராணுவ வீரர்கள் உயிரிழந்திருக்க மாட்டார்கள். இதில் உளவுத்துறை தோல்வி அடைந்துள்ளது. உளவுத்துறை தோல்வி குறித்து மக்களுக்கு விளக்கம் அளிக்காமல், மத்திய அரசு மக்களை திசை திருப்பி வருகிறது.
புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து இந்திய ராணுவம் துல்லியல் தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து, தேசபக்தர் என்று மோடி போற்றப்படுகிறார். அவரை விமர்சனம் செய்தால் ஏதோ தேசக் குற்றம் செய்தது போல சித்தரிக்கும் சூழலை ஏற்படுத்தியுள்ளனர். இந்திய வரலாற்றில் தற்போது உள்ளதுபோல வேறு எப்போதும் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்ததில்லை. ரூபாயின் மதிப்பும் குறைந்துள்ளது.
5 ஆண்டுகால ஆட்சியில், மோடி கூறிக்கொள்ளும்படி எந்த வளர்ச்சிப் பணிகளையும் செய்யவில்லை. ஆனால் அந்த உண்மையை கூற முடியாத சூழல் தேசிய அளவில் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார் சித்தராமையா.