எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்கியது: மொழிப் பாடத் தேர்வு எளிதாக இருந்ததால் மாணவர்கள் மகிழ்ச்சி

கர்நாடகத்தில் வியாழக்கிழமை தொடங்கிய எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் முதலாம் மொழிப்பாடத் தேர்வு எளிதாக இருந்ததாக மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
Updated on
1 min read

கர்நாடகத்தில் வியாழக்கிழமை தொடங்கிய எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் முதலாம் மொழிப்பாடத் தேர்வு எளிதாக இருந்ததாக மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
கர்நாடகம் முழுவதும் 34 கல்வி மாவட்டங்களில் அமைக்கப்பட்டிருந்த 2,847 தேர்வுமையங்களில் 8,41,666 மாணவர்கள் எஸ்எஸ்எல்சி தேர்வு எழுதினர். பதற்றமான 46 மையங்கள், மிகவும் பதற்றமான 7 மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தேர்வு மையங்களில் இருந்து 200 மீட்டர் சுற்றளவில் 144 தடையுத்தரவு அமல்படுத்தப்பட்டிருந்தது. 
தேர்வு மையங்களை சுற்றியுள்ள பகுதிகளில் ஆள்நடமாட்டமும் முழுமையாக தடை செய்யப்பட்டிருந்தது. அதேபோல, தேர்வு மையங்களுக்கு அருகேயிருந்த நகலகங்கள் மூடப்பட்டிருந்தன. முதல்நாள் தேர்வின் போது முறைகேடுகள் எதுவும் நடக்கவில்லை என்று கர்நாடக உயர்நிலைக் கல்வி தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
முதல்நாள் நடைபெற்ற முதலாம் மொழிப்பாட வினாத்தாள் எளிதாக இருந்ததாக மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். கன்னடம், ஆங்கிலம், தமிழ், சம்ஸ்கிருதம் உள்ளிட்ட அனைத்து மொழிப்பாடங்களும் எளிதாக இருந்ததாக மாணவர்கள் கூறினார்கள். எஸ்ஜேஆர் உயர்நிலைப்பள்ளி மாணவர் அபிஷேக் கூறுகையில்,"கன்னட மொழிப் பாட வினாத்தாள் மிகவும் எளிதாக இருந்தது. குறிப்பாக, இலக்கணம், கட்டுரை, கடிதம், பழமொழி, கவிஞர்கள் பற்றிய குறிப்பு, கட்டுரை, செய்யுள் உள்ளிட்ட எல்லா பகுதிகளும் எளிமையான கேள்விகளை கொண்டிருந்தது. 4 மதிப்பெண் வினாக்கள் கொஞ்சம் கடினமாக இருந்தது. மற்றபடி இவ்வளவு எளிமையான தேர்வை நான் எதிர்பார்க்கவில்லை. 100-க்கு 80 மதிப்பெண்களை எளிதாக பெறும் நம்பிக்கை உள்ளது' என்றார்.
இதேபோல, ஆங்கில மொழிப் பாடத் தேர்வும் எளிமையாக இருந்ததாகவும், ஒருமதிப்பெண் வினாக்கள் மட்டும் கடினமாக தரப்பட்டிருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். புனித மீராஸ் உயர்நிலைப் பள்ளி மாணவர் பிரணவ் கூறுகையில்,"முதல்தேர்வு என்பதால் பயமாக இருந்தது. ஆனால் எதிர்பாராத வகையில் வினாத்தாள் எளிதாக இருந்தது. ஒருமதிப்பெண் வினாக்கள் மட்டும் குழப்பமாக இருந்தது. மற்றபடி வினாத்தாளின் பிற கேள்விகள் பதிலளிக்கும் வகையில் இருந்தது. மொத்தத்தில் ஆங்கிலத்தேர்வு நிறைவாக இருந்தது' என்றார்.
பெங்களூரில் உள்ள புனித அல்போன்சியர் உயர்நிலைப்பள்ளி மாணவி வி.கயல்விழி கூறுகையில்,"தமிழ்மொழி அறிவை சோதிக்க நடத்தப்பட்ட தேர்வு எளிமையான கேள்விகளால் அமைக்கப்பட்டிருந்தது. கட்டுரை, கடிதம், உரைநடை, செய்யுள் பகுதிகளில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகள் எழுதுவதற்கு நன்றாக இருந்தது. நல்ல மதிப்பெண் கிடைக்கும் நம்பிக்கை உள்ளது' என்றார். அடுத்ததாக மார்ச் 25-ஆம் தேதி கணிதப் பாடத்தேர்வு நடக்கவுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com