காங்கிரஸ்-மஜத கூட்டணியை சீர்குலைக்கும் நீண்டகால அரசியல் பகைமை!
By DIN | Published On : 28th March 2019 09:03 AM | Last Updated : 28th March 2019 09:03 AM | அ+அ அ- |

முன்னாள் பிரதமர் எச்.டி.தேவெ கெளடா மற்றும் முன்னாள் முதல்வர் சித்தராமையா இடையே நிலவும் நீண்டகால அரசியல் பகைமை காங்கிரஸ்-மஜத கூட்டணியின் அரசியல் திட்டங்களை சீர்குலைத்துவருகிறது.
ராம்மனோகர்லோகியாவால் சோசலிச அரசியலில் ஏற்பட்ட ஆர்வத்தால் அரசியல் களம் கண்டிருந்தாலும், முன்னாள் முதல்வர் ராமகிருஷ்ணஹெக்டே, முன்னாள் பிரதமர் எச்.டி.தேவெகெளடாவால் அரசியலில் வளர்த்தெடுக்கப்பட்டவர் சித்தராமையா. ராமகிருஷ்ணஹெக்டேவுக்கும் எச்.டி.தேவெகெளடாவுக்கும் அரசியல் பிளவு ஏற்பட்டபோது, தேவெ கெளடாவை பின்தொடர்ந்தவர் சித்தராமையா.
1996-இல் பிரதமராக தேவெ கெளடா பதவியேற்றபோது, கர்நாடகத்தில் ஜே.எச்.பாட்டீல் தலைமையில் அமைந்த ஜனதாதள அரசில் சித்தராமையாவுக்கு துணைமுதல்வர் பதவி வழங்கினார் தேவெ கெளடா. 2004-இல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காதபோது, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி கூறியபோதும் முதல்வராக்காமல் தன்னை தட்டிக்கழித்ததால் தேவெ கெளடா மீது சித்தராமையா ஆத்திரமடைந்தார்.
ஆனாலும், அப்போது அமைந்த தரம்சிங் அமைச்சரவையில் துணைமுதல்வராக சித்தராமையா பதவிவகித்திருந்தார். முதல்வராகும் வாய்ப்பை தட்டிப்பறித்ததை தாங்கிக் கொள்ள முடியாததால் தேவெ கெளடாவுக்கும் சித்தராமையாவுக்கும் இடையே கருத்துவேறுபாடு அதிகரித்தது. இது முற்றிய நிலையில் 2005-ஆம் ஆண்டு மஜதவில் இருந்துவிலகிய சித்தராமையா, காங்கிரஸில் இணைந்து 2013-ஆம் ஆண்டு முதல் 5 ஆண்டுகள் பதவிவகித்துவிட்டார்.
அப்பா-மகன்(தேவெகெளடா-குமாரசாமி)கட்சியாக மாறிவிட்ட மஜதவை அழிப்பதே என் அரசியல் பயணம் என்று 2005-இல் சித்தராமையா கூறியிருந்ததை மஜதவினர் மறக்கவே இல்லை. மேலும் முதல்வராக இருந்தகாலத்தில் மஜதவுக்கும் குமாரசாமிக்கும் சித்தராமையா கொடுத்த தொந்தரவை தேவெ கெளடாவும் மறக்கவில்லை. 2018-இல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சாமுண்டீஸ்வரி தொகுதியில் சித்தராமையாவை படுமோசமாக தோற்கடித்தது மஜத.
முதல்வராக பதவி வகித்த தன்னை சாதாரண ஆளை நிறுத்தி தோற்கடித்ததை சித்தராமையாவால் மறக்கமுடியாமல் தவித்துவருகிறார். கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தபோது, குமாரசாமி முதல்வராக காங்கிரஸ் தாமாக முன்வந்து ஆதரவு அளித்ததை சித்தராமையா ரசிக்கவில்லை. எனினும், தன்னை முதல்வராக்கி அழகுபார்த்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் விருப்பத்திற்கு இணங்க மஜதவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்ததை சித்தராமையா ஆதரித்தார்.
மேலும் மக்களவைத் தேர்தலிலும் இது தொடர்வதை விருப்பமில்லாமல் ஏற்றுக்கொண்டார். மக்களவைத் தேர்தலில் மஜத-காங்கிரஸ் கூட்டணி 18-க்கும்மேற்பட்ட இடங்களில் வெல்லாவிட்டால், மாநிலத்தில் நடக்கும் கூட்டணி அரசு கவிழும் என்பது அனைவருக்கும் தெரியும். அது நடந்துவிடுமோ என்ற அச்சம் மஜதவையும் தேவெ கெளடாவை ஆட்கொண்டிருந்தாலும், சித்தராமையா மீதான கோபம் தணிந்தபாடில்லை. அதேபோல, மஜத, தேவெகெளடா, குமாரசாமி மீதான கோபம் சித்தராமையாவிடம் குறைந்தபாடில்லை.
