இந்திரா உணவகத்தில் உணவின் தரம் குறைந்தால் நடவடிக்கை: துணை முதல்வர் ஜி.பரமேஸ்வர் எச்சரிக்கை
By DIN | Published On : 22nd March 2019 08:54 AM | Last Updated : 22nd March 2019 08:54 AM | அ+அ அ- |

இந்திரா உணவகத்தில் தரம் குறைந்த உணவு விநியோகிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதல்வர் ஜி.பரமேஸ்வர் தெரிவித்தார்.
இந்திரா உணவகங்களில் தரமற்ற, நச்சுத்தன்மை கொண்ட உணவுகளை வழங்குவதாக கோவிந்தராஜ்நகர் வார்டு பாஜக மாமன்ற உறுப்பினர் உமேஷ்ஷெட்டி அண்மையில் குற்றம் சாட்டினார். இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், வியாழக்கிழமை நாயண்டஹள்ளி, கோவிந்தராஜ்நகர், தீபாஞ்சலிநகர், தாசப்பா சதுக்கத்தில் உள்ள இந்திரா உணவகங்களை துணை முதல்வரும், பெங்களூரு மாவட்ட பொறுப்பு அமைச்சருமான ஜி.பரமேஸ்வர் ஆய்வு செய்தார்.
அவருடன் மேயர் கங்காம்பிகே, துணை மேயர் பத்ரேகெளடா, மாநகராட்சி ஆளும்கட்சித் தலைவர் அப்துல்வாஜித், மாநகராட்சி ஆணையர் மஞ்சுநாத்பிரசாத் உள்ளிட்டோர் உடன் சென்றனர். ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியது: அண்மையில் பாஜக மாமன்ற உறுப்பினர் எழுப்பிய குற்றச்சாட்டையடுத்து, பெங்களூரில் உள்ள அனைத்து இந்திரா உணவகங்களின் உணவுகளை எடுத்துச் சென்று பரிசோதனை செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சோதனையின் முடிவு வெளியானால், பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகம் விலகும். ஏழைகள், கூலித்தொழிலாளிகள் அதிக அளவு உணவு உண்ணும் இந்திரா உணவங்கள் மீது அவதூறு கூறுவதை நிறுத்த வேண்டும். ஒருவேளை உணவு சமைக்கும் ஒப்பந்ததாரர்கள் உணவின் தரத்தைக் குறைத்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு, ஒப்பந்தமும் ரத்து செய்யப்படும்
என்றார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...