திட்டங்களைச் செயல்படுத்துவதில் கூட்டணி அரசு சிறந்து விளங்குகிறது: கர்நாடக முதல்வர் குமாரசாமி

கர்நாடகத்தில் மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் காங்கிரஸ்- மஜத கூட்டணி அரசு சிறந்து விளங்குகிறது என்று முதல்வர் குமாரசாமி தெரிவித்தார்.

கர்நாடகத்தில் மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் காங்கிரஸ்- மஜத கூட்டணி அரசு சிறந்து விளங்குகிறது என்று முதல்வர் குமாரசாமி தெரிவித்தார்.
நகர்ப்புற வளர்ச்சித் துறை சார்பில் வீடுகள் கட்டுவதற்கு லேஅவுட்டுகளை உருவாக்குவதற்கு அனுமதி பெறுவதற்கான இணையதளச் சேவை தொடக்க விழா பெங்களூரு விதானசெளதாவில் வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவில் குமாரசாமி பேசியது:-
அண்மைக்காலமாக வீடுகள் கட்டுவதற்கும் லேஅவுட்டுகளை உருவாக்குவதற்கும்,  நிலங்களை விற்பனை செய்வதற்கும் பல்வேறு பிரச்னைகளை மக்கள் சந்தித்து வருகின்றனர். இதில்,  ஒரு சில இடங்களில் முறைகேடு நடப்பதாகவும் புகார்கள் வந்துள்ளன. 
இந்த நிலையில் வீடுகள் கட்டுவதற்கும் லேஅவுட்டைகளை உருவாக்குவதற்கும், நிலங்களை விற்பனை செய்வதற்கும் யாருடைய தலையீடும் இல்லாமல் நேரடியாக அனுமதி பெறும் வகையில் இணையதளச் சேவையை உருவாக்கியுள்ளனர். இந்தச் சேவை மூலம் மக்கள் எளிதாக அனுமதியைப் பெற முடியும். இதன்மூலம் முறைகேடுகள் நடைபெறமுடியாமல் தடுக்க முடியும். 
தேசிய  அளவில் இது இந்தச் சேவை முன்னுதாரணமாக விளங்குகிறது. நகர்ப்புற வளர்ச்சித் துறை மக்களுக்கு பாரபட்சமற்ற சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கில் இந்த இணையதளச்சேவையைத் தொடங்கியுள்ளது. இதுபோன்ற மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் காங்கிரஸ்- மஜத கூட்டணி அரசு சிறந்து விளங்குகிறது. 
மக்களுக்கு உதவும் பல திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்தவும் கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. அனைத்து நகரங்களை மேம்படுத்த தலா ரூ. 150 கோடி அடிப்படை கட்டுமானவசதிகளைச் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு மாநகரில் புறநகர் ரயில் சேவை திட்டத்தை தொடங்கும் திட்டமிட்டுள்ளோம். இது குறித்து விரைவில் மத்திய ரயில்வே அமைச்சரை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தப்படும். போக்குவரத்து நெரிசலைக் குறைக்க வெளிவட்டச்சாலைகளை அமைக்கும் பணிகளும் தொடங்கப்படும் என்றார் அவர். 
நிகழ்ச்சியில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் யு.டி.காதர், மேயர் கங்காம்பிகே, நகர்ப்புற வளர்ச்சித்துறை கூடுதல் செயலாளர் மகேந்திரஜெயின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com