கூட்டணி அரசு நடத்தினாலும் முதல்வர் குமாரசாமியை தர்மசங்கடத்தில் ஆழ்த்தும் வேலைகளுக்கு தனது ஆதரவாளர்களை கொம்புசீவும் வேலையை சித்தராமையா செய்தவண்ணம் உள்ளார். தேவெகெளடாவுக்கும் சித்தராமையாவுக்கும் இடையே தகித்துக் கொண்டிருக்கும் அரசியல் பகைமை, அடிமட்டம் வரை பரவியுள்ளதால் மக்களவைத் தேர்தலில் மஜத-காங்கிரஸ் கூட்டணி கட்சிகளிடையே அரசியல் தீப்பொறி தெறித்தவண்ணம் உள்ளன.
மண்டியா, ஹாசன், தும்கூரு தொகுதிகள் உள்பட மஜத போட்டியிடும் 8 தொகுதிகளிலும் காங்கிரஸ் தொண்டர்கள், தலைவர்கள் மஜதவுக்கு எதிராகவும்; மைசூரு போன்ற தங்கள் கட்சி ஆதிக்கம் செலுத்தும் தொகுதிகளில் காங்கிரஸுக்கு எதிராக மஜதவினர் உள்ளடி வேலைகளில் பகிரங்கமாக ஈடுபட்டுவருகிறார்கள்.
இது மேல்மட்டத்தில் இருக்கும் தலைவர்களை வேதனையடைய செய்துள்ளது. காங்கிரஸ் மீதேறி 8-இல் 5 தொகுதிகளைக் கைப்பற்ற துடிக்கும் மஜதவுக்கு இது தடைக்கல்லாக உள்ளது. அதேபோல, தனது பெயரன்கள் நிற்கும் மண்டியா, ஹாசன், தான் நிற்கும் தும்கூரு தொகுதியில் காங்கிரஸ் ஒத்துழைக்காவிட்டால் நிலைமை குறித்த அச்சம் எச்.டி.தேவெகெளடாவை பீடித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியை தனது அரசியல் சாதுர்யத்தால் ஆட்டிப்படைத்துவரும் சித்தராமையா, தனது ஆதரவாளர்களை மறைமுகமாக ஏவிவிட்டு மஜதவுக்கு எதிரான வேலைகளில் ஈடுபடுவதாக மஜத கருதுகிறது. இதனால் அதிருப்தி அடைந்துள்ள முதல்வர் குமாரசாமி, சித்தராமையாவை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.
அதன்காரணமாகவே, தனது மனைவி அனிதாகுமாரசாமியை சித்தராமையாவிடம் அனுப்பி சமாதானம் பேசியிருக்கிறார் குமாரசாமி. குமாரசாமியின் மகன் நிகிலை ஆதரிப்பதாக வாய்மொழியாககூறிவரும்சித்தராமையா, அவரது வேட்புமனுவின் போது செல்லாமல் தட்டிக்கழித்துவிட்டார். இதனிடையே, ஹாசன் தொகுதியில் போட்டியிடும் குமாரசாமியின் அண்ணன் ரேவண்ணாவின் மகன் பிரஜ்வலை சித்தராமையா ஆதரிப்பதும் குமாரசாமியை சீண்டியுள்ளது.
மஜத கேட்ட மைசூரு தொகுதியையும் பிடிவாதமாக சித்தராமையா விட்டுக்கொடுக்காததும் தேவெ கெளடாவுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணி கட்சிகளுக்கு இடையே நிலவும் பல்வேறு பிரச்னைகளை சித்தராமையா தீர்த்துவைக்காமல் இருப்பது மஜதவினரை சோர்வடைய செய்துள்ளது.
தேவெகெளடா மற்றும் சித்தராமையா இடையே நிலவும் அரசியல்பகைமை இருகட்சிகளின் கூட்டணியை சிதைத்துவருவதால், மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு சாதகமாக அமையும் என்று மஜதவினரும், காங்கிரசாரும் ஒப்புக்கொள்கிறார்கள். இதை முழுமையாக ஏற்கமறுக்கும் சித்தராமையா,"எந்தவிலை கொடுத்தாவது பிரதமர் மோடியை தோற்கடிக்க வேண்டுமென்பதே எங்கள் நோக்கம். கூட்டணி அமைத்திருப்பது காங்கிரஸ் தொண்டர்களுக்கு உடன்பாடில்லை என்பதை ஏற்றுக்கொள்கிறேன். எனினும், கூட்டணி தர்மத்தை கடைப்பிடிக்க வேண்டும். தனிப்பட்டமுரண்பாடுகள், அரசியல்பகைமைகளை ஓரமாக ஒதுக்கிவைத்துவிட்டு தேர்தல் பணியாற்றுவோம்' என்கிறார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...